புதன், 2 செப்டம்பர், 2020

“மாவீரன் பூலித் தேவன்” முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன்

  M
aha Laxmi
: இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில் பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் “மாவீரன் பூலித் தேவன்” பொதுவாக 1857-ல் தான் இந்திய விடுதலைப் போர் ஆரம்பித்ததாய்ச் சொன்னாலும் நூறாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டில் புரட்சிக்கான வித்து இடப்பட்டது. அதை முதன் முதலில் செய்தவர். 1750- ம் ஆண்டில் பூலித்தேவன் என்ற பாளையக்காரர் ஆவார். முதல் ஆங்கிலத் தளபதி ஆன “இன்னிஸ்” என்பவரை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போர்க்களமும் சென்றார். திருநெல்வேலிச் சீமையிலேயே அதிக சுதந்திரப் போராளிகள் இருந்திருக்கின்றனர் என்பதும் ஒரு முக்கியமான உண்மை ஆகும். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே, சங்கரன் கோவிலுக்குத் தென்மேற்கே, “நெற்கட்டான் சேவல்” என்னும் ஊரின் பாளையக்காரர் ஆன பூலித்தேவனின் தந்தை பெயர் சித்திரபுத்திரத் தேவன், தாயார் சிவஞானம் நாச்சியார். 1715-ல் பிறந்த இவர், மனைவி பெயர் கயல்கன்னி நாச்சியார். மூன்று மக்கட்செல்வங்கள். கோமதி முத்து தலவச்சி, என்ற பெண்ணும், சித்திரபுத்திரத் தேவன், சிவஞான பாண்டியன் என்ற இரு ஆண்மகன்களும் உண்டு.

அப்போது பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்தது கட்டபொம்மனின் தாத்தா, பின்னர் கட்டபொம்மனின் தந்தை ஜெகவீர பாண்டியன் ஆகியோர். கட்டபொம்மன் பிறக்கும் முன்னாலேயே ஆற்காடு நவாபுக்கும், ஆங்கிலக் கம்பெனியாருக்கும் கப்பம் கட்ட மறுத்துக் குரல் கொடுத்த முதல் பாளையக்காரர் பூலித் தேவன். உண்மையில் இவர் தான், “என் அப்பன், பாட்டன், பூட்டன் வாழ்ந்த இந்தப் பூமியில் வாழ்ந்து வரும் நான் எங்கிருந்தோ வந்த வெள்ளையர்களுக்கு ஏன் கப்பம் கட்ட வேண்டும்” என்று உரத்துக் குரல் கொடுத்தார்.

1755-ம் ஆண்டு, கப்பம் வசூல் செய்ய வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் ஹெரானோடு யுத்தத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய விடுதலைப் போரின் முதல் வெற்றியும் இதுவே. ஆனால் இந்தப் போர் இத்துடன் முடியாமல் தொடர்ந்து 15 ஆண்டுகள் நடந்தது. விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே இத்தனை நீண்ட போரோ, அல்லது முதல் கூட்டணியை அமைத்தோ யாரும் போர் தொடுத்ததாய் இல்லை. இவரே முதலில் அத்தகைய சாதனை புரிந்தார். போரில் பூலித் தேவனை வெற்றி கொள்ள முடியாத கும்பினியார், தங்கள் சார்பாகப் பூலித் தேவனுடன் சண்டை போட கான்சாகிபு (மருத நாயகம்) என்னும் தமிழனை அனுப்பி வைத்தனர். மூன்று ஆண்டுகள் கான்சாகிபு, பூலித் தேவனுடன் சண்டை போட்டார். தொடர்ந்து வெற்றி பெற்ற பூலித்தேவன் இறுதியில் 1761-ல் கான் சாகிபிடம் தோல்வி அடைந்தார்.

எனினும் கடலாடிக்குத் தப்பிய பூலித்தேவனைப் பிடிக்க முடியாமல் கோபம் கொண்ட கான்சாகிபு, பாளையூர், நெற்கட்டான் சேவல், வாசுதேவநல்லூர், ஆகிய ஊர்களில் இருந்த பூலித்தேவனின் கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கினார். ஆனால் காரணம் சரிவரத் தெரியாமலேயே கான்சாகிபு வெள்ளையர்களால் 1764-ல் தூக்கிலிடப்பட்டான்.

ஆகவே அவன் இறந்ததும் திரும்பி வந்த பூலித்தேவன், ஆட்சியைக் கைப்பற்ற, கோபம் கொண்ட கும்பினியார், 1767-ல் டொனால்டு காம்பெல் என்பவரை அனுப்பி பூலித்தேவனின் வாசுதேவநல்லூர்க் கோட்டையைக் கைப்பற்றித் தாக்க முற்பட்டனர். தொடர்ந்து பெய்த பெருமழையாலும், ஏராளமான வீரர்கள் இறந்ததாலும், எஞ்சிய படையுடன் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சென்று மறைந்து கொண்டார் பூலித்தேவன். மனைவி, மக்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர் கும்பினியாரால். மனைவி மரணம் அடைய, தீக்காயங்களுடன், மக்கள் காப்பாற்றப்பட்டு கும்பினியாருக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டனர். பின்னரும் மனம் கலங்காமல் கும்பினியாரை எதிர்த்துக் கொண்டே வந்தார் பூலித் தேவன். மக்கள் சக்தி அவர் பக்கமே இருந்தது.

நுண்ணறிவுடனும், நிதானத்துடனும், படைகளை நடத்திச் செல்லும் அறிவு கொண்ட பூலித்தேவன், ஆற்காடு நவாபின் சகோதரன் மாபூஸ்கான் தன்னிடம் சரண் அடைந்த போது அவனை இரு கரம் நீட்டி வரவேற்று அவனுக்காகப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார். எனினும் தலைமறைவாக இருந்த பூலித் தேவனைக் கைப்பற்றிச் சிறை எடுத்துப் பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்ற போது, இறை வழிபாடு செய்ய வேண்டி சங்கரன் கோவிலுக்குள் நுழைந்த பூலித்தேவன் பின்னர் திரும்பவில்லை என்று உறுதியாய்த் தெரியாத தகவல்கள் சொல்லுகின்றன. இதற்கு ஒரே அத்தாட்சி சங்கரன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள “பூலித்தேவன் அறை” ஒன்றே ஆகும்.

நமது சுதந்ததிரத்திற்குப் பாடுபட்ட முதல் வீடுதலை போராட்ட வீரரின் பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம்.

பகிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக