புதன், 14 அக்டோபர், 2020

சந்திரிகா,ரணில், பிரபாகரன்-எதிராளியை குறைத்து மதிப்பிட்டு ஏமாந்தவர்கள்! எல்லோரையும் முட்டாளாக்கி வெற்றி பெற்றவர் மஹிந்த ராஜபக்சதான்! Flashback

Mano Ganesan - மனோ
: · ரணிலின் சமாதானமும், சந்திரிகாவின் சமாதானமும்> 2003 ஆண்டில் பிரதமர் ரணிலின், ஆட்சியை பலவீனப்படுத்த ஜனாதிபதி சந்திரிகா, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகள் சிலவற்றை பறித்து எடுத்தார். அப்போது பிரதமர் ரணில் அமெரிக்கா போயிருந்தார். அவ்வேளையில் கொழும்பு அரசியல் சூடாக இருந்தது. ரணில்  தலைமையிலான எமது அரசின் முக்கியமான அமைச்சுக்களை சந்திரிகா அடாத்தாக பறித்துக்கொண்டதனால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. விமல் வீரவன்ச தலைமையில் ஜேவீபி சமாதானத்திற்கு எதிரான கடும் யுத்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. சந்திரிகாவின் கட்சிக்குள்ளேயே இருந்த மஹிந்த ராஜபக்ச, சந்திரிகாவை வீழ்த்தி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று, இரகசியமாக ஜேவீபியுடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். இவர்களின் இந்த கயிற்றை சாப்பிட்டுதான் சந்திரிகா ரணில் ஆட்சியின் மூன்று முக்கிய அமைச்சுக்களை பிடுங்கினார். இதன் தொடர்ச்சியாக தான் இன்னும் சில மாதங்களுக்கு பிறகு தனது ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்தார்.
பின்நாட்களில் பலமுறை என்னை சந்தித்த பொழுது, கடைசியாக கடந்த வருடம் கூட, தான் அந்நேரத்திலே விமல் வீரவன்சவின் கயிற்றை சாப்பிட்டு முட்டாள்தனமாக ரணிலின் ஆட்சியை கவிழ்த்து தவறு செய்து விட்டதாக சந்திரிகா ஒப்புக்கொண்டார். இல்லாவிட்டால் அடுத்து வரும் தேர்தல்களில் மகிந்த ஆட்சிக்கு வரும் சூழல் நாட்டிலே உருவாகி இருக்காது என்றும் சொன்னார்.
அதைவிட சுவாரசியம் என்னவென்றால் சந்திரிகாவின் சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க ஒரு முறை எனக்கு முன்னாலேயே ஒரு பகிரங்க இடத்தில் இந்த காரணத்தை சொல்லி சந்திரிகாவை திட்டி தீர்த்தார்.
இது நடந்தது அமெரிக்க தூதரகத்தின் ஒரு இரவு விருந்தின் போதாகும்.
அப்போது ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி நடக்கிறது. நானும், சந்திரிகாவும், சுனேத்ராவும், பாக்கியசோதி சரவணமுத்துவும் உரையாடிக்கொண்டு இருந்தோம்.
சந்திரிகா தான் ஜனாதிபதியாக இருந்த பொழுது செய்த காரியங்களை பெரும் எடுப்பில் எங்களுக்கு எடுத்துக்கூறிக்கொண்டு இருந்தார். அந்த இடத்தில் எங்களுடன் அமைதியாக இருந்த சுனேத்ரா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார்.
"சும்மா இரு. நீதான் இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு காரணம். ரணிலை ஒழுங்காக சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க விட்டிருந்தால் இந்நேரம் நாட்டில் சமாதானம் வந்திருக்கும். அல்லது பெரும் போரழிவு இல்லாமலே, புலிகள் இல்லாமல் போயிருப்பார்கள். எப்படியும் மஹிந்த வந்திருக்க மாட்டார். அந்த முட்டாள் விமலின் கயிற்றை சாப்பிட்டு முட்டாள் தனமாக நாட்டை அழித்தவர் இவர்தான்." என்று சந்திரிகாவை சுட்டிக்காட்டி உரக்க கோபமாக சொன்னார்.
அதுவரை சத்தமாக சிரித்து பேசிக்கொண்டிருந்த சந்திரிக்காவின் முகத்தில் அசடு வழிந்தது.
“நான் சமாதானத்தை கொண்டு வர 2000ம் வருடத்தில் தீர்வு பொதி கொண்டு வந்த போது, ரணில் பாராளுமன்றத்தில் யூஎன்பி எம்பிக்களை வைத்து சட்டமூலத்தை தீவைத்து கொளுத்தினாரே? மறந்து விட்டதா?” என்று திருப்பி கேட்டு விட்டு சந்திரிக்கா அதன்பிறகு கப்சிப் ஆகிவிட்டார்.
“ரணிலும், நீயும், ஒன்றுதான். நீங்கள் கொண்டு வந்தால்தான் சமாதானம். வேறு எவரும் சமாதானத்தை கொண்டு வந்து பெயர் வாங்கி விடக்கூடாது என ஒருவருக்கொருவர் சண்டை போட்டு, பொறாமை பட்டு, இன்று ராஜபக்சவை கொண்டு வந்து விட்டீர்கள்” என தொடர்ந்து ஆங்கிலத்தில் சுனேத்ரா திட்டிக்கொண்டு இருந்தார்.
பக்கத்தில் இருந்த பாக்கியசோதி சிரித்தபடி என்னை பார்த்தார். நான் அவரை பார்த்தேன். என்னைவிட பாக்கியசோதி சந்திரிக்காவிற்கும், சுனேத்ராவிற்கும் நெருக்கமானவர். சுனேத்ராவின் கூற்றை ஆமோதிப்பதாக தான் பாக்கியசோதியின் முகபாவனை இருந்தது.
ரணிலை தோற்கடிக்க, வடகிழக்கிலே பகிஸ்கரிப்பை நடத்தி மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற செய்தது பிரபாகரன். இது ஒன்று தான் ரணில் தோற்க அல்லது மஹிந்த வெற்றிபெற காரணம் என நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆஹா.., இதற்கு இன்னொரு "சந்திரிக்கா டைமென்ஷன்" இருக்கின்றதை கவனிக்கவில்லையே என்று நான் சிரித்தபடி நினைத்துக்கொண்டேன்..
அதே வேளை சுனேத்ராவின் கூற்றிலே ஒரு விஷயம் எனக்கு புரிந்தது."சமாதானம் வந்திருக்கும் அல்லது போரழிவு இல்லாமல் புலிகள் அழிந்திருப்பார்கள்" என்று அவர் சொன்னது ஞாபகம் வந்தது.
அன்று, புலிகள் ரணிலை தோற்கடிப்பதற்கு கூறிய ஒரு காரணத்துடன் இது ஒத்துப்போகிறது. சர்வதேச வலையொன்றை பின்னி, சமாதான பொறியொன்றை வைத்து தங்களை ரணில் அழிக்க போகின்றார், என புலிகள் சொன்னார்கள். ஆகவேதான் ரணிலுக்கு எதிரான பகிஸ்கரிப்பு. அது புலிகளின் தர்க்கம்.
மீண்டும் விட்ட இடத்தில் இருந்து வருகிறேன்..
ரணிலின் அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்த சூடான சூழ்நிலையில் தான் ரணில் நாடு திரும்பினார். வழமையாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பிற்கு அதி வேக சாலை இல்லாத அந்த நேரத்தில் கூட அரை மணித்தியால நேரத்தில் வந்துவிடலாம்.
ஆனால் அன்று விமான நிலையத்தில் இருந்து அலரி மாளிகைக்கு வருவதற்கு ரணிலுக்கு எட்டு மணித்தியாலம் ஆனது.
வழியெங்கும் ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்கள், கூட்டம் கூட்டமாக ரணிலை வரவேற்றார்கள். நமது திட்டம் அப்படியே கூட்டமாக சென்று சந்திரிகாவின் வாசஸ்தலத்தை சுற்றிவளைத்து, அவர் பிடுங்கிய அமைச்சுக்களை மீண்டும் பெறுவதாகும்.
ஆனால் ரணில் அதை விரும்பவில்லை. பேசாமல் அலரி மாளிகைக்கு போய் இறங்கி, எங்களை பார்த்து கும்பிடு போட்டுவிட்டு, "வீட்டுக்கு போங்கள்" என்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டார்.
இது ரணிலின் ஜனநாயக கொள்கை என்று சிலர் வர்ணிப்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இது ரணிலின் கோழைத்தனம் என நினைக்கின்றேன்.
ஜனநாயகம் என்றால் வெறும் பாராளுமன்ற ஜனநாயகம் மட்டும் அல்ல. ஜனநாயக விரோதமான முறையிலே ஒரு அரசாங்கத்தின் அமைச்சுக்களை அடாத்தாக பிடுங்கி எடுத்த ஜனாதிபதிக்கெதிராக மக்களை அணிதிரட்டி சென்று போராடுவதும் ஜனநாயகம் தான். இந்த தெருப்போராட்டம் ரணிலுக்கு எப்போதும் ஒத்துவரவில்லை.
பின்னாளில் வேறு சில விமர்சகர்கள் சொன்னது போல, அன்று இருந்த மக்கள் எழுச்சியை பயன்படுத்தி சந்திரிகாவை சுற்றி வளைத்திருந்தால், ரணில் தனது ஆட்சியை ஸ்தீரப்படுத்தி இருக்கலாம். சந்திரிக்காவையும் திருத்தி எடுத்திருக்கலாம்.
அந்த சந்தர்ப்பத்தை ரணில் தவறவிட்டு விட்டார்.
“2000ம் வருடத்தில், நீலன் திருச்செல்வம் துணையுடன், தான் கொண்டு வந்த தீர்வு திட்ட காகிதங்களை, பாராளுமன்றத்தில் தீவைத்து எரித்து தமது எதிர்ப்பை ரணில் காட்டினார். அன்றைய அந்த சமாதான திட்டம் நிறைவேறி இருந்தால், தான் நோபல் பரிசு பெருமளவிற்கு உயர்ந்திருப்பேன். அப்படியானால், அடுத்து வரும் தேர்தலில் யூஎன்பி வேட்பாளராக தன்னால் வெல்ல முடியாது என்று ரணில் நினைத்தார். ஆகவேதான் தனது சமாதான திட்டத்தை ரணில் எதிர்த்தார்” என சந்திரிக்கா பலமுறை என்னிடம் புலம்பி உள்ளார்.
சந்திரிகாவின் 2000ம் வருட சமாதான திட்டத்தை அன்று புலிகளும் எதிர்த்தார்கள். அதனால் சபையில் சம்பந்தனும் எதிர்த்தார் அல்லது ஆதரவளிக்கவில்லை. சிங்கள தீவிரவாதிகளும் எதிர்த்தார்கள். எதிர்கட்சி அரசியல் செய்து ரணிலும் எரித்து எதிர்த்தார்.
ஆனாலும் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த பொழுது, ரணில் 2000ம் ஆண்டிலே தனது தீர்வு பொதியை எதிர்த்தார் என்பதையும் மறந்துவிட்டு, பிரதமர் ரணிலுடன் ஒத்து போகவே விரும்பியிருந்தார்.
ஆனால் ரணிலின் அமைச்சரவையில் இருந்த இரண்டு அமைச்சர்கள் சந்திரிகாவுடன் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே இருந்தனர். ஒருவர் ரவி கருணாநாயக்க.
ஜனாதிபதி சந்திரிகா அமைச்சரவை கூட்டங்களுக்கு வரும் பொழுது தனது கைப்பையிலே ஒலிப்பதிவு கருவியை கொண்டுவந்து அமைச்சரவை நடவடிக்கைகளை ஒலிப்பதிவு செய்கிறார் என ரவி கருணாநாயக்க சந்திரிகா மீது குற்றம் சாட்டியிருந்தார்.
ரவிக்கும், சந்திரிகாவுக்கும், ஸ்ரீமணி அத்துலத்முதலி தொடர்பில் பழைய கோபம் ஒன்று இருந்தது. யூஎன்பிக்கு வரமுன் ரவி அத்துலத்முதலியின் கட்சியிலேயே இருந்தார்.
சந்திரிகாவுக்கும்,ரணிலுக்கும் இப்படி முரண்பாடு முற்ற அதை பயன்படுத்தி விமல் வீரவன்ச சந்திரிக்காவை தன்வசப்படுத்திக்கொண்டார்.
ஆகவே சந்திரிகாவின் சமாதான திட்டத்தை, அன்று 2000ம் ஆண்டு ரணில் தீவைத்து ஒழித்தார். பிறகு, ரணிலின் சமாதான திட்டத்தை, 2004ம் ஆண்டில் ரணில் ஆட்சியை கலைத்து, 2005ம் ஆண்டு முதன்முதலில் மஹிந்த ஜனாதிபதியாகும் வரை கொண்டு வந்து விட்டு, சந்திரிகா ஒழித்தார்.
இரண்டு ஒழிப்பிலும் புலிகளுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.
கடைசியில் எல்லோருமாக சேர்ந்து பெரும் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கத்தை ராஜபக்சர்கள் தலைமையில் கொழும்பில் உருவாக்கிவிட்டனர்.
யோசித்து பார்த்தால்,இவற்றில் தப்பு கணக்குகளை போட்டு, தம் எதிராளியை குறைத்து மதிப்பிட்டு, ஏமாந்தவர்கள், சந்திரிகா,ரணில், பிரபாகரன் ஆகிய மூவருமே!
எல்லோரையும் முட்டாளாக்கி, காய் நகர்த்தி வெற்றி பெற்றவர் யார்? மஹிந்த ராஜபக்சதான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக