சனி, 12 செப்டம்பர், 2020

இந்திய – சீன மோதல் உண்மை நிலை என்ன? -சாவித்திரி கண்ணன்

 

aramonline.in : சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்!

ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அளவுக்கு சூழல் மோசமாகியுள்ளது. உண்மையில் இது மிகவும் கவலைக்குரியதாகும்!

இந்திய சீன விவகாரத்தை தொடர்ந்து பார்த்து எழுதி வருபவன் என்ற வகையில்,இந்த விவகாரத்தை ஒளிவு மறைவின்றி, பட்டவர்த்தனமாக பேச வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று முக்கிய அம்சங்களை தற்போதைய பதற்றத்திற்கு காரணமாக பார்க்கிறேன்.

# 2019 தேர்தலுக்கு முன்பு பாகிஸ்தான் உடனான ஒரு மோதல் இந்தியாவில் தேசபக்தியை தூண்டி ஓட்டு வேட்டையாட உதவியதை போல சீனாவை சீண்டிப் பார்த்து, சீன் போட மோடி அரசு முயற்சிப்பது!

# தெற்காசியாவில் சீனாவிற்கு இணையான இராணுவ பலமுள்ள நாடாக இந்தியா தன்னை காட்ட விரும்புவது!

# அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகியவை சீனாவை எதிர்ப்பதற்கு இந்தியாவை ஆதரிக்க தயார் நிலையில் இருக்கின்ற காரணத்தால்,இந்தியா சற்றே ஆபத்தான அபரேஷன்களில் தன்னை ஈடுபடுத்தி பார்ப்பது!

இதன் விளைவு என்னவாகும்? இது சரியான அணுகுமுறை தானா? என்பதை தான் இக்க்கட்டுரை ஆய்வு செய்கிறது.

முதலாவதாக இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போது இராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிற சூழலில் ஒரு யதார்த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.பொருளாதார ரீதியிலும்,தன்நிறைவிலும் சீனா ஒரு மிக பலமுள்ள நாடாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. இந்தியாவின் ஜிடிபியை விட சீனாவின் ஜிடிபி ஐந்து மடங்கு அதிகம் என்பது கவனத்திற்குரியது.

சீனாவுடனான மோதல் மூலம் இந்திய மக்களின் தேசபக்தியை தூண்டி ஆதாயம் பார்க்கலாம் என பாஜக அரசு நம்புமானால், அது ஆதாயமாக மாறுவதற்கு பதிலாக ஆபத்தாக முடியும் அபாயமே அதிகம்!

மேலும்,அமெரிக்காவும்,ஜப்பானும்,ஆஸ்திரேலியாவும் நம்மை தூண்டிவிட்டு தங்கள் சொந்த பகைமைக்கு இந்தியாவை பலிகடாவாக்கிவிட வாய்ப்புள்ளது! நான் சொல்வதை சரியாக விளங்கி கொள்ள இந்த கட்டுரையை சற்றே கவனமாக படியுங்கள்!

கடந்த 58 ஆண்டுகளாக இல்லாத வகையில் மீண்டும் எல்லையில் சீனாவும்,இந்தியாவும் தங்கள் படைகளைக் குவித்து வருகின்றன! மிகச் சமீபமாகத்தான் மே மற்றும் ஜீன் மாதங்களில் சில அசாதாரண சம்பவங்கள்,மோதல்கள்,உயிரிழப்புகள் நடந்தேறின! அப்போது பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு அமைதி திரும்பியது! ஆனால்,அந்த அமைதி நிலைக்காது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சந்தேகப்பட்டதைப் போலவே மீண்டும் மோதல்கள்,பதட்டம் தொடர்கிறது!

இரண்டு அரசுகளுக்குமே அமைதியில் உண்மையான நாட்டம் இல்லை என்பதே யதார்த்தமாகும்! இன்றைய தினம் சீனா ஒரு உலகப் பெரிய வல்லரசாக உருமாற்றம் கொண்டு வருவதை இந்த உலகமே அறியும். அதை பார்த்து தானும் அது போல ஒரு வல்லரசாக மாற போட்டி போடுகிறது இந்தியா! இதன்படி உலகின் இராணுவ செலவுகளில் ஏழாவது நாடாக இருந்த இந்தியா இன்று தன்னை அமெரிக்கா,சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக தகவமைத்துவிட்டது!

அந்த வகையில் அதிகமான இராணுவத் தளவாடங்களை வாங்கி குவித்தது!எல்லைப் பகுதிகளில் அந்த தளவாடங்களைக் கொண்டு செல்ல புதிய சாலைகளை பல ஆயிரம் கோடி செலவில் போட்டது! இதற்குமுன்பிலாத வகையில் அதிக ராணுவ வீரர்களை எல்லையில் கொண்டு நிறுத்தியது என மோடி அரசு செய்த முஸ்தீபுகள் சீனாவிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஆச்சரியமில்லை!

சாதாரணமாகவே சீனா சகிப்புத் தன்மையற்ற ஒரு நாடு! அதுவும் அண்டை நாடுகளுடன் அதன் உறவுகள் குறித்து சொல்லவே வேண்டாம்! அதற்கு நல்ல பேரே கிடையாது. நம்ம மோடி அரசு ஏதோ ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக சும்மா தேசபக்தி பிலீம் காட்டப் போக இப்போது விளையாட்டு வினையாகி நிற்கிறது!

இந்தக் கட்டுரை சீனாவின் அசுரத்தன ஆக்கிரமிப்புகள் சிலவற்றை கூறுகிறது!

தன் அண்டை நாடுகள் அனைத்திற்குமே சீனா ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாகி வருகிறது.மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து உலக நாடுகளினது பொருளாதாரத்தையும் முடக்கி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் குயுக்தியைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான சீனாவின் வியூகங்கள்!

சீனா இந்தியாவின் எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமல்ல, அது தனது  ஆக்கிரமிப்பை அனைத்து அண்டை நாடுகளிடமும் செய்து கொண்டிருக்கிறது என்பது தான் அதிர்ச்சியளிக்கிறது!

சீனா ஏற்கனவே தனக்கருகில் இருந்த தீபெத்தை அந்த மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமித்தது! அதில் பாதிக்கப்பட்ட லட்சத்திற்கு மேற்பட்ட திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலமாகி வாழ்கின்றனர். ’’திபெத்தியர்களுக்கு இந்தியா அடைக்கலம் தந்ததை ஒரு போதும் மன்னிக்கமாட்டோம்’’ என தொடர்ந்து இந்தியாவை மிரட்டி வருகிறது சீனா!

2017 ல் பூடானின் டோக்லாம் பகுதியை திடீரென்று சீனா உரிமை கொண்டாடியபோது,இந்தியா பூடானுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்து அதை காப்பாற்றிக் கொடுத்தது.

தற்போது நேபாளத்திற்கு நெருக்குதல் கொடுத்து இந்தியாவிற்கு எதிராக அதை கொம்பு சீவி விட்டுக் கொண்டுள்ளது! இந்தியாவை எதிர்ப்பதற்கு பாகிஸ்தானையும்,இலங்கையையும் தனக்கான ஒரு களமாக அது பயன்படுத்தி வருகிறது.

அண்டை நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு

# தைவானை தனது பகுதி எனக் கூறி சில அத்துமிறல்கள் செய்து கொண்டிருக்கிறது சீனா! ஆனால்,தைவான் அரசும்,மக்களும் சீனாவைக் கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றனர்.

# ஹாங்காங்கிலும் சீனா ஆளுமை செய்வதை எதிர்த்து மக்கள் உயிரைக் கொடுத்து போராடி வருகின்றனர்!

# ஜப்பானுக்கருகிலுள்ள ஜப்பானுக்குச் சொந்தமான சிறிய தீவுகள் சிலவற்றையும் சீனா ஆக்கிரமித்துவிட்டது.

# தென் கொரியாவையும் அடிக்கடி பயமுறுத்திய வண்ணம் உள்ளது!

# சீங்கப்பூரையும் சீனா சீண்டிப்பார்த்து கலவரமடைய வைத்தது!

# வியட்நாம் கண்களிலும் விரலைவிட்டு ஆட்டியது.

# மலேசியாவை மண்டியிடச் சொன்னது.

# பிலிப்பைன்ஸை பீதி கொள்ள வைத்தது!

# இந்தோனேஷியாவை இரும்புக் கரம் கொண்டு அழுத்தியது.

இப்படியாக தென் சீனக் கடல் பரப்பெங்கனும் சீனா தன் கடற்படைகளை வலுப்படுத்தி ராணுவத்தளங்கள் அமைத்து வருவதில் 23 நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்ட போர்க் கப்பல்களைக் கொண்டு சீன கடற்படைகள் இடைவிடாது ரோந்து செய்வதானது அனைத்து ஆசிய நாடுகளையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடற்படையில் நம்பர் 1

கடற்படையை பலப்படுத்தியிருப்பதில் இன்றைய தினம் சீனாவை மிஞ்ச இன்னொரு நாடில்லை! ஏதோ,தென் சீனக் கடல்பரப்பில் மட்டும் தான் சீனா காலூன்றி நிற்கிறது என்பதல்ல! அதன் ஆக்டோபஸ் கரங்கள் பால்டிக் கடல்பரப்பு,கொரிய தீபகற்பம்,மத்திய தரைகடல் பகுதிகள்,பாரசீக வளைகுடா,மேற்கு பசிபிக்,ஆப்பிரிக்க கடல்பகுதி…என விரிந்து செல்கிறது….!

கம்போடியாவின் கடற்பகுதியில் சீனா எப்படி காலூன்றிவிட்டது! இதைப் போலத் தான் சீனா பல நாடுகளின் கடற் பிராந்தியங்களில் தன் கடற்படையை நிறுவியுள்ளது.அங்கே  போர்கப்பல்கள், அதி நவீன ராணுவத் தளவாடங்கள்,வானிலும், கடலுக்கடியிலும் சென்று தாக்கும் ஏவுகணைகள்…என யாவற்றையும் நிறுத்திக் கொள்கிறது. இந்த வகையில் கடற்படையை பொறுத்தவரை உலகில் அமெரிக்காவே சீனாவிற்கு அடுத்த நிலையில் தான் உள்ளது!

தற்போது இலங்கைக்கு அருகே செயற்கைத் தீவுகளைக் கட்டமைத்து, அங்கு தன் ராணுவத்தை நிறுத்தியுள்ளது சீனா.

இந்த வகையில் இலங்கை மட்டுமல்லாது இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், பங்காளதேஷ், மியான்மர்,மாலத்தீவு..ஆகிய அனைத்து நாடுகளிலுமே சீனா தன் கடற்படையை நிறுவியுள்ளது.இதற்கு மேலும் உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறு நிறுவியுள்ளது.லாவோசையும் லவட்டிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் நிலைமையோ இன்னும் பரிதாபம்! ’’இந்தியாவிடமிருந்து உன்னை பாதுகாக்கும் ஒரே சக்தி நான் தான்’’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சீனா இன்று பாகிஸ்தானையே ஆட்டுவிக்கும் நிலைமைக்கு போய்விட்டது.

சீனாவிடமிருந்து எச்சரிக்கையோடு விலகி நின்று, சரிசமமாக உறவாடும் ஒரே ஆசிய நாடாக இந்தியா தன்னை காட்டிக் கொள்வதை சீனாவால் ஜீரணிக்க முடியவில்லை!

தற்சார்பு இந்தியாவா? சீனாவை சார்ந்துள்ள இந்தியாவா?

சீனாவை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது என்று சொல்லதக்க வகையில் இந்தியா சகல விஷயங்களிலிலும் சீனாவை சார்ந்துள்ளது.அந்த அளவுக்கு சீனாவிடமிருந்து நாம் இறக்குமதி செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்.ஆனால்,அப்படியான இறக்குமதி வணிகத்தில் சீனாவுடன் கைகோர்த்திருப்பது பாஜகவின் முக்கியஸ்தர்களே! ஆக,இந்த நிலையில் இருந்து முதலில் நாம் வெளிவர வேண்டும்.இந்தியாவின் டாப் 30 யூனிகார்ன் ஸ்டாரப் கம்பெனிகளில் 18 சீனாவின் நிதியை நம்பித் தான் உள்ளது! தற்சார்பு பொருளாதாரத்தை பேசிக் கொண்டே தற்கொலை பொருளாதாரத்தை அமல்படுத்தி சீனாவை சார்ந்துள்ள தற்போதைய மோடி அரசு எல்லை பிரச்சினையில் சீனாவை சீண்டிப் பார்ப்பதைவிடுத்து ஆக்கபூர்வமாக செயலாற்ற முன்வர வேண்டும்!

மோதலுக்கு முற்றுபுள்ளி வைப்போம்

நம் தரப்பில் உள்ள தவறுகளைக் களைந்து பரஸ்பரம் நம்பகத்தன்மையை பேண முதல் ஆளாக நாம் முன் முயற்சி எடுக்க வேண்டும். சீனாவுடனான மோதல் இந்திய பொருளாதாரத்தை மீண்டெழ முடியாத படுபாதளத்திற்கு தள்ளிவிடும்.இராணுவ பலத்தில் மோதுவதை தவிர்த்து, அறிவுபூர்வமாக, புத்திசாலித்தனமாக இந்த பிரச்சினையை கையாள வேண்டும்! கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு என்னவிதமான இராஜதந்திரத்தை பின்பற்றியதோ அதை பின்பற்றினாலே கூட போதுமானதாகும்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக