திங்கள், 21 செப்டம்பர், 2020

சாத்தான்குளம் இளைஞர் கொலை உறவினர்கள் போராட்டம் ...

     .hindutamil.in/ :தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த நான்கு நாட்களாக நீடித்த பிரச்சினை இன்று முடிவுக்கு வந்தது. மாவட்ட  ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சடலத்தைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32). இவர் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 17-ம் தேதி காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரது தாய் எலிசபெத் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட செல்வன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தப் போராட்டம் இன்று 4-வது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகத் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும் களத்தில் இறங்கினார். நேற்று இரவு 8 மணி முதல் செல்வனின் உறவினர்களோடு அமர்ந்து எம்எல்ஏவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இரவு முழுவதும் அங்கேயே இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவாக வரத் தொடங்கின. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்பி எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜலெட்சுமி, திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, காங்கிரஸ் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் மகேந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. செல்வனின் மனைவிக்குத் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குப் பசுமை வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொத்துப் பிரச்சினை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தித் தீர்வு காணப்படும். இந்தக் கொலை வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என ஆட்சியர் உறுதியளித்தார்.

இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு, செல்வனின் உடலைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக