திங்கள், 21 செப்டம்பர், 2020

திராவிட வித்தியாசாலை.. சுன்னாகம் யாழ்ப்பாணம்

 யாழ்ப்பாணம் வட்டுக்கோடடையை சேர்ந்த திரு மு.சி .ராசரத்தினம் 1905 இல் கல்கத்தா பல்கலை கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பி 1906 ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆசியராக பணியில் இணைந்தார். பின்பு வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். 

அதே காலக்கட்டத்தில் சட்டம் பயின்று  1911 ஆண்டு வழக்கறிஞராகவும் பணியாற்ற தொடங்கினார்.

1923 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்தி சங்கம் ஏற்படவும் காரணமாக இருந்தார் . சம்பந்தர் வித்தியாலயம் திருநாவுக்கரசர் வித்தியாலயம் என்பன சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உருவானவையாகும்.

சைவ வித்தியா விருத்தி பாடசாலைகளில் சைவ சூழ்நிலைகளில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்று கூறப்பட்ட போதிலும் . அவை தாழ்த்தப்பட்டமாணவர்களை அனுமதிக்கவில்லை.

 அவர்கள் தொடர்ந்தும் மிஷனரி பாடசாலைகளுக்கே செல்ல முடிந்தது. அத்துடன் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுதலை பெற மதம் மாறி செல்லும் நிலைமையும் இருந்தது.  இந்த நிலையில் அவர்களுக்கு சுயமரியாதையும் கல்வியும் முன்னேற்றமும் கிடைப்பதே அவர்கள் சைவ சமயத்தில் தொடர அவசியம் என்று உணரப்பட்டது.


அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் 1926 இல் உருவானது. . அச்சங்கத்தின் ஆரமப தலைவராக திரு மு சி ராசரத்தினம் இருந்தார் . அக்காலத்தில் அவர் சைவ வித்தியா விருத்தி சங்க செயலாளராகவும் இருந்தார்.  

அதே சமயம் சம ஆசனம் . சமபந்தி போசனம். ஆலைய நுழைவு போராட்ட காலங்களுக்கு முன்பிருந்த சாதீய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்தி கொண்டு மு சி ராசரத்தினம் செயல்ப்பட்டார் என்பதை கவனிக்கவேண்டும். 

1927 இல் காந்தியார் இலங்கைக்கு வந்த பொழுது வரவேற்பு குழுவில் ராசரத்தினமும் இருந்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் சார்பில் ஆரம்பிக்கப்படட பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 27 - 11  -1927 இல் நடந்தது.

அந்த பாடசாலையின் பெயர் "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை" 

இப்பாடசாலை கட்டுவதற்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த இந்து போர்ட் ( சைவ வித்தியா விருத்தி சங்கம்)  எட்டு மாதங்களாகியும்  உறுதி அளித்தபடி நிதி அளிக்கவில்லை என்று 1928  திராவிடன் ஆவணி இதழில் மனவருத்தத்துடன் ஆசிரிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

 ( 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.)

இந்த பதிவில் இங்கே குறிப்பிட்டிருப்பது சிறு குறிப்பு மட்டுமே .இது பற்றி போதிய வரலாற்று செய்திகள் உள்ளன என்று தெரிகிறது . இது பற்றிய விபரங்கள் தெரிந்தோர் பொதுவெளிக்கு இந்த செய்திகளை கொண்டுவரவேண்டும்  என்று கேட்டு கொள்கிறேன்.. 

Thillainathan Kopinath  அவர்களின் தகவல்கள் அடிப்படையில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக