வெள்ளி, 23 அக்டோபர், 2020

தீபாவளி .. தமிழகத்தில் இறப்போரை இகழ்ந்து பண்டிகையாகக் கொண்டாடும் மரபு சமீபத்தில்தான் விதைக்கப்பட்டது

எதிரியாகவே இருந்தாலும், அவர்களின் இறப்பைக் கொண்டாடுவது தமிழ்

மரபு அல்ல! மனித நேயமுள்ளவர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை!
Dhinakaran Chelliah : · தீபாவளி எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை முழுமையாகத் தெரியாமலேயே கொண்டாடுகிறவர்கள் நாம். இது வைதீகர்களின் பண்டிகை.எதிரியாகவே இருந்தாலும், அவர்களின் இறப்பைக் கொண்டாடும் மரபு தமிழ் மரபு அல்ல என்பதையும் மறந்துவிடலாகாது. இறப்போரை இகழ்ந்து அதைப் பண்டிகையாகக் கொண்டாடும் மரபு தமிழ் மண்ணில் சமீப காலங்களில்தான் விதைக்கப் பட்டது.    வதம் மற்றும் புராணங்கள் வர்ணிக்கும் தஸ்யூக்கள் தாசர்கள் சண்டாளர்கள் அரக்கர்கள் அசுரர்கள் ராட்சஷர்கள் நமது மூதாதையர்கள் என்பதை வேத மற்றும் புராண கதைகள் மூலம் புரிந்து கொள்ள இயலும். அசுர வதத்தை கொண்டாடுவதுதான் தீபாவளியின் நோக்கம் என்பதே புராண கதைகள் வெளிப்படுத்தும் உண்மை.கொல்லப்பட்ட நரகாசுரனின் வேண்டுதலின் படியே தீபாவளி கொண்டாடப்படுகிறதே என்பவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் நரகாசுரனின் வதம் மட்டுமல்ல பத்மாசுரன் முதல் மகிஷாசுரன், இரண்யகசிபு, இராவணன், மகாபலி போன்ற பல அசுரர்களின் இறப்பும் கொண்டாடப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 


இதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சியை புரிந்து கொள்ளுதல் அவசியம். மது அருந்தும் தேவர்களை உயர்வாகவும் அருந்தாத அசுரர்களை இழிவாக புராணங்கள் சித்தரிப்பதையும் சிந்திக்க வேண்டும். மகாபலி எனும் அசுரனைப் போற்றி அவனது பிரஜைகளாக தங்களைப் பாவிக்கும் மக்கள் இன்றும் நம் மத்தியில் கேரள மாநிலம் முழுதும் இருக்கிறார்கள்.இராவணனைக் கொண்டாடும் பழங்குடி மக்கள் இன்றும் பல மாநிலங்களில் இருக்கிறார்கள்.சமீபத்தில் இராவண வதத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் தெரிவித்ததை பலர் அறிந்திருக்கக்கூடும்.

அசுரர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் புராணக் கதைகள் நூற்றுக் கணக்கில் உண்டு.
இந்த அடிப்படையில் சொல்லப்படும் தீபாவளியின் மூன்று கதைகளில் ஒன்றை மட்டும் இங்கு பகிர்கிறேன்.
பிரம்மாவின் மகன் மரீசி மகரிஷி.
மரீசி மகரிஷிக்கும் கலை எனும் பெண்ணுக்கும் பிறந்தவர்கள் காசியபரும் பூர்ணிமாவும்.இந்த காசியபர் சப்த ரிஷிகளில் ஒருவராக புராணங்களில் விவரிக்கப் படுகிறார்.காசியப முனிவருக்கும் திதி எனும் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்தான் இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு எனும் அரக்கர்கள். இதே காசியப முனிவருக்கும் அதிதி எனும் பெண்ணுக்கும் பிறந்தவர்களே இந்திரன்,அக்னி,சூரியன் போன்ற தேவர்கள்.
வேத மத தொன்மங்களின் அடிப்படையில், அசுரர்கள் தேவர்கள் இருவரும் சுரர்களின் ஒன்று விட்ட உடன்பிறப்புக்கள் ஆவர். அந்த சுரர்களில் சுராபாணம் எனும் மதுவை அருந்துபவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர். சுராபாணம் அருந்தாதவர்களை அ “சுரர்கள்” அதாவது அசுரர்கள் என்று அழைத்தனர்.
இந்தக்காலத்தைப் பொறுத்தவரை குடி எனும் கெட்ட பழக்கம் இல்லாதவர்கள் அசுரர்கள்.
இந்த இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிதேவியை பாய் போல சுருட்டி பாதாளம் சென்று ஒளிந்து கொண்டானாம். எங்கே நின்று சுருட்டினான் என்பது தேவையில்லாத கேள்வி.
அவளை மீட்க, பன்றி வடிவெடுத்து, தன் பற்களால் பூமியை அகழ்ந்து சென்றார் விஷ்ணு.அவனை வதம் செய்த பின், பூமியை, தன் தெற்றுப் பல் நுனியில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.மீட்கப்பட்ட பின்பு பூமாதேவியின் கேள்விகளுக்கு வராக அவதாரக் கோலத்திலேயே விஷ்ணு அளித்த பதில்களின் தொகுப்பே வராகபுராணம்.இதே பூமாதேவியின் புதல்விதான் இராமயண ராமனை மணமுடிக்கும் சீதா தேவி.(தனது மகளையே விஷ்ணு, ராம அவதாரத்தில் திருமணம் செய்கிறார் என்ற கேள்வியும் தேவையில்லாதது).
பூமாதேவிக்கும், வராகருக்கும் ஏற்பட்ட இந்த ஸ்பரிசத்தில், பவுமன் பிறந்தான்(ஸ்பரிசத்தால் குழந்தை எப்படிப் பிறக்கும் என்ற விஞ்ஞான கேள்வியும் அர்த்தமில்லாதது).
பவுமன் என்றால், பூமியின் பிள்ளை என்று பொருள்.ஆனால், இவன் நடந்தால், அவ்விடத்தில் இருள் படியும் அளவுக்கு மிகவும் கறுப்பாக இருந்ததாக புராணம் வர்ணிக்கிறது.
விஷ்ணுவிற்கும் சத்யபாமாவின் அம்சமான பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் நரகாசுரன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அசுரவதத்தின் போது பிறந்ததால் அசுர சுபாவம் நரகாசுரனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், அசுர குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. இவன் தேவர்களுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்ததாக புராணத்தில் கூறப்படுகிறது. வழக்கம் போல தேவர்கள் சென்று மகா விஷ்ணுவிடம் முறையீடு செய்கிறார்கள், அதாவது விஷ்ணுவின் மகன் தங்களை வருத்துவதாக.
இதை அறிந்த மகாவிஷ்ணு தனது மகனைக் கொல்ல நினைத்தார். ஆனால் அவனோ தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாதபடி வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிடும் போது சத்யபாமாவையும் அழைத்துச் சென்றார்.நரகாசுரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார்(அந்தக் காலத்திலேயே நாடகம் கை கொடுத்துள்ளது ?).இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.
அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்டவர்களின் நினைவாக இந்த நாளில் இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக புராணம் முடிவடைகிறது. இதை கிருஷ்ண லீலை என்றும் சொல்வர். மகனை, பெற்றோர்களே வதம் செய்து கொல்வதுதான் நரகாசுரன் கதை.
தீபாவளிக்கு இன்னொரு கதையாக, ராமன் 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துத் திரும்புவதை மக்கள் ராவணன் உருவப் பொம்மையை எரித்துக் கொண்டாடுவதாகச சொல்கிறார்கள்.(Ravan Dhahan)
இந்தப் பண்டிகை ஆஸ்திரேலியாவில் ஆகப் பெரிய இந்தியப் பண்டிகையாக விஸ்தரிக்கப்பட்டு அந்தந்த மாநில அரசாங்கங்களின் பொருளுதவியோடு,அதாவது மக்களின் வரிப்பணத்தோடு
கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் இறப்பைக் கொண்டாடுபவர்கள் அல்ல,தீபாவளி நமது பண்டிகை அல்ல என்பதையும் வலுவாக அரசிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆங்காங்கே தனிப்பட்ட அமைப்புக்களோடு விரும்புகிறவர்கள் தீபாவளியை, ராம லீலாவைக் கொண்டாடுவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை, ஆனால் மக்களின் வரிப்பணமும் அரசு வளங்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுவதுதான் வேதனையளிக்கிறது. அசுரர்கள் தஸ்யூக்கள் தாசர்கள் எங்களது முன்னோர்கள் அவர்களது அழிவைக் கொண்டாடும் எந்தப் பண்டிகைகளையும் நாங்கள் வரவேற்கவில்லை என்பதை அரசு அமைப்புக்களிடம் எடுத்துக் கூறவேண்டியது நமது கடமை.
சில ஆஸ்திரேலிய நகரங்களில் தீபாவளி கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வாக இராவணன் உருவப் பொம்மை எரிப்பதை தொடங்கியிருப்பது வருந்தத்தக்கது.
நன்மைக்கு எதிராக தீமையை எரிப்பதாக தீபாவளி பண்டிகை அமைப்பாளர்கள் கட்டமைக்கிறார்கள்.அது உண்மையானால், ராமனின் உருவத்தை எரிப்பதே முறையாகும்!



  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக