செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கலைஞரின் உதவியாளர் நித்தியா பேட்டி : நினைவெல்லாம் கலைஞர் .. மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கேன்.. வெறுமை சுடுகிறது

 Hemavandhana tamil.oneindia.com : சென்னை: " "டேய் நித்யா, மத்த நாளில் சரிடா, ஆனால் எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் என்னை விட்டுட்டு போகாதே.. அம்மா சங்கடப்படறாங்க பாரு" என்று ஐயா சொல்லும் போதுதான் என் தப்பு புரிந்தது.. அவர் என்னை திட்டி இருக்கலாம், கேள்வி கேட்டிருக்கலாம்.. அந்த நேரத்திலும் என் பொறுப்பை உணர்த்தியது என்னை பிரம்மிக்க வெச்சிடுச்சு" என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர்  குறித்து அவரது உதவியாளர் சிலாகித்து நம்மிடம் பேசுகிறார். 

கலைஞருக்கு  ஒரு நிழல் கூடவே பயணித்து வந்தது.. இந்த நிழல்  கலைஞர்  சிரித்தால் சிரிக்கும், அவர் துயருற்றால் பதைபதைக்கும்... படுக்கையில் சோர்வாக சாய்ந்தாலே துடிதுடிக்கும். இன்று நிஜம் கனவாகி போனதால் இந்த நிழல் தனது மனம் முழுக்க சோகத்தை இப்போதும் சுமந்து உலவி வருகிறது.

ஐயா கூடவே இருந்துட்டேன்.. நான் வேற என்ன செய்வேன்.. பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக பணிகளை செய்து வந்தாலும், தினமும் காலையில நேரா கோபாலபுரம் போயிடுவேன்.. 2 மணி நேரம் அங்கேயே உட்கார்ந்திருப்பேன்.. உள்ளே நுழையும்போதே மனசெல்லாம் கனத்து போய்விடும். அங்கே போகாமல் நான் இருந்தே கிடையாது..

 லாக்டவுன் சமயத்திலும் வீட்டில் இருந்து கிளம்பி வீட்டுக்கு போய்டுவேன்.. அதேபோல, ராத்திரி 8 மணி போல நினைவிடத்துக்கு போய்டுவேன்.. ஐயாவை பற்றின என்னென்னமோ நினைவுகள் கண்முன் வந்து போகும்.. 2 மணி நேரம் கழிச்சு, கலங்கிய கண்களுடன் வீட்டுக்கு வந்துடுவேன்... ஒருநாள் நினைவிடம் போகாவிட்டாலும் என்னால அன்னைக்கு நிம்மதியா தூங்க முடியாது.< கலைஞரிடம்  இருந்து நீங்கள் கற்று கொண்டது என்ன? ஏதாவது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு அட்வைஸ் தந்திருக்கிறாரா? 

நிறைய நிறைய சொல்லி இருக்கார்.. எனக்கு அவர் ஓர் ஆசான்.. ஒரே ஒரு உதாரணம் வேணும்னா சொல்றேன்.. எப்பவுமே காலையில கோபாலபுரம் போனால், நைட் 9 மணிக்கு நான் என் வீட்டுக்கு கிளம்பி வந்துடுவேன்.. 2006-ம் வருஷம்னு நினைக்கிறேன்.. ஒருமுறை அவருக்கு பல் சம்பந்தமான பிரச்சனை வந்தது.. அதனால் டாக்டர் கிட்ட போயி ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க.. ராத்திரி 9.30 இருக்கும், "ஐயா நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா"ன்னு கேட்டேன்.. உடனே அவர், "அப்படியா, சரி என்னை படுக்க வெச்சிட்டு போ"ன்னு சொன்னார்.. நானும் அவரை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, கிளம்பி வந்துட்டேன்..

 மறுநாள் காலை வழக்கம்போல 6 மணிக்கு வீட்டுக்கு போனேன்.. ஆனால், அம்மா என்கிட்ட சரியா முகம் கொடுத்து பேசல.. எனக்கு கஷ்டமா போச்சு.. ஏன்னு காரணமே தெரியாம, நான் ஐயா ரூமுக்கு போனேன்.. அப்போ ஐயா சொன்னார், "டேய் நித்யா, மத்த நாளில் சரிடா, ஆனால் எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் என்னை விட்டுட்டு போகாதே.. அம்மா சங்கடப்படறாங்க பாரு" என்றார். என் தப்பு எனக்கு அப்பதான் புரிந்தது.. அவர் என்னை திட்டி இருக்கலாம், கேள்வி கேட்டிருக்கலாம்.. அந்த நேரத்திலும் என் பொறுப்பை உணர்த்தியது என்னை பிரம்மிக்க வெச்சிடுச்சு.

பல்லாவரத்தில் ஒரு வேட்பாளரையே பரிந்துரை செய்தீங்களாமே.. அந்த அளவுக்கு உங்கள் மேல அவருக்கு பிரியமா? 
ஆமா.. இன்னொரு உதாரணமும் என்னால சொல்ல முடியும்.. காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சறை ஒன்றியத்தை சேர்ந்தவர் ஞானமணி.. கட்சியின் தீவிர விசுவாசி அவர்.. ஒருமுறை அவரை கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானமணி, உடனே என்கிட்ட வருத்தப்பட்டு சொன்னார்.. நான் ஐயாகிட்ட கிட்ட பேசறதா சமாதானம் சொன்னேன்.. அன்னைக்கு ராத்திரி மணி 12.30 இருக்கும்... படுக்கையறையில் நானும், ஐயாவும் மட்டும் பேசிட்டிருந்தோம்.. இதை சொல்லாமா, வேணாமா என்று தயங்கியவாறே, மெல்ல பேச்செடுத்தேன்.. "ஐயா, ஞானமணியை கட்சியில் இருந்து எடுத்துட்டாங்களாம், ஆனால் அவர் நேர்மையானவர், கட்சிக்காக பாடுபடுபவர்.. வலுவான காரணம் இல்லாமல், ஒரு துடிப்பான தொண்டனை கட்சியில் இருந்து நீக்கினது கஷ்டமா இருக்கு" என்றேன்..
 "அப்படியா".. என்று கேட்டவர், உடனே கீழே இன்டர்காம் மூலமாக உதவியாளருக்கு போன் செய்து, முரசொலி எடிட்டர்க்கு போன் தர சொன்னார்.. "ஞானமணியை கட்சியில் இருந்து நீக்க சொல்லி ஏதாவது அறிவிப்பு வந்திருக்கா? அப்படி வந்திருந்தா, அதை நிறுத்தி வைங்க.. காலைல பார்த்துக்கலாம்" என்றார்.. ஐயா இப்படி பேசும்போது ராத்திரி ஒரு மணி.. அந்த நேரத்துல போன் பண்ணி பேசுவார்னு நான் எதிர்பார்க்கல.. ஒரு தீவிர தொண்டனை இழந்துட கூடாதுன்னு ஐயா காட்டின அக்கறை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. 
 
கலைஞருக்காக  அரசாங்க பணியான ஏபிஆர்ஓ வேலையை நீங்க இழந்துட்டீங்களாமே? ஏன் நல்ல வேலை, நல்ல சம்பளம்தானே? ஆமா உண்மைதான்.. அந்த வேலையில் இப்போ இருந்திருந்தால் 70 ஆயிரம் சம்பளம் கிடைச்சிருக்கும்.. ஐயா இருக்கும்போது அந்த வேலையை போட்டு தந்தாங்க.. ஆட்சி முடிந்தபிறகு நான் அந்த வேலைக்கு போய் ஜாய்ன் பண்ணியிருக்கணும்.. ஆனால், ஐயாவை விட்டு போக எனக்கு மனசில்லை.. அதனால அந்த வேலைக்கு நான் போகாததால், ஆளும் கட்சியில் என்னை அந்த வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க... எல்லாமே ஐயாதான்னு இருந்துட்டேன்... ஐயாவுக்காக அந்த வேலை போனதில் எனக்கு கொஞ்சமும் வருத்தம் கிடையாது


உங்களுக்காக எதுவும் கலைஞரிடம்  பதவி எதுவும் கேட்டு வாங்கிக்கலையா? இல்லை.. எனக்காக எப்பவும் எதுவுமே அவர்கிட்ட கேட்டது இல்லை.. ஆனால், ஒரு சம்பவம் மட்டும் சொல்றேன்.. பல்லாவரம் சட்டமன்ற தொகுதி 2011-உருவானபோது, ஐயா அங்கே நிக்கணும்னு ஆசைப்பட்டு, அதை அவர்கிட்ட சொன்னேன். அதுக்கு அவர், "இல்லடா.. நான் திருவாரூரில் போட்டியிடறேன்.. நான் உனக்கு சீட் தர்றேன்.. நீ வேணும்னா பல்லாவரத்துல நில்லுடா"..ன்னு சொன்னார்.. ஆனால் நான் மறுத்துட்டேன்.. "உங்க கூட இருந்து பணிவிடை செய்றதுதான் எனக்கு பெரிய பாக்கியமா நினைக்கிறேன்.. டேய் நித்யான்னு நீங்க கூப்பிடறதுதான் எனக்கு பெருமை ஐயா"ன்னு சொல்லிட்டேன். அந்த வாய்ப்பையும் நான் ஏத்துக்கல. திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறீர்களா?

ஐயா உடலை நல்லடக்கம் செய்யும்போது, குடும்பத்தினர் மட்டுமே செய்யும் இறுதி மரியாதையை என்னையும் அழைத்து செய்ய சொன்னவர் தளபதி.. குடும்பத்தில் அந்த அளவுக்கு ஒருத்தனா என்னை நினைக்கிறவங்க.. கொஞ்ச நாள் முன்னாடிகூட என்னை கூப்பிட்டு பேசினார்.. "எத்தனை நாள் இப்படியே இருப்பே? ஐயா இருக்கும்போதுதான் கல்யாணம் வேணாம்னு தள்ளி போட்டே... சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ" என்று உரிமையுடன் கண்டித்தார்.. "நீங்க முதல்வர் ஆனதும் உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்லி இருக்கேன்.. நிச்சயம் அவர் முதல்வர் ஆவார்.. தளபதி தலைமையில்தான் என் கல்யாணம் நடக்கும்" என்று நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார் நித்யா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக