புதன், 21 அக்டோபர், 2020

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

tamil.indianexpress.com P நடிகர் விஜயின் தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறியுள்ளார். சில ஆண்டுகளாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் நடித்த தலைவா படத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளால் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்பட்டுவருகிறது. நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தபோது, விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார். இதனால், விஜயைப் பற்றிய அரசியல் பேச்சுகள் அதிக அளவில் கிளம்பியது. ஆனால், விஜய், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் எதுவும் பேசவில்லை. இதனால், நடிகர் விஜய் அரசியலில் இருந்து பின்வாங்குகிறாரா என்றும் பேச்சுகள் எழுந்தன. இதனிடையே சிலர், விஜயின் தந்தை பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது.

இந்த நிலையில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று (அக்டோபர் 10) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் பாஜகவில் இணையவுள்ளதாக எழுப்பப்படும் கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும்போது மாறும். மக்கள் கூப்பிடும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களைக் கூப்பிடுவதை விட, மக்கள் ‘வா’ என்று கூப்பிடும் போது இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும்” என்று கூறினார்.

விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக