செவ்வாய், 13 அக்டோபர், 2020

பாஜகவில் சேர வேண்டும் என்று விடாப்பிடியாக விரும்பியது குஷ்புதான்.. ஆர்எஸ்எஸ் சம்மதிக்கவில்லை.

வேண்டா வெறுப்பு.. முதல் நாளே பாஜக கொடுத்த ஷாக்.. அழையா வீட்டுக்கு விருந்தாளியாக போன குஷ்பு?
Veerakumar  tamil.oneindia.com :  சென்னை: வேண்டா வெறுப்பாகத்தான், குஷ்பு பாஜகவில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்று பரபரப்பாக பேசுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில். முதலில் திமுகவில் இருந்து வெளியேறவும்.. இப்போது காங்கிரஸில், கோபித்துக் கொள்ளவும், குஷ்புவுக்கு கொள்கை சார்ந்த எந்த முரணும் கிடையாது. இரு கட்சிகளுமே அவரது கொள்கைகளுக்கு ரொம்பவே ஒத்துப் போகக்கூடிய கட்சிகள்தான். ஆனாலும் இரு கட்சிகளையும் அவர் பிரிந்து செல்ல காரணம், பதவி போன்ற விஷயங்களில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதுதானே தவிர, கொள்கையில், அக்கட்சிகள் சமரசம் செய்து கொண்டன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது கிடையாது. 
காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - 
காங்கிரசில் இருந்து விலகுவதற்கும் இதுதான் காரணம். தேசிய அளவில் பிரபலமாக அறியப்படும் குஷ்பு, மாநில கட்சிகளில் ஐக்கியமாவதை விரும்பவில்லை. 
ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்காக பேசி வந்தவர் குஷ்பு. எனவே மற்றொரு தேசிய கட்சியான பாஜகவில் சேர்ந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டார். இதை பாஜக தலைவர் முருகனுக்கு குஷ்பு தூதுவிட்டு கூறியதாக தெரிகிறது. முருகன் தீவிரம் முருகன் தீவிரம் பல துறைகளையும் சேர்ந்தவர்களை கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் முருகன். எனவே தானாகக் கனிந்து வரும் இப்படி ஒரு வாய்ப்பை நழுவவிட அவருக்கு மனது வரவில்லையாம். 
கடந்த வாரம் டெல்லி சென்ற முருகன் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்தார். அப்போது குஷ்புவை காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைப்பது தொடர்பாக முருகன் தகவல் தெரிவித்துள்ளார். 
 
இதை கேட்டு முதலில் பாஜக தலைமையில் உள்ளவர்கள் ஷாக் ஆகிவிட்டார்களாம். குறிப்பாக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளிடமிருந்து குஷ்புவை பாஜகவில் சேர்ப்பதற்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தேசிய ஊடகங்களிலும் தனது டுவிட்டர் பக்கத்திலும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தவர் குஷ்பு. சித்தாந்த ரீதியாக எதிர் துருவத்தில் இருப்பவராக காட்டிக்கொண்ட குஷ்புவை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வது, நம்மைத்தான் பலவீனமாக காட்டிவிடும் என்று, பாஜக மேலிடம் முருகனிடம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து, இந்த இணைப்புக்கு சம்மதிக்க முடியாது என்று தகவல் வந்ததாக கூறப்படுகிறது. 
 
இருப்பினும் முருகன் இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார். அதிமுக எப்படி, ராமராஜன், நளினி, செந்தில், குண்டு கல்யாணம் என்று நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து பிரச்சார களத்தில் பயன்படுத்தியதோ, அந்த பாணியை பயன்படுத்துவதில் பாஜக தலைவர் முருகன் நீண்ட காலமாகவே உறுதியாக இருக்கிறார். எனவே குஷ்பு ஒரு நட்சத்திரம் என்பதால் பிரச்சார நேரங்களில் மிகவும் பயன்படுவார் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் குஷ்பு பாஜகவில் இணைவதற்கு பல தலைவர்களும் சம்மதம் தெரிவிக்கவில்லை. 
 
மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் குஷ்புவை பாஜகவில் சேர்க்கக் கூடாது என்று தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் முருகன் உறுதியாக இருந்ததால் நட்டா ஓகே கூறிவிட்டார். இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜகவில் குஷ்பு இணையும் நிகழ்ச்சியில், ஜேபி நட்டா பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, கர்நாடகாவைச் சேர்ந்த, பாஜக தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி, முன்னிலையில்தான் பாஜகவில் சேர்ந்தார் குஷ்பு. அவர்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார், கட்சியின் உறுப்பினர் ஸ்லிப்பை குஷ்புவிடம் வழங்கினார். அப்போது அதே அலுவலகத்தின் முதல் தளத்தில்தான் நட்டா இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து குரூப் போட்டோ எடுக்கும்போதுதான் வந்தார். அதாவது நட்டா முன்னிலையில் குஷ்பு பாஜகவில் இணையவில்லை என்பது 'வரலாற்று பக்கங்களில்' பதிவு செய்யப்பட்டது. 
 
 நோஸ் கட்?     ஒருவகையில் குஷ்புக்கு நோஸ்கட் கொடுக்கப்பட்டதாகத்தான் இது பார்க்கப்படுகிறது. ஏனெனில் திமுகவில் கருணாநிதி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். பிறகு சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். இப்படி பெரிய தலைவர்கள் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது நட்டா முன்னிலையில் கூட இணைய முடியாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
 
வேண்டாவெறுப்பாக கட்சியில் அவரை சேர்த்ததன் வெளிப்பாடுதான் இது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன்மூலம் குஷ்பு எந்த இடத்தில் வைக்கப்படுவார் என்பதற்கான சமிக்ஞை பாஜக மேலிடத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறி வந்த பாஜக தொண்டர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் கட்சியில் சேர்த்தது போலவும் ஆயிற்று, மற்றொரு பக்கம், அவருக்கு நோஸ்கட் கொடுத்தது போலவும் ஆகிவிட்டது. பாஜகவில் சேர வேண்டும் என்று விடாப்பிடியாக விரும்பியது குஷ்புதான். அழையாத வீட்டுக்கு விருந்தாளியாக போனால் என்ன நடக்கும் என்பதை இந்த சம்பவம் காட்டி விட்டது என்று சிரிக்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். இது எப்படி இருக்கு என்றால், வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்தார்களாம் என்ற கதையாகத்தான், இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக