திங்கள், 5 அக்டோபர், 2020

25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி... அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் .. மத்திய சுகாதார மந்திரி தகவல்

thinathanthi :  புதுடெல்லி, உயிர்க்கொல்லியாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு முழுமூச்சுடன் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசியை கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவேக்சின், ஜைகோவ்-டி மற்றும் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு ஆகிய 3 தடுப்பூசிகளையும் மனிதர் களுக்கு செலுத்தி சோதிக் கும் மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும், கொரோனா தொற்றில் இருந்து நிரந்தரமாக எப்போது விடுதலை பெறலாம் என நாட்டு மக்கள் அனைவரும் தவிக்கின்றனர். முதலில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியபோது, இந்த தடுப்பூசியை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் பொதுப்பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கடந்த ஜூலை மாதம் முதல் வாரம் அறிவித்தார்.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக கண்டுபிடித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று அதன் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி வருகிற புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கடந்த ஆகஸ்டு 2-ம் வாரம் அறிவித்தார்.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்து விடும் என்று கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டுவிட்டரில் தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த மாதம் 17-ந் தேதி அவர் பேசும்போது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாராகி விடும் என குறிப்பிட்டார். இப்படி மாறி மாறி அறிவிப்புகள் வருவதால், அவை செயல்பாட்டுக்கு வருவது எப்போது என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த தருணத்தில் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறவர்களுடன் ‘சண்டே சம்வத்’ தளத்தின் மூலம் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர், “அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 20 முதல் 25 கோடி பேருக்கு, 40 முதல் 50 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதற்கான முன்னுரிமை பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவிடப்படும். இதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது” என உறுதிபட குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

* கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணி ஆற்றி வருகிற சுகாதார பணியாளர்களுக்கு (டாக்டர் கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் நோயாளிகளை கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பல தொழில் பிரிவினர்) தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* மத்திய சுகாதார அமைச்சகம், தற்போது ஒரு வடிவமைப்பை (பார்மட்) தயாரித்து வருகிறது. இதில், மாநிலங்கள் தடுப்பூசி பெற முன்னுரிமை மக்கள் குழுக்களின் பட்டியல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நடைமுறைகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* மேலும், தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட வசதிகளையும், பிற உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவது தொடர்பான விவரங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்கவும் வழிநடத்தப்படுகின்றன. இந்த வசதிகளை வட்டார அளவில் தயார் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

* தடுப்பூசி கொள்முதலை மத்திய அரசுதான் மேற்கொள்ளும். ஒவ்வொரு கொள்முதலும் கண்காணிக்கப்படும். தடுப்பூசி மிகவும் தேவைப்படுகிறவர்களை சென்றடைவதை உறுதி செய்யும் வரை கண்காணிக்கப்படும்.

* தடுப்பூசியை போடுவதற்காக பெரிய அளவில் மனித வளங்களை ஏற்படுத்துதல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல், மேற்பார்வையிடல் மற்றும் பிறவற்றில் திறன்களை கட்டமைப்பதற்கான திட்டங்களிலும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

* தடுப்பூசிகள் தயாரானதும், நியாயமான மற்றும் சமமான முறையில் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய எங்கள் அரசு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசியை எவ்வாறு உறுதி செய்வது என்பதில்தான் எங்களது முன்னுரிமை இருக்கிறது.

* நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான உயர்மட்ட குழு, தடுப்பூசி தொடர்பான முழு செயல்முறைகளையும் வகுத்து வருகிறது. மேலும், நாட்டில் பல்வேறு தடுப்பூசிகள் கிடைப்பதற்கான காலக்கெடுவை புரிந்து கொள்ளுதல், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகபட்ச அளவு தடுப்பூசிகள் கிடைக்கச்செய்வதற்கான உறுதிப்பாட்டை பெறுதல், சரக்கு மற்றும் வினியோக மேலாண்மையை கவனித்தல், அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றில் இந்த குழு செயல்பட்டு வருகிறது.

* தடுப்பூசியை திசை திருப்புவதோ, கள்ளச்சந்தைப்படுத்துதலோ இருக்காது. தடுப்பூசிகள் முன்பே தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமையின்படி, திட்டமிடப்பட்ட முறையில் வினியோகிக்கப்படும். இதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக முழு செயல்முறையின் விவரங்கள் வரும் மாதங்களில் பொதுவெளியில் பகிரப்படும்.

* ரஷியாவின் ‘ஸ்புட்னிக்- வி’ தடுப்பூசியை பொறுத்தமட்டில், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

* ஒரு தடுப்பூசியை விட இன்னொரு தடுப்பூசி மேலானதா என்பது பற்றி கருத்து கூறுவது சாத்தியம் இல்லை. அதே நேரத்தில் நம்மிடம் பல தடுப்பூசிகள் இருந்தாலும், அவை பாதுகாப்பானவை; கொரோனா வைரசுக்கு எதிரான தேவையான நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கும்.

* இந்தியாவுக்கு வெளியே நடந்த மருத்துவ பரிசோதனைகளில் பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டுள்ளது, செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும், இந்திய மக்களிலும் அவற்றின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புச்சக்தியை நிரூபிக்க ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் அவை மிகச்சிறிய மாதிரி அளவோடு நடத்தப்படலாம். அதன் அடிப்படையில் விரைவாக முடிவுக்கு வரலாம்.

* தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பாதகமான நிகழ்வுகள் பொதுவானவை. இது போன்ற நிகழ்வுகளில் ஊசி போடப்பட்ட இடத்தில் உள்ள வலி, லேசான காய்ச்சல் மற்றும் சிவத்தல், படபடப்பு, மயக்கம் போன்ற உள்ளூர் பக்கவிளைவுகள் அடங்கும். ஆனால் இந்த பக்க விளைவுகள் நிலையற்றவை. தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவை பாதிக்காது.

* பெருந்தொற்றை விரைவாக கட்டுப்படுத்துவதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியே விரும்பத்தக்கது. ஆனால் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியில் விரும்புகிற அளவு நோய் எதிர்ப்புச்சக்தியை அடைவது பெரும்பாலும் கடினம். இரட்டை ‘டோஸ்’ தடுப்பூசிகள், விரும்பிய நோய் எதிர்ப்புச்சக்தியை அடைவதற்கு ஏற்றவை. ஏனெனில், முதல் ‘டோஸ்’ சில நோய் எதிர்ப்பு பாதுகாப்பை அளிக்கிறது. இரண்டாவது ‘டோஸ்’ அதை மேலும் அதிகரிக்கிறது.

மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்பற்றுகிறவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக