செவ்வாய், 22 செப்டம்பர், 2020

:அரியலூர் ..இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய IOB வங்கி மேலாளர்,

BBC :அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியின் கிளை உள்ளது. இந்த

வங்கியில், இதே மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக இருக்கிறார்.இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக வங்கிக் கடன் உதவி கோரி விண்ணப்பித்து இருக்கிறார். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கிக் கடன் தொடர்பாக மேலாளரைச் சந்திக்க கட்டட பொறியாளருடன் சென்றுள்ளார். அப்போது அந்த கிளை மேலாளர், "உங்களுக்கு இந்தி தெரியுமா? நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன், மொழி பிரச்சனை இருப்பதால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது" என்று சொல்லி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக தென் மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பதாகக் கூறி நாடு முழுவதும் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் அரசு வங்கி மேலாளர், இந்தி மொழி தெரியாததால் வங்கிக்கடனுதவிக்கு எதுவும் செய்ய முடியாது என கூறியதாக தெரிவிக்கப்படும் சம்பவம், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை வாடிக்கையாளரும், ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியத்தை பிபிசி தொடர்புகொண்டு பேசியது.

"அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்ட எனக்கு, அந்த வங்கியில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கு வைத்துள்ளேன். தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளேன். இதனால் பணப் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால், எனது வங்கிக் கணக்கு வைத்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி கிளையை அணுகினேன்," என்றார்.

"வங்கி மேலாளரிடம் வீட்டு‌மனை மற்றும் நில பத்திர விவரங்களை காண்பித்து, வங்கிக் கடன் உதவி தொடர்பாக பேசியபோது, உங்களுக்கு இந்தி தெரியுமா(Do you know hindi) என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

எனக்கு இந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என்று பதில் அளித்தேன்.

பாலசுப்ரமணியம்

பின்னர், அவர் நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன். எனக்கு இந்தி தெரியும், மொழி பிரச்சனை இருப்பதால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது (I am from Maharashtra, I know Hindi. Language problem. Sorry I can't help you) என்று கூறிவிட்டார். பிறகு அங்கிருந்து நான் வந்துவிட்டேன்," எனக் கூறினார்.

நான் சமர்ப்பித்த நில பத்திர ஆதாரங்களை கூட அந்த மேலாளர் பார்க்கவில்லை. அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் பாலசுப்பிரமணியம்.

"இதுகுறித்து எனது வழக்கறிஞர் நண்பரிடம் கூறினேன். பின்னர் தற்போது வங்கி மேலாளருக்குச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில், கங்கைகொண்ட சோழபுரம் என்பது சோழ சாம்ராஜ்யம் தலைநகரமாக இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட இடத்தில் இருந்துகொண்டு ஒருவர் இதுபோன்று கேட்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது," என்கிறார் அவர்.

இதுகுறித்து அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷாலை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, "15 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம், எனக்கு சரியாக ஞாபகமில்லை. இது தொடர்பாக ஆய்வுசெய்து பதிலளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக