இதை மின்னம்பலத்தில் 27 ஆம் தேதி அரசியல்: ரஜினியின் சர்ச்சை அறிக்கை?என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த அறிக்கை பற்றி ரஜினியிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வெளியாகாத நிலையில், இது யார் மூலம் வெளியிடப்பட்டது என்பது பற்றியும் விசாரித்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி: தயாராகும் ரஜினி அறிக்கை என்ற தலைப்பில் வெளியிட்டோம் இப்போது வரை இதுகுறித்து ரஜினியிடம் இருந்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வராத நிலையில் இதுகுறித்து அரசியல், பத்திரிகை வட்டாரத்தினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ரஜினி மன்றத்தினரிடையே இந்த பரபரப்பு குறித்து விசாரித்தோம்.
ஒட்டுமொத்த சென்னைக்கே மன்றத் தலைவராக ஒரு காலத்தில் இருந்தவரும், தென்சென்னையில் தற்போது பொறுப்பு வகிக்கும் ராமதாசைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை விஜயதசமிக்கு முதல் நாள் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ராமதாஸோடு மிகவும் நெருக்கமானவர் ரஜினி. போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவரை ரஜினி சந்திக்கவில்லை. மாடியில் இருந்து இண்டர்காமில் பேசியிருக்கிறார்.
“உங்க பக்கத்துல ஒரு ஸ்டேட்மெண்ட் இருக்கு படிச்சுப் பாருங்க” என்று ரஜினி சொல்லியிருக்கிறார். வாட்ஸ் அப்பில் வலம் வந்துகொண்டிருக்கும் அறிக்கைதான் அது. அதை படித்துப் பார்த்து கண்கலங்கிவிட்ட ராமதாஸிடம், ‘என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டிருக்கிறார் ரஜினி. சில நிமிடங்கள் எதுவுமே சொல்லாமல் நின்ற ராமதாஸ், கண் கலங்கி, ‘உங்க அரசியலை விட உங்க உயிர்தான் தலைவா எங்களுக்கு முக்கியம்’ என்று சொல்லியிருக்கிறார்.
’நான் சீக்கிரமே இதப் பத்தி மாவட்டச் செயலாளர்கள் மீட்டிங் அரேஞ்ச் பண்றேன். அதுல சொல்றேன். நீங்க பத்திரமா இருங்க. வீட்ல எல்லாரையும் பாத்துக்கங்க.போயிட்டு வாங்க’என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார் ரஜினி. இந்தத் தகவலை அப்போதே தனது சக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார் ராமதாஸ். மேலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ரஜினி எப்போது கூட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகளிடையே ஏற்பட்டிருக்கிறது.
ஆக ரஜினி பெயரில் வெளியான இந்த அறிக்கை ரஜினியின் அறிக்கைதான் என்றும், ஆனபோதும் ரஜினி இன்னும் இதை அதிகார பூர்வமாக வெளியிடாததற்கு காரணம் அவருக்கு இன்னமும் சில அழுத்தங்கள் வந்துகொண்டிருப்பதால்தான் என்றும் சொல்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக