வெள்ளி, 2 அக்டோபர், 2020

ஹத்ராஸ்: திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளிய போலீஸ்!

minnambalam :ஹத்ராஸ் பெண் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உபியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க  எதிர்க்கட்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  ஹத்ராஸ் பெண் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற போது, போலீசார் தன்னை கீழே தள்ளி லத்தி ஜார்ஜ் செய்ததாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் பகுதியில்  மீடியாக்கள், வெளியாட்கள் யாரும்  செல்ல முடியாத வகையில்  போலீசார் சீல் வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு ஹத்ராஸில் 144 தடை இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் வயல்வெளிகளில் யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து பேட்டி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 200 போலீசார் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

மொத்த குடும்பமும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். எங்களை யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. செல்போன்களை வாங்கி அணைத்து வைத்துள்ளனர்.  என் மாமாவை போலீஸ் அதிகாரி ஒருவர் அடித்துவிட்டார். எப்படியாவது ஊடகங்களை அழைத்து வா. அவர்களிடம் பேச வேண்டும் என்று என்னை அனுப்பி வைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹத்ராஸ் நோக்கிச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெரக் ஓ பிரையன், பிரதிமா மொண்டல், முன்னாள் எம்.பி மமதா தாக்கூர் ஆகியோர் போலீசாரால் தடுத்து  நிறுத்தப்பட்டனர்.  ஹத்ராஸ் எல்லையிலிருந்து ஒரு கிமீ தூரத்துக்கு முன்னதாக இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட இணை ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனா தலைமையிலான போலீசார், 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி மறுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சென்று பார்த்து வர  பெண் தலைவர்களையாவது அனுமதியுங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அதிகாரிகள் தள்ளியதில் டெரக் ஓ பிரையன் கீழே விழுந்தார்.  பெண் தலைவர்களை போலீசார் தள்ளுவதை வீடியோக்களில் காண முடிந்தது.

” மாஸ்க் அணிந்துகொண்டு, கூட்டமாக அல்லாமல் தனித் தனியாக  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றித்தான் சென்றோம்.  அப்படியிருக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களான எங்களை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று  டெரக் ஓ பிரையன்  கேள்வி எழுப்பியுள்ளார்.  இதையடுத்து எம்.பி.க்கள் மூவரும் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

முன்னதாக, ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்கள் இருவர் உட்பட 200 பேர் மீது, ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக