செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ஸ்டாலின் கனிமொழிக்கு அழைப்பு... எனக்கு இல்லையா?!' - கொதித்த குஷ்பு . சத்தியமூர்த்தி பவனில் மறைந்த வசந்தகுமார் எம்.பி-யின் உருவப் படம்

 


  vikatan.com - ஆ.விஜயானந்த் : காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உருவப்


படத்திறப்பு விழாவையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அடுத்த மோதல் அரங்கேறத் தொடங்கியிருக்கிறது. `எனக்கு படத்திறப்பு விழா பற்றி எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர்... நானே பேப்பரைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது' என ட்விட்டரில் கொந்தளித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த வசந்தகுமார் எம்.பி-யின் உருவப் படம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்வில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், எம்.பி-க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை மையமாக வைத்துத்தான் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் குஷ்பு.

`குஷ்புவுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை?' என காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டோம். ``அவரை அழைக்கக் கூடாது என்ற எண்ணம் யாருக்குமே இல்லை. முதலில், உருவப்படத் திறப்பு விழாவில் நான்கைந்து பேரை மட்டுமே அழைப்பதாக இருந்தது. ஆனால், நிகழ்ச்சி நடப்பதைக் கேள்விப்பட்டு, நிறைய பேர் வந்துவிட்டார்கள். இது ஒரு பெரிய நிகழ்வும் கிடையாது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் அழைக்கலாம் என நினைத்திருந்தோம். குஷ்பு வந்தாலும், அவரை எங்கே நிற்க வைப்பது, ஆறு பேருக்கு மேல் போட்டோ எடுக்கவும் முடியாது. கட்சிக் கூட்டம் என்றால்கூட அவர் கேள்வியெழுப்புவதில் நியாயம் உள்ளது. இது கொரோனா காலம், தனிமனித இடைவெளி போன்றவையும் முக்கியக் காரணங்களாக இருந்தன.

வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி
வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி

இருப்பினும், நாங்கள் எதிர்பார்க்காமலேயே கூட்டம் கூடிவிட்டது. தி.மு.க-போல எங்கள் கட்சியில் கட்டுப்பாடுகள் இல்லை. அவர்கள் சந்திப்புகளையெல்லாம் கட்டுக்கோப்புடன் நடத்துகிறார்கள். தவிர, கட்சியோடு குஷ்புவுக்கு நிறைய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அவரை அழைத்தாலும் வர மாட்டார். கட்சிக் கொடிக்கம்பம் ஏற்றியதற்கும் அவர் வரவில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் இருப்பார். இரண்டு முறை அழைப்புவிடுத்தும் வரவில்லையென்றால், மூன்றாவது முறை யாரும் அழைக்க மாட்டார்கள். படத்திறப்பு விழாவுக்கு குஷ்புவை அழைக்க வேண்டும் என்ற சிந்தனையும் தலைமைக்கு வரவில்லை" என்றனர்.


இதையடுத்து, குஷ்புவிடம் பேசினோம். `` சத்தியமூர்த்தி பவனில் சில நாள்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதற்கும் எனக்கு அழைப்பு வரவில்லை. இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் அங்கு நடந்துள்ளன. அதைப் பற்றியெல்லாம் நான் பேசியதில்லை. அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தவும் நான் விரும்பவில்லை.


குஷ்பு

ஆனால், ஒருவரின் மரணத்தைவைத்து இவர்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை. வசந்தகுமாரின் நாங்குநேரி தொகுதியாக இருக்கட்டும், கன்னியாகுமரியாக இருக்கட்டும்... அவருக்காக நான் எத்தனை முறை பிரசாரத்துக்குப் போனேன் என்பது அவருக்குத்தான் தெரியும். அவர் இறக்கும் நாள் வரையில், அவரின் குடும்பத்தாரிடம் போனில் பேசிவந்தேன். இது ஒரு பெரிய விஷயம் இல்லையென்றால், நீங்கள் யாரையுமே படத்திறப்பு விழாவுக்கு அழைத்திருக்கக் கூடாது.

மற்ற தலைவர்களை அழைத்திருக்கிறீர்களே... அவர்களுக்கு எப்படி அழைப்பு சென்றது... காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள ஒரே ஒரு தேசிய செய்தித் தொடர்பாளர் நான் மட்டும்தான். எனக்குத் தகவல் சொன்னார்களா? கட்சிக்காக உழைக்கும் எங்களையே ஓரங்கட்டினால், கட்சியை எப்படி பலப்படுத்துவது, மற்ற நேரங்களில் ஒதுக்கிவைக்கப்படுவதை நான் பெரிய விஷயமாகப் பார்க்கவில்லை. ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் அழைப்புக் கொடுத்ததால்தானே வந்தார்கள்?

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

என்னை அழைத்திருக்க வேண்டும்; அழைக்கவில்லை. எனக்கு வருத்தம்; வருத்தத்தை தெரிவித்துவிட்டேன். எனக்கு நியாயம் எனத் தோன்றியதைச் செய்துவிட்டேன். எனக்கு எந்த விஷயங்களுக்கும் அழைப்பு வருவதில்லை. எந்தத் தகவலும் சொல்லப்படுவதில்லை" என்றவரிடம்,

` வசந்தகுமாரின் இறுதி அஞ்சலியில் நீங்கள் பங்கேற்கவில்லை' என்கிறார்களே?

`` அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடலை எங்கே வைத்தார்கள்... சத்தியமூர்த்தி பவன் செல்லலாமென்றால், அங்கிருந்து காமராஜர் அரங்கத்துக்கு அவரது உடலைக் கொண்டு சென்றார்கள். அதற்கும் முறையான தகவல் இல்லை. அங்கிருந்து அவருடைய ஊருக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். சத்தியமூர்த்தி பவன் கொண்டு வருகிறோம் எனத் தகவலாவது சொன்னார்களா? என்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தேன்; மேலிடத்துக்கு டேக் பண்ணிட்டேன். புகார் கொடுப்பதற்காக ட்வீட் போடவில்லை. அதை வருத்தமாகத் தெரிவித்தேன். இப்படிச் செய்வது சரியில்லை. அதுவும் தேர்தல் வரப் போகிறது. எப்படிக் கட்சியை வளர்க்கப் போகிறீர்கள்... எப்படி பலப்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி" என்றார் கொந்தளிப்புடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக