வியாழன், 10 செப்டம்பர், 2020

இந்தி தெரியாது போடா’ வாசகத்துடன் டி-சர்ட்டுகள்: திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்

‘இந்தி தெரியாது போடா’ வாசகத்துடன் டி-சர்ட்டுகள்: திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்
இந்தி தெரியாது போடா வாசகத்துடன் கூடிய டி-சர்ட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.   திருப்பூர் :   
திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் விஷயங்கள் மற்றும் சம்பவங்கள், காட்சிகள் போன்றவற்றை இந்த இளம் வயதினர் எடுத்துரைக்கும் வகையில் டி-சர்ட்டுகளை தயார் செய்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் வடிவேலுவின் பிரண்ட்ஸ் திரைப்பட கதாபாத்திரமான நேசமணி என்ற பெயரை பயன்படுத்தி டி-சர்ட்டுகளை தயார் செய்தனர். இந்த டி-சர்ட்டுகளுக்கு வெளிநாடுகள் வரை அதிக வரவேற்பு கிடைத்தது. இதன் விற்பனையும் அதிகரித்தது. இவ்வாறாக சமூக வலைதளங்களில் காமெடியாக இருப்பதும், சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் சம்பவங்களை மையப்படுத்தியும் என அனைத்து கோணங்களிலும் திருப்பூரில் சில நிறுவனங்கள் ஆடைகளை தயாரித்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய தி.மு.க. எம்.பி. கனிமொழியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா? என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதனால் இந்தி குறித்து சமூக வலைதள வாசிகள் இடையே மீண்டும் பரபரப்பான விவாதங்கள் ஏற்பட்டது. குறிப்பாக திரைப்பட பிரபலங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. மேலும். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் இந்தி திணிப்புக்கு எதிரான டி-சர்ட்டுகளை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் டி-சர்ட்டுகள் அணிந்த புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.

டி-சர்ட்டில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவர் படம் மற்றும் வாசகம்.

ஐ. ஆம். ஏ. தமிழ் பேசும் இந்தியன் ( I am a தமிழ் பேசும் Indian ), இந்தி தெரியாது போடா ( Hindi theriyathu Podaa ) என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி- சர்ட்டுகளை இவர்கள் அணிந்திருந்தார்கள். இந்த டி-சர்ட்டுகள், தமிழகம் மற்றும் வெளிநாடு தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டை பலரும் விரும்பி அணிந்து வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்துக்கு, இதுபோன்ற டி-சர்ட்டுகளை தயார் செய்து தரக்கூறி ஆர்டர்கள் வந்தவாறு இருக்கிறது. இதனால் தற்போது டி-சர்ட்டுகள் விற்பனையும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இது குறித்து பிரிண்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:-

இந்தி தெரியாது போடா ( Hindi theriyathu Podaa ) என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டுகளை கேட்டு, தமிழகம் மட்டுமின்றி அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது. இதுவரை 6 ஆயிரம் டி-சர்ட்டுகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆர்டர்கள் வந்தபடி உள்ளது. நேற்று மட்டும் அமெரிக்காவில் இருந்து 5 ஆயிரம் டி-சர்ட்டுகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது.

ஒரு டி-சர்ட்டின் விலை ரூ.200-க்கு விற்பனை செய்து வருகிறோம். ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், அதிகளவில் டி-சர்ட்டுகளை தயாரித்து இருப்புவைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் காரணமாக தற்போது டி-சர்ட்டுகள் தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல் மொழியை கற்பது என் உரிமையடா என்ற வாசகம் அச்சிட்ட டி-சர்ட்டுகளும் திருப்பூரில் தயாராகி வருகிறது. இதற்கும் ஆதரவு கிடைத்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக