செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

minnambalam :மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.   வேளாண் மசோதாக்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். வேளாண் மசோதா நகலும் கிழித்து எரியப்பட்டது.     இதன் காரணமாக ராஜ்யசபா டிவி ஆடியோ இல்லாமல் மியூட் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.     எனினும், எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலமாக அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு இல்லத்தில் ஆலோசனை நடந்தது.

இந்த நிலையில் மாநிலங்களவை வெங்கய்ய நாயுடு தலைமையில் இன்று (செப்டம்பர் 21) மீண்டும் கூடியபோது, "மாநிலங்களவைக்கு நேற்று ஒரு மோசமான நாள். துணைத் தலைவர் உடல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டார். அவர் தனது கடமையைச் செய்யத் தடையாக எம்.பி.க்கள் இருந்தனர். இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், டெரிக் ஓ பிரைன் அவையிலிருந்து வெளியேறவும் அவர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, துணைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், ராஜ்யசபா விதிகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவித்த வெங்கய்ய, “அவை நடத்தை விதிகளை மீறிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரைன், டோலா சென், காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜு சதாவ், ரிபுன் போரா, சையத் நசீர் உசேன், ஆம் ஆம்மி உறுப்பினர் சஞ்சய் சிங், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் கே.கே.ராகேஷ், இளமாறன் கரீம் ஆகிய 8 பேரும் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்றும் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காலை 10 மணி வரை அவையை ஒத்திவைத்தார் மாநிலங்களவைத் தலைவர்.

எழில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக