சனி, 26 செப்டம்பர், 2020

எங்களின் கோவணத்தைப் பறிக்காதே..! - அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்!


nakkeeran : மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்

தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில், விவசாயிகள் பட்டை நாமம் போட்டுகொண்டு, மண் சட்டியோடு, அரை நிர்வாணக் கோலத்தில் ஏர் கலப்பையைத் தூக்கியவாறு ஊர்வலமாக வந்து சாலை மறியல் செய்தனர். விவசாயகளின் கோவணத்தை பறிக்காதே! என்று முழக்கமிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசின் விவசாயகளுக்கு எதிரான சட்டத்தைத் திருப்பப் பெறக் கோரி ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை தலைமையில், ஊரணிபுரம் கடைவீதியில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுவட்டார கிராம விவசாயிகள், மண் சட்டியில் பட்டை நாமத்துடன் அரை நிர்வாணக் கோலத்திலும் ஏர் கலப்பையை சுமந்தும் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக் கோரி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். "மோடி அரசே! எடப்பாடி அரசே! பறிக்காதே! பறிக்காதே.! விவசாயகளின் உரிமையைப் பறிக்காதே..!விவசாயிகளின் கோவணத்தைப் பறிக்காதே!" போன்ற முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக