வியாழன், 29 அக்டோபர், 2020

ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புவது எப்படி? அமெரிக்க சட்டப்பிரிவு 230

BBC : சுந்தர் பிச்சை (கூகுள்), டோர்ஸே (ட்விட்டர்), மார்க் ஜக்கர்பெர்க் (ஃபேஸ்புக்) பயனர்களின் இடுகைகள் விதிகளை மீறும் வகையில் அமையும்போது அவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய மூன்று சமூக ஊடக பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளிடம் அமெரிக்க எம்.பி.க்கள் குழு புதன்கிழமை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முழுமையாக அந்நாட்டு சட்டப்பிரிவு 230-ஐ மையப்படுத்தியே இருந்தது. கூகுள்

அமெரிக்க அதிபர் உட்பட அந்நாட்டின் எம்.பி.க்கள் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும் நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.  தற்போதைய நடைமுறைப்படி, சமூக ஊடக பயனர்களின் பதிவுகள் தொடர்பாக அந்த நிறுவனங்களை விசாரிக்கும் வழக்கம் இல்லாதபோதும், இதை இப்படியே விட்டால், அது தவறான பழக்கமாகி விடலாம் என சில எம்.பி.க்கள் கூறியதையடுத்து, இந்த விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்ஸே, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக அழைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் தகவல் தணிக்கை செய்யப்படுவது குறித்து கவலைப்படும் அதே சமயம், தவறான தகவல்கள் அதன் வாயிலாக பரவக்கூடாது என்பதில் எம்.பி.க்கள் குழு உறுதியாக உள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டப்பிரிவு 230-ஐ மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரி்ககை வலுத்து வருகிறது.

சமூக ஊடக செயல்பாடுகளில் இந்த சட்டப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சட்டப்பிரிவு 230 என்றால் என்ன?

இன்டர்நெட் பயன்பாடு தொடர்புடையது அமெரிக்க சட்டப்பிரிவு 230. ஒரு பயனர் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையை பதிவு செய்தாலும், அதன் பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார் என்று இந்த சட்டப்பிரிவு கூறுகிறது என்கிறார் யேல் பல்கலைக்கழக பேராசிரியர் ஃபியானா ஸ்காட் மோர்ட்டன்.

"சமூக ஊடகங்களில் தகவல் பதிவு தொடர்பானதாக இது இருந்தாலும், அதே தகவலை ஒரு நாளிதழ் பதிவு செய்தால் அதற்கு இருக்கம் பொறுப்பு அதிகமானது," என்று சமூக ஊடக தகவலுக்கும் நாளிதழ் செய்திக்கும் இடையிலான பொறுப்புணர்வை பேராசிரியர் ஃபியானா விவரிக்கிறார்.

மொத்தத்தில் இந்த சட்டப்பிரிவு 230 என்பது, சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஒருவித சட்டப்பாதுகாப்பை வழங்குகிறது. அதனாலேயே அவற்றின் தளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கல் பதிவிடப்பட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலாது.

இதன் உள்ளர்த்தம், இணையதள பக்கங்களில் ஒரு பயனர் சட்டவிரோதமான அல்லது ஆட்சேபகர இடுகையை பதிவிடும்போது அதற்கு அந்த இணையத நிறுவனம் பொறுப்பாளியாவதில்லை. அந்த பயனருக்கும் இணையதள நிறுவனத்துக்கும் இடையிலான உறவு என வரும்போது, ஒரு நாளிதழை விற்பனை செய்யும் விற்பன்னர் பொறுப்பைத்தான் அந்த இணையதளம் கொண்டிருக்கிறது. அந்த நாளிதழில் என்ன இடம்பெறுகிறது என்பதை ஓர் ஆசிரியர் முடிவு செய்கிறார். அதுபோலவே, அந்த இணையதள பக்கத்தில் என்ன பதிவிடப்படுகிறது என்பதை அந்த பதிவுக்கு சொந்தக்காரரே தீர்மானிக்கிறார்.

ஒரு வகையில் இந்த சட்டப்பிரிவு, பயனர்களை விட, அந்த பயனர்கள் பதிவிட தளம் அமைத்துக் கொடுக்கும் சமூக ஊடக அல்லது இணையதள நிறுவனங்களின் பாதுகாப்புக்கே உதவுகிறது. அந்த சட்டப்பிரிவுதான் தற்போதும் ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களை பாதுகாத்து வருகிறது. பயனர் ஒரு இடுகையை பதிவிட்டு அது இணைய உலகில் வெளிவரும்வரை அவரது இடுகையை தணிக்கை செய்வதோ, கண்காணிப்பதோ இந்த நிறுவனங்களால் இயலாத காரியம்.

ஆனாஸ், இந்த வாதம் ஆரம்ப காலத்துக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர, தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாது. அதனால் பிரிவு 230, காலாவதியான ஒன்று என்று அமெரிக்க எம்.பி.க்கள் கருதுகிறார்கள்.

எம்.பி.க்கள் குழு முன்பு ஆஜரான ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவன தலைமை நிர்வாகிகளும் இந்த விவகாரத்தில் தங்களுடைய பங்களிப்பு எப்படி உள்ளது என்பதை விளக்கக் கிடைத்த வாய்ப்பாகவே இந்த விசாரணையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.


முன்னதாக, எம்.பி.க்கள் குழுவுக்கு ட்விட்டர் தலைமை அதிகாரி டோர்ஸே எழுதிய கடிதத்தில், 230ஆவது பிரிவை பலவீனப்படுத்தும் வகையில் அதை நீக்கினால், பிறகு சமூக ஊடக தளங்களில் முக்கியமான பேச்சுகளே இல்லாத நிலை உருவாகலாம் என கூறியிருந்தார். அந்த சட்டம் இருப்பதால்தான் ஒரு காலத்தில் சிறிய நிறுவனமாக இருந்த ட்விட்டர் போன்ற தளங்கள், மிகப்பெரிய சமூக ஊடக ஜாம்பவான்களுக்கு மத்தியில் இணைய உலகில் வலம் வர முடிந்தது. அதற்குக் காரணம், பயனர்களின் கருத்துகளை அது அனுமதித்த நடவடிக்கைதான் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், பிரிவு 230 என்பது அடிப்படை சட்டம். அது கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது. அது மேலும் தீவிரமாக பயன்பாட்டில் இருக்கும் வகையில் அந்த பிரிவில் மாற்றம் கொண்டு வரலாம் என்று கூறுகிறார். சமூக ஊடக தளத்தில் பதிவிடப்படும் கருத்துகளை கட்டுப்படுத்தும் உரிமை தங்கள் வசம் இருக்க வேண்டும் என்பது மார்க் ஜக்கர்பெர்கின் நிலைப்பாடு.

யூட்யூப் தளத்தை நிர்வகித்து வரும் கூகுள் நிறுவனம், அதன் தரப்பு எழுத்துப்பூர்வ கருத்தை முன்பே குழுவிடம் தாக்கல் செய்யவில்லை.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரெதிர் களத்தில் உள்ள டொனால்டு டிரம்பும், ஜோ பைடனும் இந்த விவகாரத்தில் ஒரே கருத்தை எதிரொலிக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, 230ஆவது பிரிவு அகற்றப்பட வேண்டிய ஒன்று என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கிறார்கள்.

அந்த வகையில் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இருவரில் யார் வெற்றி பெற்றாலும், அந்த முடிவு, சமூக ஊடக உலகில் கோலோச்சி வரும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கடுமையானதாகவே இருக்கப்போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக