வெள்ளி, 4 செப்டம்பர், 2020

விஜயகாந்த் மச்சான் சுதிஷ் பகிர்ந்த கார்ட்டூன்! -திமுகவினர் கொந்தளிப்பு -பல்டி அடித்த சுதீஷ்!

nakkheeran.in  :தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. 

விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ்!

அந்த கார்ட்டூன் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக  தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள்.        அரசியல் கட்சிகளிடத்தில்  சர்ச்சைகளையும் எதிரொலிக்க செய்கிறது சுதீஷின் கார்ட்டூன்.

இதுகுறித்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப இணையத்தள பிரிவின் மாநில துணை அமைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.எஸ்.சேகரிடம் பேசியபோது, "அந்த கார்ட்டூனை பார்த்ததும் பதறிப்போனேன். நெஞ்சம் துடிக்கிறது. விஜயகாந்த் மச்சான் சுதீஷுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி ஒரு கார்ட்டூனை பதிவு செய்திருப்பார்? இந்தியாவே வியந்து பார்த்த தலைவர் கலைஞர். பல பிரதமர்களை உருவாக்கியவர். 2 கோடி தொண்டர்கள் கொண்ட திமுகவின் பிதாமகனாக இருந்தவர் கலைஞர். அவரை இழிவு செய்வது போல கார்ட்டூன் வரைந்திருப்பது அநாகரீகத்தின் உச்சம். அரசியல் அனாதைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சிந்தனை வரும்."

ரிடம் கூட்டணி வைப்பது? எந்த கூட்டணியில் கோடிகள் கிடைக்கும் என சுற்றி திரிந்தும் எந்த அரசியல் கட்சியும் தேமுதிகவை சீண்டாததால் விஜயகாந்தும் அவரது குடும்பமும் அரசியல் அனாதைகளாக இருக்கின்றனர். அதனை ஜீரணிக்க முடியாமல்தான் சுதிஷ் இப்படி கார்ட்டூன் போட்டுள்ளார். 15 லட்சம் தேமுதிக தொண்டர்களை ஜெயலலிதாவிடம் பல கோடிகளுக்கு அடகு வைத்தும், ஜெயலலிதாவின் காலில் விழுந்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த கதை எங்களுக்கு தெரியும். ஜெயலலிதாவால் அரசியல் வாழ்வு பெற்ற விஜயகாந்தும், சுதிஷும் அதே ஜெயலலிதாவை தோற்கடிக்க, கலைஞர் காலில் விழுந்த கதையும் எங்களுக்குத் தெரியும். 

 

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துக்கொள்ள 15 லட்சம் தேமுதிக தொண்டர்களும் ஒருமித்த ஒப்புதலை தந்தபோது, அதற்கு மாறாக, போயஸ் கார்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பல நூறு கோடிகளை பெற்றுக் கொண்டு 'மக்கள் நல கூட்டணி' யை உருவாக்கியவர் விஜயகாந்த். தேமுதிக தொண்டர்களை போயஸ் கார்டன் கொடுத்த கோடிகளுக்கு  விற்றவர்கள் சுதிஷும் பிரேமலதாவும். 

அப்படிப்பட்ட யோக்கிய சிகாமணியான சுதிஷுக்கு, கோடிக்கணக்கான தொண்டர்களால் உருவான மாபெரும் இயக்கமான திமுகவின் மறைந்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்த தகுதி கிடையாது. அரசியல் லாபங்களுக்காக நீங்கள் யார், யார் கால்களில் வீழ்ந்து கிடந்தீர்கள் என விவாதிக்க நான் தயார் ! நீங்கள் தயாரா? உடனடியாக அந்த கார்ட்டூனை சுதிஷ் நீக்க வேண்டும். இல்லையேல், எங்களின் எதிர்வினை வேறு மாதிரி இருக்கும்" என எச்சரிக்கும் வகையில் ஆவேசப்பட்டார் சி.எஸ். சேகர். 

 

சுதிஷின் இந்த அநாகரீகமான கார்ட்டூன் திமுக தரப்பில் பரவி வருவதால், திமுக தொண்டர்களின் கோபம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை அறிந்த சுதீஷ், அந்த கார்ட்டூனை முக நூல் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். 

 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தேமுதிகவினர், உடல்நல சிகிச்சைக்காக விஜயகாந்த் வெளிநாடு சென்றிருந்தபோது கலைஞருக்காக கண்ணீர் விட்டு அழுத வீடியோ வெளியானது. அதனை யாரும் அவ்வளவு சீக்கிரம் எளிதில் மறந்துவிட முடியாது. அதோடு மட்டுமல்ல வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், நள்ளிரவு நேரம் என்றுகூட பாராமல் உடல்நிலை முடியாத நேரத்திலும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியவர். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் மீது விஜயகாந்த் வைத்திருக்கும் மரியாதையை அவரது குடும்பத்தினர் புரிந்துகொள்ளவில்லை என்பது வேதனையாக இருக்கிறது என்றனர் கவலையுடன்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக