வியாழன், 17 செப்டம்பர், 2020

நி்தின் கட்கரிக்கு கொரோனா: நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்!

 கட்கரிக்கு கொரோனா: நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்!

minnamblam :மத்திய அமைச்சர் நி்தின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 50 லட்சத்துக்கு அதிகமானோர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுபோலவே அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று நான் பலவீனமாக உணர்ந்ததைத் தொடர்ந்து மருத்துவரை அணுகினேன். அங்கு சோதனை செய்யப்பட்டதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரின் ஆசீர்வாதங்கள், நல்வாழ்த்துக்களுடன் இப்போது நலமாக இருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி துவங்கிய நிலையில், அப்போது எடுக்கப்பட்ட சோதனை முடிவில் 17 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர்களால் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் உண்டானது.

அந்த சமயத்தில் நிதின் கட்கரிக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. நாக்பூரில் எடுக்கப்பட்ட சோதனை முடிவில்தான் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14ஆம் தேதி அவை நடவடிக்கைகளில் நிதின் கட்கரி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக