ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

எடப்பாடி தரப்பு கொஞ்சம் இறங்கி வராதது, பன்னீர் தரப்புக்கு பயங்கர அதிர்ச்சி


 Veerakumar-  tamil.oneindia.com ::  சென்னை: கொரோனா நோய் பரவல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் நீட் தேர்வால் மாணவர்கள் பட்ட அவஸ்தை, பொருளாதாரப்
பிரச்சனை  இத்தனைக்கும் நடுவே, திடீரென எதற்காக நேற்று அதிமுக உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். இத்தனைக்கும் காரணம் இரண்டு போஸ்டர்கள் தான் என்றால் நம்ப முடியுமா? இரண்டுமே தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர், அம்மாவின் ஆசி பெற்ற முதல்வர் என்று பன்னீர்செல்வத்தை வாழ்த்திப் பாடி இருந்தது. அன்றைய தினம், அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகிய இருவர் வீடுகளுக்கும் மூத்த அமைச்சர்கள் மாறிமாறி விசிட் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
கூட்டறிக்கை இதன்பிறகு அன்று மாலையே பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். இருவரும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டதாலேயே உள்ளங்களும் இணைந்து விட்டது என்றுதான் அதிமுக தொண்டர்கள் நினைத்தனர். ஆனால், இப்போது புதிதாக தேனியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு, அதில் எடப்பாடி பழனிச்சாமி தான் நிரந்தர முதல்வர் என்று சொல்லப்பட்டதால் மீண்டும் சூடு பறந்தது அரசியல் களம்.
தேர்தலுக்கு முன்பு தேர்தலுக்கு முன்பு பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கும் நிலையில், யார் முதல்வர் என்று முடிவு எடுக்காமல் தேர்தலை சந்திப்பது இயலாத காரியம். தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளும் இப்படியான சூழலில் தலைமைக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து தான் நேற்று ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில், உயர்மட்ட குழுவுக்கு ஏற்பாடு செய்திருந்தது அதிமுக தலைமை.


ஆதரவு கோஷம் அதிமுக கூட்டம் ஆரம்பித்தபோதே அதிரடிதான். எடப்பாடி பழனிச்சாமி வரும்போது, நிரந்தர முதல்வர் வாழ்க.. என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்ப, பன்னீர்செல்வம் வரும்போது அம்மாவின் ஆசி பெற்ற முதல்வர் வேட்பாளர்.. என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்ப, ஆடிப் போயினர் அதிமுக தொண்டர்கள்.


அனல் பறந்த அதிமுக கூட்டம் அனல் பறந்த அதிமுக கூட்டம் வெளியே இப்படி என்றால், கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு உள்ளே இன்னும் அனல் பரந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பும் முதல்வர் வேட்பாளர் தாங்கள்தான் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளனர். இத்தனை வருடங்களாக தொடர்ந்து முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, அவருக்குத்தான் மக்கள் ஆதரவு இருப்பதாக கூற, ஜெயலலிதா கைகாட்டி முதல்வராக இருந்தபோதும், அவரது மறைவுக்குப் பிறகு முதல்வராக இருந்தபோதும் பன்னீர்செல்வம் செய்த பணிகளை அவரது தரப்பு நினைவுகூர்ந்து, அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கம் என்று பதிலடி கொடுக்க.. பரபரத்து போய்விட்டது ராயப்பேட்டை.


11 பேர் குழுவிற்கு மறுப்பு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை அமைக்கலாம் என்று பன்னீர்செல்வம் தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது. அணிகள் இணைந்தபோது ஒப்புக் கொண்ட வாக்குறுதி இது என்று ஓபிஎஸ் தரப்பு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது. அதிலும், 6 பேர், அதாவது பெரும்பான்மைக்கும் மேற்பட்டோர் பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து இருக்கும் என்றுச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழு வேண்டாம் என்று ஒரே போடாக போட்டுவிட்டது எடப்பாடி தரப்பு. குழு அமைப்பது, உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது என்று இது தேவையில்லாத தலைவலி என்று கூலாக சொல்லிவிட்டதாம் முதல்வர் தரப்பு. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொஞ்சம் இறங்கி வராதது, பன்னீர்செல்வம் தரப்புக்கு பயங்கர அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்

செயற்குழு கூட்டம் முதல்வர் வேட்பாளரை யார் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யப்பட முடியவில்லை என்பதால்தான் வரும் 28ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது அந்த கட்சி. இதற்கு இடையே, முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவும், அல்லது முதல்வர் பதவியை மறுபடி பெறவும், இருதரப்பும் என்னென்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்றைய கூட்டத்தில் இரு தரப்பும் மறுதரப்பின் எண்ண ஓட்டத்தை நன்கு தெரிந்து கொண்டு விட்டது. அது டிரைலர் மட்டும் தான். இனிமேல் தான் மெயின் மேட்டருக்கு இருதரப்பும் வரப்போகிறது. அது தான் மெயின் பிக்சர். எனவே, அடுத்தடுத்து வரும் நாட்களில் இருதரப்பும் எந்த மாதிரி காய்நகர்த்தலில் ஈடுபட போகிறது என்பதில்தான் அதிமுக எதிர்காலம் இருக்கப்போகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் தரப்பு, எந்த மாதிரி மூவ் எடுத்து வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக