சனி, 24 அக்டோபர், 2020

முஸ்லிம் எம்.பிக்களாலேயே ’20’ நிறைவேறியது! முஜிபூர் ரஹ்மான் MP

kuruvi.lk : முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் ’20’ஆவது திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. எனவே,  கொரோனா

வைரஸ் தாக்கத்தால் முஸ்லிம் மக்கள் எவராவது உயிரிழந்தால்  சடலத்தை அடக்கம் செய்வதற்கு இனியாவது அனுமதி வழங்கவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலக சுகாதார அமைப்பால் கடந்த மார்ச் 20 ஆம் திகதி வழிக்காட்டல்கள் அறிக்கையொன்றை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைதான் இன்னும் நடைமுறையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் எவராவது உயிரிழந்தால் அவரின் சடலத்தை எரிக்கலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானபூர்வமாகவே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது. உலகில் பல நாடுகள் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன.

எனினும், இலங்கையில் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எரிக்க மட்டுமே வேண்டும் என அரசியல் ரீதியில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மீள்பரீசிலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 6 மாதங்களின் பின்னர் பரீசிலிக்கலாம் எனக் கூறப்பட்டது. அந்த கால எல்லை தற்போது முடிவடைந்துவிட்டது. எனினும், இது தொடர்பில் சுகாதார அமைச்சு எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிரணியில் இருந்து 6 முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவு வழங்கினர். அதனால்தான் 20 நிறைவேறியது. எனவே, அவர்கள் வழங்கிய ஆதரவை கருதியாவது உரிய முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” -என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக