வியாழன், 15 அக்டோபர், 2020

முரளி முற்றிலும் நம்பிக்கை இழந்து செய்வதறியாது அவமானப்பட்டு நின்றார். flashback

Don Ashok -Ashok.R : · ரோஹித் தாமோதரன் என்கிற சென்னையைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத கிரிக்கெட் பிளேயர் ஒருவர் 2015ல் இலங்கை கிரிக்கெட்

கிளப்களில் ஒன்றான கல்லி கிளப்பில் விளையாடப் போய்விட்டார். காரணம், நன்றாக விளையாடும் அவரை விட்டுவிட்டு பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஒரு பார்ப்பன பிளேயரை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தேர்வு செய்ததால். இப்படி எத்தனையோ ஆயிரம் வீரர்களின் கனவுகள் பூணூலின்மையால் தமிழ்நாட்டில் கலைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் ஜீவா எனும் படத்தில் கூட பார்த்தீர்கள். நிற்க. 1996 உலகக்கோப்பை பார்த்தவர்களுக்கு இலங்கை அணி கேப்டன் அர்ஜூனா ரணதுங்காவை நன்றாக நினைவிருக்கும்.
1999ல் ஆஸ்திரேலியாவில் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் மேட்சிலும் அவர்தான் கேப்டன். அதேநேரம், ஏற்கனவே தன்மேல் அம்பயர்கள் இருவரால் சுமத்தப்பட்ட "பந்தை எறிகிறார்" என்ற பழியில் இருந்து மீண்டு முத்தையா முரளீதரன் ஃபார்முக்கு வந்திருந்த காலம் அது. உடலெங்கும் பல கருவிகளை மாட்டி, அறிவியல் சோதனைகள் பலவற்றுக்கு தன்னை உட்படுத்தி, தன்னை நிரூபித்துவிட்டு மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார். அவ்வளவு அவமானங்களைத் தாண்டி அவர் மீண்டு வந்ததே பெரிய விஷயம். இந்த மேட்சிலும் மீண்டும் அதே அம்பயர்களால் அதே பிரச்சினை வெடித்தது. முரளிதரன் பந்துவீச, 'No Ball' என்றார்கள் அம்பயர்கள். முரளி முற்றிலும் நம்பிக்கை இழந்து செய்வதறியாது அவமானப்பட்டு நின்றார்.
ரணதுங்கா நேராக அம்பயரிடம் வந்தார். நம் ஊரில் எல்லாம் பஞ்சாயத்து நடக்குமே, அதுபோல் கைநீட்டிப் பேசி அம்பயர்களைக் கடிந்துகொண்டார். இன்னொருபுறம் இலங்கை வீரர்கள் எல்லாம் முரளிக்கு அருகில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்பயர்களுடன் வாதம் செய்த ரணதுங்கா இது சரிப்பட்டுவராது எனத் தெரிந்தவுடன் நேராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு், கிரவுண்டில் இருந்த பிளேயர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. எல்லோருமே ஆப்ஃ ஸ்பின்னர் முரளியை லெக்ஸ்பின் போடவைத்து பிரச்சினையை முடிப்பார் ரணதுங்கா என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த ஒரு பிளேயருக்காக ஒட்டுமொத்த அணியைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார் ரணதுங்கா. பின்னர் அணியின் மேனேஜர் இலங்கைக்கு தொலைபேசி, ரணதுங்காவை சமாதானம் செய்து ஆட வைத்தார்கள். அந்த மேட்சில் முரளியை ஒதுக்காமல் மீதி ஓவர்களையிம் வீசவைத்தார் ரணதுங்கா. ICC கொஞ்சம் கோபப்பட்டிருந்தால் முரளி கரியர் மட்டுமல்ல, ரணதுங்கா கரியரும் காலி. ஆனால் முரளி என்ற ஸ்பின்னருக்காக ஒரு கேப்டன், ஒரு அணி துணை நின்றார்கள். அன்று மட்டுமல்ல, இதுபோன்ற பல சம்பவங்களில். அதனால்தான் அவர் எல்லா சோதனைகளையும் தாண்டி தன்னம்பிக்கை இழக்காமல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போது முதல் பத்தியைப் படித்துப்பாருங்கள். முரளியின் தாத்தா தமிழ்நாட்டிலுள்ள திருச்சியைச் சேர்ந்தவர்தான். இலங்கைக்கு தேயிலை வேலைக்கு போய் மீண்டும் இங்கே வந்து செட்டில் ஆனவர்கள். முரளியின் குடும்பம் இலங்கையில் தங்கிவிட்டது. ஒருவேளை முரளி குடும்பமும் தமிழ்நாடு வந்து, அவர் இங்கேயே படித்து வளர்ந்து கிரிக்கெட் ஆடியிருந்தால் அவர் தோளையும் தடவிப் பார்த்து எப்போதோ விரட்டியிருப்பார்கள்!!! ரஞ்சி கூட விளையாடிருக்க மாட்டார்! யார் கண்டார்? ரோஹித் தாமோதரன் போல இலங்கைக்கு போய் ஏதோ ஒரு கிளப்பில் விளையாண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை. அதீத கற்பனைதான். ஆனால் உண்மைதானே?
சரி விஷயத்துக்கு வருவோம். முரளி தன்னை முதலில் ஒரு இலங்கைக்காரர், பிறகுதான் தமிழர் என ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது அப்பட்டமான விஸ்வாசம். பிற எல்லா கிரிக்கெட் பிளேயர்களைவிடவும் பெரிய பிரச்சினைகளை சோதனைகளை முரளி சந்தித்தார். அவர் அணியும் நாடும் துணை நின்றது. இல்லையென்றால் இன்று காணாமல் போயிருப்பார். இதற்கான விஸ்வாசத்தை சுயநலம் என்றுகூட நாம் சொல்லலாம். ஆனால் அவர் சாதாரண மனிதர் தானே. அவர் என்ன ஈழப் போராளியாக இருந்து துரோகி ஆனாரா? அல்லது ஈழப்போராளிகள் முதுகில் குத்தினாரா? அல்லது தமிழர்கள் நம்பிய தேசியத் தலைவரா?
இன்னும் சொல்லப்போனால் முரளியை பிரபாகரன் கூட தமிழர் என்ற முறையில் பாராட்டியிருக்கிறார். ஒரு விளையாட்டு வீரரை, எல்லோரையும் போல தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு விஸ்வாசம் பாராட்டுகிறவரை 'தமிழ்துரோகி' என்றெல்லாம் சிலர் அழைப்பது நகைச்சுவையாக இருக்கிறது.
நாம்தமிழர் கட்சியில் வருடாவருடம் "பெருந்தமிழர் காளிமுத்துவுக்கு வீரவணக்கம்" என போஸ்டர் அடிப்பார்கள். இந்த காளிமுத்து யார்? பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்கிற ஜெயலலிதாவின் தீர்மானத்தை சபாநாயகராக இருந்து நிறைவேற்றியவர். சீமானின் மாமனார் என்பதாலேயே அவர் பெருந்தமிழராம். போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத முரளிதரன் துரோகியாம்? நல்ல கதையாக இருக்கிறதல்லவா?
சரி. அந்தக் காமடியை விடுங்கள். இன்று தமிழ்நாடே கூறுபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குத்தான் வேலை என்ற சட்டத்தை மாற்றி வட இந்தியர்களும் வேலைக்கு சேரலாம் என சட்டம் போட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று அதை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என மாற்றியிருக்கிறார் ஈ.பி.எஸ். அதாவது தமிழர்களின் கிணற்றைத் திருடிவிட்டு, தமிழனாய் இருந்தால் ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கலாம் என அறிவித்துள்ளது அதிமுக. இது ஒரு சாம்பிள். இதுபோல் நீட், GST, புதியகல்வி கொள்கை அனுமதிப்பு என லட்சம் சொல்லலாம்.
ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் தமிழகத்திற்கும் தமிழர்க்கும் (அதாவது பாவப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழனுக்கு) பச்சைத் துரோகம் இழைத்திருக்கிறது அதிமுக. 50 ஆண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடகு வைத்திருக்கிறது. இதோ இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தையும் RSS அடகு கடையை நோக்கி எடுத்துப்போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ விளையாட்டு வீரர் முரளியை தமிழின துரோகி என அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன், ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் எனும் இரு தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்துகொண்டிருக்கிற துரோகத்தில் எத்தனை சதவீதத்தை முரளி என்ற ஆஃப் ஸ்பின்னர் செய்துவிட்டார்? இன்னும் எத்தனை நாள் எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனத் தெரியாமல் இப்படி கையில் கிடைக்கும் இளிச்சவாயர்களை அடித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
ஈழப்பிரச்சினையில் போயும் போயும் முரளியா எதிரி? ஈழப்போர் என்ன லார்ட்ஸ் மைதானத்திலா நடந்தது? போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் எனச் சொன்ன ஜெயலலிதாவுக்கும், ஐநாவில் இலங்கைக்கு துணையாய் நின்ற காஸ்ட்ரோவின் கியூபாவிற்கும் துரோகி முத்திரை குத்திவிட்டீர்களா? அட ராஜபக்சேவின் ஒரு முடியையாவது நம்மால் பிடுங்க முடிந்ததா?
விஜய்சேதுபதி என்ன கர்ணா, சரத் ஃபொன்சேகா, ராஜபக்சே வாழ்க்கை வரலாற்றிலா நடிக்கிறார்? 800 விக்கெட்டுகள் எடுத்து உலகப்புகழ் பெற்ற, போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார். இது அவ்வளவு பெரிய குற்றமா? சும்மா ஏப்ப சாப்பையாக யாராவது கிடைத்தால் அட்வைஸ் செய்தே அடிப்பதுதான் வீரமா?
நேற்று தனிஷ்க் விளம்பரத்தை நீக்கச் சொல்லி சங்கிகள் பிரச்சினை செய்து அதை நீக்கவைத்த செய்தியைப் படித்து புலம்பிக் கொண்டிருந்தேன். வந்து பார்த்தால் நம் ஆட்களே பலர் விஜய் சேதுபதியை "அதில் நடிக்காதீங்க தம்பி. சொல்றதை புரிஞ்சிக்கங்க," என அன்பு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப்பற்றும், மனிதாபிமானமும் உள்ள வெகுசில நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. அவருக்கும் துரோகி முத்திரை குத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அவர் இதற்குப் பணிந்து நடிக்காமல் கூட போகக்கூடும். அதனால் நமக்கு ஆவதென்ன? "பாத்தியா நிப்பாட்டிட்டோம்" என்கிற அற்பச் சுயசொறிதலைத் தவிர நமக்கு கிடைக்கப் போவதென்ன? உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. இப்படி யார் எதிரி, யார் நண்பன் எனத் தெரியாததால்தான் வரி கட்டாதவன், வாடகை கொடுக்காதவன் எல்லாம் சிஸ்டம் சரி இல்லை என்கிறான். அதை நம்பவும் நாலு பேர் அலைகிறான்.
யார் என்ன ட்ரெஸ் போடவேண்டும், யார் என்ன விளம்பரம் நடிக்கவேண்டும், யார் என்ன என்ன சினிமா நடிக்கலாம், யார் இந்துவிரோதி, யார் தேசவிரோதி, யார் பாகிஸ்தானுக்கு போகவேண்டும், யார் சாகவேண்டும், யார் வாழவேண்டும், என வரையறுப்பதும் கூச்சலிடுவதும் வலதுசாரிகளின் வேலை அல்லவா? அவர்களை இரவுபகலாக எதிர்க்கும் நாம் அதைச் செய்யலாமா?
குறிபார்த்து கல் அடிக்கத் தெரியாதவன் போகிறவருகிறவன் மேலெல்லாம் கல் அடித்ததைப் போலத்தான் ஈழப்பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. இனியாவது இந்த வேடிக்கையை, வினோதத்தை, அவல நகைச்சுவையை நிறுத்துங்கள். இது தமிழ்நாட்டுக்கும், அது வளர்த்தெடுத்த கருத்துரிமைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் எள்ளளவும் பெருமை சேர்க்காது. தூற்றுவோர் எனைத் தூற்றட்டும். ஆனால் இதைச் சொல்லாமல் கடந்துபோக் முடியவில்லை.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக