புதன், 7 அக்டோபர், 2020

மதுபாலா காதலர் தினமான பிப்ரவரி 14–ந் தேதி பிறந்தவர் ..

 Kulashekar T - World Movies Museum : · மதுபாலா முதலில் ஒன்று சொல்லியாக

வேண்டும். இதை இப்படி ஆரம்பிப்பது தான் சரியாக இருக்கும். மதுபாலா என்றால் காதலின் தினம். ஆம். காதலர் தினமான பிப்ரவரி 14–ந் தேதி பிறந்தவர் தான் இந்த மதுபாலா. தீரா இளமை கொண்டவர். இவர் பூத்ததும் உதிர்ந்த பூ. ஆனாலும், இப்போதும் வாசம் மட்டும் குறையவில்லை. இப்போது மட்டுமல்ல.. எப்போதும் குறையாத மலர்.. அதன் பெயர் மதுபாலா.
மதுபாலா என்றால் மயக்கம் தருகிற அமுது என்று அர்த்தம் கொள்ளலாம். அவரின் கண்களில் ஒரு நிரந்தர வசியம் இருக்கும். எப்போதும் அந்த பார்வை சொக்கிப்போய் பார்க்கும். பார்க்கிறவர்களை நொடிப்பதற்குள் சொக்க வைத்து விடும் அந்த கிரக்கப் பார்வையில் ஒரு கம்பீரமும், குழந்தைத்தனமும் எப்போதும் துள்ளி விளையாடும். அவரின் தனித்துவம் அது.
அதை எவராலும் ஈடுசெய்ய முடியவில்லை என்பதை 1990 – ல் நடத்திய ஒரு வாக்கெடுப்பு நிரூபணப்படுத்தியது. அந்த பிரபலமான திரைப்பட இதழானது, இந்திய அளவில் ஆல் டைம் ஃபேவரைட் ஸ்டார் யார் என்று நடத்திய சர்வேயில் அமோக ஆதரவோடு முதலிடம் பிடித்தவர் தான் இந்த மதுபாலா.
இவரது பார்வையில் இவரின் இதயத்தில் தவித்திருக்கும் காதலின் நிரந்தர ஏக்கத்தை தரிசிக்கலாம். அது இந்திய மனதின் ஒருமித்த படிமமாக இருப்பதாலோ என்னவோ, இவரை திரையுலகம் தலையில் வைத்து கொண்டாடியது.
இவரின் பேரழகில் எவராலும் துளி ஆபாசம் உணர முடியாது. பரிபூரண காதலின் அடையாளமாகவே இவர் பார்க்கப்பட்டார்.
மதுபாலா என்றால் தேன் அடை என்று பொருள் கொள்ளலாம். இந்த பெயரை அவருக்கு சூட்டியவர் நடிகை தேவிகா ராணி. மதுபாலா தான் இந்திய திரையுலகில் இருந்து முதன்முதலில் ஹாலிவுட் சினிமாவிற்கு அழைக்கப் பட்டவர். இவர் அமர காதலின் சோக கீதம். மும்தாஜ், அனார்கலி என்று பலவிதமான பிளட்டோனிக் காதல் கதாபாத்திரங்கள் என்றாலே மதுபாலா தான் நினைவிற்கு வருவார்.
அவரின் புன்னகை அப்படியே ஹாலிவுட் கனவு தேவதை மர்லின் மன்றோவை ஒத்திருந்தது. அதனாலேயே அவர் பாலிவுட்டின் மர்லின் மன்றோ என்று அழைக்கப்பட்டார். பத்திரிகைகள் தீராத அவரின் அழகையும், நடிப்பையும் எழுதிஎழுதி தீர்க்க முடியாமல் திண்டாடின.
அவரின் காதல் ரசம் சொட்டும் முகபாவங்கள் உலகையே சொக்க வைப்பவை. அவரின் பாவனைகள் எக்ஸ்பிரஸனின் உச்சம். அவரின் இடதுபக்க சூரிப்பல் சற்று வளைந்து சிறியதாய் இருக்கும். அது காந்தமாய் ஈர்க்கிற வசீகரத்தை மதுபாலாவிற்குள் உணர வைக்கும்.
இந்திய சினிமாவின் ஒப்பற்ற கனவு தேவதை மதுபாலா. வீனஸ் கிரகத்தில் இருந்து நேரடியாக பூமிக்கு தரிசனம் தந்தவர். முழுமையான அழகின் ஏகோபித்த அடையாளம்.
இவர் டெல்லியில் பிப்ரவரி 14 – ந் தேதி 1933 – ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் மும்தாஜ். அப்பா பெயர் அதுல்லாகான். அம்மா பெயர் ஆயிசா. அவர்களுக்கு பிறந்த பதினோரு குழந்தைகளில் இவர் ஐந்தாவதாக பிறந்தவர்.
இவர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக திரைப்படத்துறைக்குள் 1942 – ம் ஆண்டு பஸந்த் என்கிற திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். அப்போது அவர் பெயர் பேபி மும்தாஜ். பிற்பாடு தான் மதுபாலாவானார்.
முதல் படமே சூப்பர் ஹிட். அப்போதிருந்து 1964 வரை 22 ஆண்டுகள் இவரின் கொடி உச்சத்திலேயே பறந்து கொண்டிருந்தது. தன்னிகரற்ற இந்திய தாரகையாக வலம் வந்தார்.
அவரை இந்திய திரையுலகம் வீனஸ் தேவதை என்கிற அடைமொழியோடே அழைக்க ஆரம்பித்தது. கிரேக்கத்தின் காதல் தேவதையின் பெயர் தான் வீனஸ். மதுபாலா இந்திய திரையுலகின் காதல் தேவதையானார்.
மதுபாலா நடித்த மும்தாஜ் மஹல், தான்னா பஹத், ராஜ் புதானி, பூஜாரி, பூல்வாரி,சாத் சமுந்திரன் கி மல்லிகா, மேரே பகவான், கூப் சூரத், தில் கி ராணி ஸ்வீட் ஹார்ட், சித்தோர் விஜய் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.
1947 – ல் நாயகியாக ராஜ்கபூரோடு அவர் நடித்த நீல் கமல் இவரை புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த படம் சுமாரான படம் தான் என்று பேசப்பட்டது.
ஆனால், நாயகி மதுபாலாவை கனவுக்கன்னியாக அந்த தோல்வி படத்தின் வாயிலாகவே இந்தி திரையுலகம் மனப் பூர்வமாய் ஏற்றுக் கொண்டு விட்டது. அது தான் ஆச்சர்யம். அது தான் மதுபாலா.
இவரது படங்களில் பாடிய பிற்பாடு தான் ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர் கவனிப்பிற்குள்ளாகி பிரபலமானார்கள்.
மதுபாலா பல வெற்றிப்படங்களில் தன்னுடைய தனித்த முத்திரையை பதித்திருக்கிறார். அதில் மொகல் ஈ ஆஸாம் மறக்கவே முடியாத படம். அந்த படத்தை அவரின் இயல்பான நடிப்பு ஒரு காவிய அந்தஸ்திற்கு நகர்ந்தியிருந்தது என்பது நூற்றுக்கு நூறு நிஜம்.
முதன் முதலில் இவர் கதாநாயகியாக ராஜ்கபூரோடு இணைந்து நடித்த படம் நீல் கமல். அப்போது அவருக்கு வயது பதினைந்து தான். இளமை ததும்பும் மொட்டாக வாசம் கமழ துறுதுறுவென நடித்து அசத்தியிருந்தார். அந்த ஒரு படத்திலேயே அவர் கனவுக்கன்னியாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
அதனை தொடர்ந்து பதினாறு வயதே நிரம்பியிருந்த மதுபாலா நடித்த படம் மஹல். இந்த படம் வெளியான அந்த இரவே அவர் பாலிவுட்டின் உச்சநட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டார். இந்திய திரையுலகின் காதல் தேவதையாக கொண்டாட துவங்கி விட்டார்கள்.
தரானா, பாதல், சங்தில், அமர், மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55, கல் ஹமாரா ஹை என அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
1951 – ல் லைஃப் இதழ் அவரின் படத்தை அட்டைப் படமாக வெளியிட்டு, அவரை கௌரவித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்க பத்திரிகைகள் உலகின் உச்ச நட்சத்திரம் என்று மதுபாலாவை சிலாகித்து எழுத ஆரம்பித்தன.
அமெரிக்காவிலிருந்து வெளி வருகிற பிரபல ‘தியேட்டர் ஆர்ட்ஸ்’ என்கிற பத்திரிகையில் அவரின் விதவிதமான படங்களோடு, அவரது திரைப்பயணம் பற்றிய கட்டுரை வெளியானது. அதில், மதுபாலாவை உலகின் மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் பெவர்லி ஹில்ஸில் நடிக்க ஹாலிவுட் கொடுத்து வைக்கவில்லை என்று தலைப்பிட்டு முழுப்பக்க படத்துடன் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தார்கள்.
அமெரிக்காவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான பிரான்க் கப்ரா இவரை ஹாலிவுட்டில் நாயகியாக அறிமுகம் செய்ய அழைத்தார். ஆனால், இவரின் தந்தை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க விரும்பவில்லை. அதனால் அந்த வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. இல்லையென்றால் அவரே ஹாலிவுட்டில் நாயகியாக நடித்த முதல் இந்திய நடிகை என்கிற பெயரை பெற்றிருப்பார்.
அதனை தொடர்ந்து அவர் நடித்த முகல் ஈ ஆஸம், பர்ஸாத் கி ராத் படங்கள் வரலாறு காணாத வெற்றியை பெற்றன. மதுபாலா தன்னுடைய ஆபாசமற்ற, குழந்தைத்தனமான பாவங்களால், பேரழகால் இந்தி திரையுலகை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து பொற்கால ஆட்சியை வழங்க ஆரம்பித்தார். அந்த படத்தில் அனார்கலிக்கே கூடுதல் கௌரவம் மதுபாலாவால் ஏற்பட்டது என்பதே நிஜம்.
பரய் ஆக், லால் துப்பட்டா, தேஷ் சேவா, அமர் பிரேம், சிப்பாயா, சிங்கார், பரஸ், நேசி அவுர் பதி, இம்திஹான், துலாரி, தௌலத், அப்ராதி, பர்தேஷ், நிணானா, மதுமாலா, ஹன்ஸ்தே ஆன்ஸு, பேகசூர், ஸயான், நஸ்ரின், நாதான், கஸானா, சகி, ரெயில் கா டிப்போ, அர்மான், பஹீத் தின் ஹுவே, தீரன்தேஷ், நவாப், நாதா, ஷரீன் பர்ஹத், ராஜ்ஹாத், தே கே கி மால்மால், யாஹீதி கி லட்கி, கேட் வே ஆஃப் இந்தியா, எக் சால், போலீஸ், பேகன், காலாபானி, ஹௌரா பிரிட்ஜ், சல்தி கா நாம் காடி, இன்ஸான் ஜாக் உடா, உஸ்தாத், மெலோன் கே க்வாப், ஜாலி நோட், பர்ஸாத் கி ராத், பாஸ்போர்ட், பாய் ஃபிரண்ட், ஷராபி என அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் அவரின் தனித்த முத்திரைகளை பதிக்க அவர் ஒருபோதும் தவறியதே இல்லை. கல் ஹமாரா ஹை திரைப்படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.
மதுபாலா எஸ்.எஸ் வாசனின் இரண்டு படங்களில் நாயகியாக நடித்தார். இரண்டும் வெற்றிப் படங்கள். ஒன்று பஹுத் தின் ஹீவே. மற்றொன்று இன்சானியத். அந்த தருணங்களில் அவருக்கு இதய கோளாறு அதிகரித்து, அவர் படப்பிடிப்பு தளத்திலேயே ரத்த வாந்தி எடுத்தபோது, வாசனும், அவரது மனைவியும் பெற்ற மகளாக அப்படி பார்த்துக் கொண்டார்கள்.
அந்த நன்றிக்காகவே மதுபாலா எப்போதும் முதல் நாள் சிறப்பு காட்சியில் பங்கெடுப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருந்தவர், வாசனின் படத்திற்கான சிறப்பு காட்சியில் மட்டும் கலந்து கொண்டார். அன்பிற்கு ஏங்குபவர். அன்பென்றால் அப்படியே உருகிவிடும் சுபாவத்திற்கு மறுபெயர் தான் மதுபாலா.
தான் படபடப்பாக இருக்கிற தருணங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்து சிரிப்பது அவரின் இயல்பு.
குருதத் தன்னுடைய காவிய திரைப்படமான பியாஸா எடுக்கையில் நாயகிக்கான அவருடைய முதல் சாய்ஸ் மதுபாலாவாக தான் இருந்தது.
பின்னாட்களில், சோகா அலி கான் நடித்த கோயா கோயா சாந்த் திரைப்படம் மதுபாலாவின் வாழ்க்கையை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்டது.
முதன்முதலாக திலீப்குமாருடன் இவர் ஜவார் பாடா என்கிற திரைப்படத்தில் நடித்தார். பிற்பாடு, ஹர் சிங்கர், தரானா போன்ற படங்களில் நடித்த போது, அவர் மீது மதுபாலாவிற்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை 1950 களில் இருவரும் பகிரப்படுத்திக் கொண்டார்கள்.
மதுபாலாவின் தந்தைக்கு இந்த காதலில் விருப்பமில்லை. அதனால் 1957 – ம் ஆண்டில் மதுபாலா, திலீப்குமாரோடு சேர்ந்து இயக்குநர் பி.ஆர். சோப்ராவின் 'தௌர்' திரைப்படத்திற்கான வெளிப்புற படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக போபால் செல்ல வேண்டி இருந்தது.
அங்கே அவர்கள் தனியே சந்தித்துக் கொள்வதை அவரின் தந்தை விரும்பாததால், அவர் படப்பிடிப்பை மும்பையிலேயே வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டார்.
அதற்கு இயக்குநர் இசையவில்லை. அதனால், அந்த படிப்பிடிப்பில் மதுபாலாவை கலந்து கொள்ள விடாதபடி அவருடைய அப்பா தடுத்து விட்டார். ஏனோ அவருக்கு திலீப்குமார் மீது நம்பிக்கை வரவில்லை.
இதனால் மதுபாலா மீது இயக்குநர் வழக்கு தொடர்ந்து விட்டார். தான் தந்திருந்த அட்வான்ஸ் பணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என்று. அந்த வழக்கெல்லாம் மிகச் சிறிய விசயம். பேசி தீர்த்து இருந்திருக்கலாம் தான்.
ஆனால், அந்த வழக்கின் நிமித்தம் மதுபாலா எதிர்பார்த்திராத ஒன்று நடந்தது. ஆமாம். மதுபாலாவிற்கு எதிராக திலீப்குமார் சாட்சியம் சொன்னதை மதுபாலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எந்த சூழ்நிலையில் இத்தனையும் நடந்தது.. தன்னால் ஏன் படப்பிடிப்பில் போபால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்பது முழுமையாய் தெரிந்திருந்தும், இப்படி செய்து விட்டாரே என்று மதுபாலா துடிதுடித்துப் போனார்.
அதுவே அவர்களின் பிரிவிற்கும் காரணமாகி விட்டது. அந்த வலி அவரின் இதயத்தை கடுமையாக பாதித்தது. அந்த வலியே ஒரு வகையில் அவரை கடைசி வரை தொடர்ந்ததோடு, அவரின் முடிவிற்கும் காரணமாகிவிட்டது என்றும் சொல்லலாம்.
அதன் பிறகு திலீப் குமாரும், கிஷோர் குமாரும் கூடுதலாக சில திருமணங்கள் செய்து கொண்டார்கள். அப்படியாக அவர்களின் பக்கங்கள் காவிய நாயகி அனார்கலி பக்கங்களில் இருந்து தங்களை பிய்த்துக் கொண்டன.
அஸ்மா தீலீப்குமாரின் முதல் மனைவி. 15 வருடத்திற்கு பிற்பாடு 60 வயது கடந்த பிறகு, சாய்ரா பானு இரண்டாவது மனைவி. கிஷோர் குமாருக்கு கூடுதல் திருமணங்கள் இவர் இறந்த பிறகு தான் நடந்தது. அதில் யோகிதா பாலி கடைசி. அவரும் விவாகரத்து செய்தபின் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.
மதுபாலாவுடைய படங்களில் அவரால் மறக்கவே முடியாத படம் முகல் ஈ ஆஸம். இந்த படத்தின் இயக்குநர் ஆசிஃப் மதுபாலா பற்றி படம் வெளியானபோது பக்கம்பக்கமாய் பாராட்டி சொல்லி இருந்தார்.
இந்த படம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மிகவும் பிரமாண்டமான படைப்பு. கருப்பு வெள்ளையில் சந்திரலேகாவிற்கு பிறகான பிரமாண்டமான சரித்திர கால படம். பிற்காலத்தில் தொழில் வளர்ச்சி அடைந்த பிற்பாடு அதை வண்ணப்படமாகவும் மாற்றினார்கள்.
அவர் திலீப்குமாரோடு அபரிமிதமான காதலில் இருந்த காலத்தில் துவக்கப்பட்ட படம். இடையில் திலீப்குமாரோடு உறவு முறிந்த பிற்பாடும் தொடர்ந்தது.
அந்த தருணங்களில் மதுபாலா தன்னுடைய முன்னாள் காதலனிடம் இப்போது அளப்பரிய காதலை காட்ட வேண்டிய கடினமான காட்சிகள் எல்லாம் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால், இயக்குநர் சற்றும் எதிர்பாராத வகையில் தன் வலிகள் அத்தனையையும் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு காதலின் சின்னமாக அற்புதமான நடிப்பை மதுபாலா வெளிப்படுத்தினதும் அசந்து தான் போய் விட்டார்.
உண்மையில் அனார்கலி காதல் நிறைவேறாமையில் துடிதுடிக்கிறது தான் காட்சி. அந்த தருணத்தில் உண்மையில் இதயத்தில் வலியோடு, அதே நிலையில் தான் அவருமே இருந்தார். அதனால் தானோ என்னவோ அவர் அந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. வாழ்ந்திருந்தார் என்பதே சரி.
அனார்கலி என்பது அவரது கலைத்திறமைக்காக அக்பர் வழங்கிய பட்டம்.
அவரின் உண்மையான பெயர் ஷாரிஃபுன்னிசா. இவர் ஒரு அந்தப்புரத்து நடனமணி. தேவதாசி வழிவந்தவர் என்று சொல்லலாம். அரசவை நர்த்தகி.
இவரின் நடனத்தை முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்டு விட்டார் சலீம் என்கிற ஜஹாங்கிர். இவரின் மனைவி நூர்ஜஹான். இவருக்கு மெஹருண்ணிசா என்கிற பெயரும் உண்டு. அவர் எத்தனை திருமணமும் பண்ணலாம் என்பதால், அனார்கலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
அக்பர் இந்து பெண் ஜோதா என்பவரை காதலித்து திருமணம் செய்து இருந்தாலும், கணிகையர் குலத்தில் பிறந்த ஷாரிஃபுன்னிசா உடனான காதலை ஏற்க மனமின்றி, காதலையும், அனார்கலி யையும், தீனிலாகி மதத்தை கொண்டு வந்த அக்பரே உயிரோடு சமாதி கட்டி விட்டார்.
காதலை மறந்து விட்டு வாழ்வதை விட, சலீமை நினைத்துக் கொண்டே மாள்வது மேல் என்று அக்பர் தந்த இறுதி வாய்ப்பை மரணத்திற்கு சமர்ப்பித்து விட்டாள்.
தேவதாசி என்றால் பெண் இல்லையா? உயிர் இருக்காதா? உணர்ச்சி இருக்காதா? அதில் காதல் தோன்றக்கூடாதா? கருத்தொருமித்த பிறகு அதற்கு அந்தஸ்து எப்படி தடையாக இருக்க முடியும் என்பதை உயிரை துச்சமாக மதித்து அன்றே உரிமைக்கு போராடிய காதல் தேவதை படிமமே அனார்கலி.
வரலாற்றை அந்த நாட்களில் பதிவிட்டவர்களும் அனார்கலி சம்பவங்களை அதில் இடம் பெறாத படி பேரரசர் அக்பர் பார்த்துக் கொண்டார். ஆனாலும் நாட்டுப்புற பாடலாக, வாய் வழியாகவே அனார்கலி யின் காதல் வரலாறு பேசப்பட்டும், பாடப்பட்டும் வந்ததில்,இன்று இப்படியாக உயிர்த்தெழுந்து விட்டது.
இப்போதும் அனார்கலி சமாதி லாகூரில் அனார்கலி பாத் என்கிற இடத்தில் ஜஹாங்கிர் அவர் பற்றி சொன்ன உயிரோட்டமான காதல் வாசகத்தோடு, இப்போதும் சரித்திர சாட்சியாக இருக்கிறது.
அதனை தொடர்ந்து சலீம் வாழ்நாளாலெங்கும் மது மயக்கத்திலேயே இருந்து மடிந்தார். அவர் பெயரை சொல்லி நிழல் அரசாங்கம் நடத்தியது மெகருன்னிசா என்கிற நூர்ஜஹான் தான்.
அதை ஆதாரமாக கொண்டு இம்தியாஷ் அலி எழுதிய நாடக நூலை மையமாக வைத்தே இந்த திரைக்காவியம் உருவாக்கப்பட்டது.
எப்போது அந்த படத்தை பார்த்தாலும், கண்களில் நீர் பொங்காமல் அந்த அற்புத அனார்கலி பாத்திரத்தை பார்த்து முடித்து விட முடியாது.
அந்த படைப்பை பார்க்கிற போதெல்லாம் மதுபாலாவை அனார்கலியின் படிமமாகவே உணர்கிறேன். அந்த உயிராக, அதன் ஆழத்தில் நிழலாடும் நிறைவேறாத காதலாகவே என்னை உணர்கிறேன். அந்த அலைக்கழிப்பில் இருந்து மீளமாட்டாத ரகசிய துயரின் நித்ய வலிக்குள் அமிழ்ந்து வாழ்வின் நிதர்சனம் தொடுகிறேன். நன்றி அனார்கலி. நன்றி மதுபாலா. இந்த வாழ்க்கை நீ தந்த உயிர்ப்பான நேசங்கள் ஊடாக அர்த்தம் கொள்கிறது. உயிர் வந்தனங்கள் வீனஸ் தேவதையே!
அதன் இயக்குநர் ஆசிஃப், மதுபாலா பற்றி குறிப்பிடுகையில், அவர் ஒரு அதிசய பிறவி. எப்போதாவது தோன்றும் விடிவெள்ள என்றார். இத்தனைக்கும் காரணமாக இருந்த திலீப்குமாரே இந்தியாவின் தலைசிறந்த நடிகை என்று மதுபாலா பற்றி குறிப்பிட வேண்டிய நிலை வந்தது.
மொகல் ஈ ஆஸம் திரைப்படத்தில் படம் நெடுகிலும் மதுபாலா வாயிலாக கதக் நடனம் உச்ச பரவசம் தொட்டிருக்கும்.
தன்னுடை 21 – வது வயதில் தன்னுடைய இதயத்தில் ஒரு துளை இருப்பதாக கண்டறியப்பட, துடிதுடித்துப் போகிறார். இந்த நாட்களை போல அந்த நாட்களில் அதற்கான மருத்துவம் கண்டறியப் பட்டிருக்கவில்லை.
லண்டன் சென்று பரிசோதனை நடத்தினார்கள். ஆனாலும், அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொள்கிற நிலையில் அவருடைய இதயம் இல்லை. மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
தன்னுடைய 22 வது வயதில் நாட்டல் என்கிற திரைப்படத்தை தானே தயாரித்து, நடித்து வெற்றி பெற்றார்.
இவர் குருதத், ராஜ்கபூர், அசோக்குமார், கிஷோர்குமார், திலீப்குமார், சுனில் தத், தேவ் ஆனந்த் போன்ற நாயகர்களோடு சேர்ந்து பல படங்களில் நடித்தார்.
மதுபாலாவை பொறுத்தமட்டில் அது ஒரு வரலாற்று சோகம் என்பதே உண்மை.
கிஷோர்குமாரோடு தாக்கா கி மாய்மால், ஜல்தி கி நாம் காடி, மெஹ்லோன் கி கவாப், ஜ்ம்ரோ, ஹாஃப் டிக்கெட் போன்ற பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்தார்.
அதனை தொடர்ந்து 1960 – ல் அவரை திருமணம் செய்து கொண்டார். கிஷோர் குமார் அப்போது தான் விவாகரத்து செய்து இருந்தார். அதனால் மதுபாலாவை கிஷோர்குமாரின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும், அந்த உறவு தொடர்ந்தது துயரங்களின் ஊடாகவே.
திரைப்படங்களில் அப்படியொரு மோகன புன்னகை பூத்து அனைவரையும் மகிழ்வித்தவர், வாழ்க்கையின் வழிநெடுக துயரங்கள்.. ஏமாற்றங்கள்.. ரணங்கள்.. வலிகள்.. அதன் ஊடாக கலை வழியாக வாழ்வின் அர்த்தங்களை அர்த்தப்படுத்தியவர்.
அவரால் சும்மா இருப்பது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
உடனே, ஃபர்ஷ் அவுர் இஸ்க் என்கிற திரைப்படத்தை தானே இயக்க ஆரம்பித்தார். ஆனால், அவரால் நினைத்த மாதிரி அந்த படத்தின் பணிகளை தொடர இதயம் ஒத்துழைக்கவில்லை. அதனால் இடையிலேயே அந்த பணியை நிறுத்த வேண்டியதாகி விட்டது.
அவரை மருத்துவர்கள் அதிகமான ஓய்வில் இருக்க கட்டாயப் படுத்தினார்கள். வாழ்க்கை அப்படித்தான்.
1960 ல் காவியப்படமான மொகல் ஈ ஆஸாம் 17 ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. உயிரை கொடுத்து நடித்துக் கொண்டிருந்தார்.
இதன் இசை நவ்ஷாத். மதுபாலாவின் நடனங்களும், உயிரை உருக்கும் நடிப்பாலும் அந்த படத்தை ஒரு காவியமாக்கினார்.
ஓய்வில் இருந்தால் அதிகபட்சமாக ஒரு வருடம் உயிரோடு இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
அவர் ஓய்வை பற்றி நினைக்கவே இல்லை. மனதைரியத்தோடு தொடர்ந்து நடித்தார். வீட்டில் இருந்து பிரத்யேக உணவு கொண்டு வரப்பட்டது. அப்போதெல்லாம் மினரல் வாட்டர் கிடையாதென்பதால், ஒரு குறிப்பிட்ட கிணற்று நீரை காய்ச்சி எடுத்து எடுத்துக்கொண்டு வருவார்கள். அதைத் தான் பருகுவார். மருத்துவ ஆரூடங்களை தாண்டி அதன் பிறகு பத்து வருடங்கள் வாழ்ந்தார். இறுதிவரை நடித்துக் கொண்டுமிருந்தார்.
மதுபாலா தன்னுடைய திரைப்பட பயணத்தில் ஈடுபட்டிருந்த 22 ஆண்டுகளில் 70 படங்களில் நடித்திருந்தார். அவற்றில் பல சூப்பர்டூப்பர் ஹிட் படங்கள். முகல் ஈ ஆஸாம் படத்தில் அனார்கலி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
1969 பிப்ரவரி 23 – ந் தேதி எதிர்பாராத விதமாக மர்லின் மன்றோ 36 வயதில் இறந்ததை போலவே இவரும் இறக்க நேர்ந்தது தான் இந்திய சினிமாவின் ஒப்பற்ற சோகம். அவருக்கு இதயத்தில் பிரச்னை இருந்ததாக சொல்லப் படுகிறது.
காதல் தேவதைக்கு இதயத்தில் பிரச்னை. தளாமுடியாத வலி. தாங்கிக் கொள்ள முடியாத சோகம்.
இவரின் கடைசி படம் ஜ்வாலா. இதில் சுனில் தத்தோடு நடித்திருந்தார். இவர் நடித்த அத்தனை படங்களும் கருப்பு வெள்ளை படங்கள் தான். இவருடைய கடைசி படம் மட்டுமே வண்ணப்படம். ஆனால், அந்த படத்தை அவர் பார்க்க கொடுத்து வைத்திருக்கவில்லை. இந்த படம் முடிவடைய தாமதமேற்பட்டதால், அவரின் இறப்பிற்கு பிறகு 1971 – ல் வெளியாகி வெற்றி பெற்றது.
1969 – ல் அவர் இயற்கை எய்துகிறார். மும்பை சாந்தா குரூஸில் இருக்கிற அவரின் சமாதி இப்போதும் மக்களால் சென்று தரிசிக்கிற ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது. 2008 – ம் ஆண்டு இந்திய அரசு கலைக்கு அவர் ஆற்றிய தொண்டை போற்றும் விதத்தில் மதுபாலா உருவம் பொறித்த தபால் தலை வெளியிட்டு கௌரவித்து இருக்கிறது.
வீனஸ் தேவதை மதுபாலாவிற்கு மரணமில்லை. அதனால் அனார்கலிக்கும் மரணமென்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக