ஞாயிறு, 11 அக்டோபர், 2020

குஷ்புவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு

குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
maalaimalar :சென்னை: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்புவை பற்றி மீண்டும் மீண்டும் பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. அதை குஷ்பு மறுத்தார். இருப்பினும் தொடர்ந்து அந்த தகவல் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது. குஷ்பு குடும்பத்தினர் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் குஷ்பு தேவையற்ற இந்த தகவல்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று மறுத்து விட்டார். அதே நேரம் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடசென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார்.

இதற்கிடையே டெல்லி சென்ற குஷ்பு அங்கு மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். இந்த சந்திப்பின்போது அகில இந்திய செயலாளர் கே.சி. வேணு கோபாலையும் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரசுக்கு விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், வசந்தகுமார் உள்பட 5 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அப்போதே பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று குறை கூறப்பட்டது.

இந்த நிலையில் எச்.வசந்தகுமார் மரணம் அடைந்ததால் செயல் தலைவர் பதவி காலியாக உள்ளது.

எனவே செயல்தலைவர் பதவி குஷ்புக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக