வியாழன், 15 அக்டோபர், 2020

கை பெருவிரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டால் எய்ட்ஸ் வராது? டான் அசோக்

டான் அசோக் : கேள்வி: ஹீலர் பாஸ்கர், செந்தமிழன் போன்றவர்கள் பேசுவதை ஒருநிமிடம் கூட கேட்கமுடியவில்லை. அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. இந்த அபத்தத்தை எப்படி மக்கள் நம்புகிறார்கள்?

பதில்: மக்களின் உளவியல் மிகவும் சாதாரணமானது. கை பெருவிரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டால் எய்ட்ஸ் வராது எனச் சொன்னால் நிறைய பேர் நம்பி அப்படியே செய்வார்கள். ஏனெனில் ஆணுறையை மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டுவதை விடவும் கட்டைவிரலில் மாட்டுவது எளிது.
மக்கள் பின்பற்றுவதற்கு கடினமான சரியான உண்மையைவிடவும், பின்பற்ற அதிக உழைப்பு தேவைப்படாத எளிமையான பொய்யை நம்பும் மனநிலை உடையவர்கள். ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக அதைவிட கடினமான விஷயங்களை முன்வைத்தால் ஒருபயல் பின்பற்ற மாட்டான். அதனால்தான் இந்த ஹீலர்கள் உயிர்வாங்கும் பெரிய நோய்களுக்கு கூட மிக மிக எளிமையான தீர்வுகளாக கொடுப்பார்கள். கேன்சர் என்றால் கூட காலேல ரெண்டு ஸ்பூன் பூண்டை மெனறு தின்னுங்கள் என்பார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் உடற்கூறு, மருத்துவம் பற்றிய மக்களின் அறியாமை. மூடநம்பிக்கை ஒழிப்பு போராளியும், மனநல மருத்துவருமான டாக்டர் ஆபிரகாம்கோவூரின் case study ஒன்று உண்டு. ஒரே ஒரு மொழி மட்டுமே பேசத்தெரிந்த சிறுமி ஒருத்தி திடீரென ஒருநாள் காலையில் ஆங்கிலம், இந்தி, அரபி உள்ளிட்ட பத்து மொழிகளில் சரளமாக பேசத்துவங்கினாள். சுற்றி இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவள் மொழிப்புலமையை நம்பத்துவங்கி அவளுக்கு அபூர்வ சக்தி வந்துவிட்டதாக நம்பினார்கள்.
டாக்டர் கோவூர் அவளை பரிசீலித்தார். அரபி, இந்தி பேசும்போது அவரும் வியந்தார். பின்னர் அவள் ஆங்கிலம் பேசும்போது அவளுக்கிருப்பது அபூர்வ சக்தி அல்ல மனநோய் என கண்டுகொண்டார். ஏனெனில் அவள் ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையுமே கொஞ்ச கொஞ்ச வார்த்தைகளை தெரிந்துகொண்டு அர்த்தமே இல்லாமல் தப்புந்தவறுமாக, அதே நேரத்தில் சரளமாக பேசியிருக்கிறாள். அவள் பேசிய மொழிகள் அவளைச் சுற்றி இருந்த யாருக்குமே தெரியாதென்பதால் அவளுக்கு வந்திருப்பது அபூர்வ சக்தி என வியந்தார்கள். ஆங்கிலம் தெரிந்த டாக்டர் அவள் ஆங்கிலம் பேசும்போது உண்மையைக் கண்டுகொண்டார்.
அப்படித்தான் இந்த ஹீலர்களும், செந்தமிழன் வகையறாக்களும் பேசும் உடற்கூறும், மருத்துவமும். பொதுமக்கள் அவர்கள் சரளமாக பேசுவதைக் கேட்டு வியப்பார்கள். இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என நம்புவார்கள். அதாவது அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவளைச் சுற்றி இருந்தவர்கள் நம்பியதைப் போல. ஆனால் உண்மையான மனித உடலை அறுத்துப் பார்த்து படித்த டாக்டர்களுக்கு செம்ம கடுப்பாக, கோபமாக இருக்கும்.
பொதுமக்கள் தங்கள் அறிவை, அதாவது யாரை நம்பவேண்டும் என்கிற பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் கொத்துக் கொத்தாக தாங்களும் மடிந்து, தங்கள் குழந்தைகளும் மடிவதைக் காணும் அவல நிலைக்கு உள்ளாகுவதையன்றி வேறு நிலை ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக