வியாழன், 29 அக்டோபர், 2020

அப்பாடா…! கலைந்தது ரஜினியின் அரசியல் மாயை!.. சாவித்திரி கண்ணன்

 

aramonline.in :உலகில் முப்பது ஆண்டுகளாக முடியாத ஒன்றை, முடித்துக் காட்டிவிடுவதாக நம்ப வைத்து மக்களை முட்டாளாக வைத்திருந்த ஒரு நபரும்,அப்படி ஏமாந்த ஒரு தேசமும் தமிழகமாகத் தான் இருக்க முடியும்! இந்த விவகாரத்தில் மக்களை மட்டுமல்ல தன்னைத் தானே ரஜினி ஏமாற்றிக் கொண்டார் என்றும் நான் சொல்வேன்!    தான் ஓடமுடியாத மண்குதிரை என்று அவருக்கே நன்றாக தெரியும்! ஆனால்,என் முதுகில் தமிழகத்தையே சுமந்து கரைசேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையை  மறை முகமாகத் திரைப்படங்களிலும், நேரடியாக ஊடகங்களிலும் அவர் தொடர்ச்சியாக கட்டமைத்து அதைக் கலைந்து விடாமல் காப்பாற்றியும் வந்தார். ஒரு வகையில் மக்களை காக்கவைத்துவிட்டு தனக்கான ஒரு வாழ்வை எந்த பதட்டமும் இல்லாமல் சுகமாக அவர் வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்!

எம்ஜிஆர் மறைவையடுத்து 1988,89 களிலேயே ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்குத் தலைமை தாங்க வருவாரா என்பது பற்றிய ஊகங்களைப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன! அப்போது ரஜினி ரசிகர் மன்றங்கள் வருங்கால முதல்வரே என்று ஒட்டிய போஸ்டர்களை நானே பார்த்துள்ளேன். இது தவறு செய்யாதீர்கள் என்று அவர் தன் ரசிகர்களுக்குச் சொல்லவில்லை! அதை மனதிற்குள் ரசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

அதனால் தான் அது போன்ற ஊகங்களுக்கு வலு கொடுக்கும் வண்ணம் 1993 ல் வெளியான உழைப்பாளி படத்தில், ‘’ நேற்று கூலி, இன்று நடிகன், நாளை என்னவென்று ஆண்டவனுக்குத் தான் தெரியும்’’ என்றார்.

கிட்டதட்ட அதே காலகட்டத்தில் திரைத்துறையினர் ஜெயலலிதாவிற்கு நடத்திய பாராட்டுவிழா ஒன்றில், ‘’ பலரும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண்டவா, எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலுக்குள்ள விட்டுடாதே என்று வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார்.

ஆனால், அத்துடன் அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தன் படங்களில், ‘’எப்போ  வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா, வரவேண்டிய நேரத்துல கண்டிப்பாக வருவேன்..’’ என்றெல்லாம் பேசி வந்தார்.

இப்படியாக ’வரமாட்டார்’ என்பதாகவும், ’’இல்லையில்லை வருவாருன்னு மாதிரி தான் தெரியுது’’ என்பது மாதிரியும் இரு வேறு தோற்றங்களைக் காட்டி வந்தார்! ஆகவே அவரே இரண்டுங் கெட்டானாக இருந்துள்ளார் என்று தான் தெரிகிறது.

1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் மக்களிடையே அதிமுக,திமுக இரண்டுமற்ற ஒரு கட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான ஒரு எண்ணவோட்டம் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்த கடுமையான அதிருப்தி மக்களிடம் இருந்தது. ஜெயலலிதா குறித்த ரஜினியின் ’’அவங்க ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனாலும்  தமிழ் நாட்டைக் காப்பாற்ற முடியாது’’ என்ற விமர்சனம் மக்களால் கொண்டாடப்பட்ட நேரம்!

அப்போது அதிமுக உறவு வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்திய மூப்பனார் ரஜினியை அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் அழைத்துச் சென்றார்.

நீங்கள் காங்கிரசில் சேர்ந்தாலோ அல்லது தனிக்கட்சி ஆரம்பித்தாலோ நான் அதிமுக  உறவைக் கைவிடத் தயாராக இருக்கிறேன். பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பிலும், உளவுத் துறையினர் வழியே நான் அறிந்து கொண்டதிலும் உங்களுக்கு தமிழக மக்களிடம் அபரி மிதமான  ஆதரவு இருக்கிறது எனத் தெரியவருகிறது. தமிழக காங்கிரசின் எதிர்காலமே உங்கள் பதிலில் தான் உள்ளது’’ என்றார். அந்த காலகட்டத்தில் ரஜினி சம்மதித்திருந்தால் அவரையே முதலமைச்சர்  வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் தயங்கியிருக்காது. ஆனால், ரஜினி மறுத்துவிட்டார். அந்த காலகட்டம் ரஜினியின் செல்வாக்கு மிக உச்சத்திலிருந்தது. பிறகு அது அவர் ஆர்வம் காட்டாததால் படிப்படியாகக் குறைந்துவிட்டது! இன்று அந்த செல்வாக்கில் பத்தில் ஒரு பங்காவது இருக்குமா என்பது கூட சந்தேகம் தான்!

ஆனாலும் அவரது அரசியல்பிரவேசம் தொடர்பான மாயைகளை அவர் தொடர்ந்து அனுமதித்தே வந்தார். திரைப்பாடல்களிலும் அந்த மாயையை பரப்பி வலு வூட்டினார்.  2011 ல் அவர் உடல் நிலை மிக பாதிப்பப்பட்டு மறுபிறவி எடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அப்போதே இந்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு அவர் முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டும். தற்போதைய அறிக்கையில், 2011-ம்  ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக தீவிரமாகப் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்” என்று சொல்லுகின்ற ரஜினி, 2017 டிசம்பரில் தான் அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவும்,234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிற்க வைக்கப் போவதாகவும் ஏன் அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த அறிவிப்பை நம்பி ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ தயாரிப்பு வேலைகளையும் செய்தனர்.அதற்குப் பிறகு கிட்டதட்ட மூன்றாண்டுகள் வரை சும்மா இருந்துவிட்டார். இந்த ஆண்டு மார்ச்சில் லீலா பேலஸில் மக்களிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற புரட்சி உருவானால் தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார். அதாவது, ’’வரமாட்டேன், என்னை மக்கள் ஏற்பார்களா என்பதில் எனக்கே ச்ந்தேகமாக உள்ளது’’ என்பதைத் தான் சொல்லமுடியாமல் மழுப்பலாக அறிவித்தார்! தற்போது கொரானா அச்சம் அவரது தயக்கத்திற்கு பொன்னான வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அதையும் கூட நேர்மையாக அறிவிக்கத் தயங்கி, அனாமதேயமாக ஒரு செய்தியைப் பரப்பிவிட்டு, ’’அதை நான் சொல்லவில்லை. ஆனால், அதில் சொல்லப்பட்டவை உண்மை தான்’’ என்கிறார்.

இது நாள் வரை தான் ஏற்படுத்தி வந்த எதிர்பார்ப்புகளை குறித்தோ, அவருக்காக தங்கள் நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் அர்ப்பணித்த தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன்…  உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் குறித்த எந்த குற்றவுணர்வுமின்றி, அந்த அறிக்கை மிக சாதுரியமாக, டிராமாடிக்காக எழுதப்பட்டிருக் கிறதை நாம் கவனிக்க வேண்டும்.

“ கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், “கொரோனாவிற்கு  ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

அதாவது, அவர் மீது இதை படிப்பவர்களுக்கு ஒரு இரக்கம் வெளிப்படும்படி  இதை தயாரித் தவருக்கு  தன்னை நம்பி ஏமாந்தவர்கள் மீது இரக்கம் காட்டவோ, மன்னிப்பு கோரவோ கூட மனமில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

’’எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்து தான் கவலை….’’   என்ன ஒரு பித்தலாட்டம்…! அப்படியானால், தன்னை மிக நம்பி இருக்கும் குறிப்பிட்ட சிலரையாவது நேரடியாக அழைத்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அல்லவா அவர் முதலில் இதை தெரிவித்திருக்க வேண்டும்!

முழுக்க,முழுக்க தனக்காகவே, தன்னுடைய சந்தோஷத்திற்காகவே தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து வாழ்ந்த மனிதர் தான் ரஜினிகாந்த்! அவரை ஒரு பொது மனிதராகக் கருதி, முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தேசம் தன் பொன்னான நேரத்தை அழித்துக் கொண்டது. ஊடக வர்த்தக சூதாடிகளும்,பொய்மையே வாழும் கலை என நம்பும் பலதரப்பட்ட மனிதர்களும் சூழ்ந்துள்ள ஒரு சமூகத்திற்கு ரஜினி தான் விடிவெள்ளியாகத் தெரியும்! மகாத்மா காந்தியே இங்கு மறுபிறவி எடுத்து வந்தாலும் அவரை போற்றிப் பயன்படுத்திக் கொள்ள மறுக்கும் நிலையில் தான் இருக்கிறது இன்றைய சமூகம்! இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால், ஒரு சமூகம் அதன் தகுதிக்கேற்ற தலைவனைத் தான் தேடமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக