செவ்வாய், 15 செப்டம்பர், 2020

சென்னை சாலையில் மின்கசிவால் உயிரிழந்த பெண்!

minnambalam :சென்னையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அலிமா என்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அலிமா தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை என்று அவரது சகோதரி வேதனை தெரிவித்துள்ளார்.     சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா (35). இவரது கணவர் ஷேக் முகமது. இவர்களுக்கு அப்துல் ரகுமான்(10) என்ற மகன் உள்ளார். அலிமா கணவர் மற்றும் மகனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். புளியந்தோப்பு நாராயண சாமி தெருவில் வசிக்கும் ஷாகிரா பேகம் என்பவரது வீட்டில் அலிமா வீட்டு வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்றும் (செப்டம்பர் 14) வேலைக்குச் சென்றுள்ளார்.

மழை காரணமாகச் சாலையின் நடுவே தண்ணீர் நின்றதால் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். பூமிக்கு அடியில் போடப்பட்ட மின்சார கேபிளில் இருந்து அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதை அறியாமல் நடந்து சென்ற அலிமா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகின. அதில் சாலையில் தண்ணீர் நின்று கொண்டிருப்பதால், ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பிடித்துக்கண்டு மெதுவாக் அலிமா நடந்து வருவதும் திடீரென மின்சாரம் தாக்கி சுருண்டு விழுவதும் பதிவாகியுள்ளது. அதோடு அவரை கண்டதும் அந்த தெருவில் நடந்து வந்த மற்ற இருவர் அதிர்ச்சியடைந்து நிற்கின்றனர். இந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், “இந்த பகுதியில், 10 நாட்களுக்கும் மேலாக மின் கசிவு இருப்பதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே ஒரு மூதாட்டியும், சிறுமியும் மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகினர். நல்வாய்ப்பாக அவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை” என்றும் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் வேலைக்காகச் சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்கசிவு சரி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மின்கசிவு குறித்து புகார் அளித்தும் சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக