சனி, 5 செப்டம்பர், 2020

இந்தியாவில் 21 மொழிகள் அரசியல் அமைப்பால் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

Seeni Mohan
: மீண்டும் மீண்டும் எழுத சலிப்பாக இருக்கிறது. பல முறை சொல்லி முடித்த பின்னும் சிலர் (பலர்) ஜனநாயகம் குறித்த
போதாமையுடனேயே உரையாடுகிறார்கள். உதாரணத்திற்கு மொழி - சங்பரிவார் அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் மொழி குறித்த சரியான புரிதலுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் - பிகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கட், ஜார்கண்ட், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை இந்தி பேசும் மாநிலங்களாகவே புரிந்து கொள்கிறார்கள். பிஹாரி, போஜ்புரி, மைதிலி, மஹதி (பிகார்) கிழக்கின் இந்தி, மேற்கின் இந்தி, வ்ரஜ, அவதி, கடிபோலி (உத்தரபிரதேசம்) குமாஊங், கட்வாலி, பஹாடி ( ஹிமாசல பிரதேசம்) ராஜஸ்தானி, ஜயபுரி, மார்வாடி (ராஜஸ்தான்) ஹரியாணவி (ஹரியானா) போன்ற எல்லா மொழிகளையும் அழித்து கடிபோலியை முன்னிறுத்தி சமஸ்கிருதம் எழுதப்படும் தேவநாகரி எழுத்தில் எழுதி பார்ப்பனமயப் படுத்துதலைச் சரியான புரிதலுடன் தான் செய்கிறார்கள். (தலைநகர் தில்லி இதில் அடங்காது; அது முற்றாக கடிபோலி மயப்படுத்தப்பட்டு விட்டது)

ஐரோப்பாவில் தேசம் என்ற சொல்லாடல் மிகவும் முக்கியமானதும் அதனுடைய உண்மையான பொருளில் புரிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது. (தேசம் என்ற சொல்லுக்குப் பொறுத்தமான Nation என்ற சொல்லின் பொருளை ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் அகராதியில் பொறுத்திப் பார்க்க வேண்டுகிறேன்) அவர்களுடைய மொழி குறித்த புரிதல் மேன்மையாக இருப்பதற்கு தேசம் குறித்த புரிதலும் காரணம். ( இதன் காரணமாகவே இந்தியாவை தேசம் என்று வரையறுக்க முடியாமல் போகிறது.)  

  ஒரு ரஷ்ய நாட்டு இலக்கிய உதாரணம் சுட்டுவது பொருத்தமாக இருக்கும். அவார் என்று ஒரு பழங்குடி மொழி. வெறும் 10-15 ஆயிரம் பேர் பேசும் பேச்சு மொழி(Dialect) 1924 வரை அது பேச்சு மொழி தான். அதற்கு 1924 இல் வரிவடிவம் கொடுக்கப்பட்டது. அதன் பின் தான் அது மொழி (Language) என்ற வரையறைக்குள் வருகிறது. இப்போதும் 20-25 ஆயிரம் பேர் மட்டும் பேசும் ஒரு மொழி, இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வென்றிருக்கிறது. ஆம். 1982-83 இல் ரசூல் கம்சுதேவ் அந்த விருதைப் பெற்றார்.

இந்தியாவில் 21 மொழிகள் அரசியல் அமைப்பால் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழையோ, மலையாளத்தையோ, தெலுங்கையோ, கன்னடத்தையோ ஊடகமோ அல்லது தெருவில் போகிற எவனோ ஒருத்தனோ பிராந்திய மொழி என்று சொல்லும் போது அவர்களுடைய அறிவின் எல்லையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தி தேசிய மொழி என்ற சொல்லாடல் விபரீதமான பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது. இந்தியும் (அதாவது கடிபோலி) தேசிய மொழி தான். கூடுதலாக அலுவல் மொழியும்.( இது ஓர் அரசியல் ஏற்பாடு)

என்னுடைய மொழிக் கொள்கை மும்மொழியோ இரு மொழியோ அல்ல; ஒரு மொழி தான். அது தாய் மொழி மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்பதற்கு நான் எதிரியல்ல; உடனடியாக இல்லையெனினும் கூகுள் மொழி பெயர்ப்பாளன் விரைவில் மொழி பெயர்ப்பு பிரச்சினையும், மொழிப் பிரச்சினையும் தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கையுடன்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக