வியாழன், 20 ஆகஸ்ட், 2020

காங்கிரசின் பார்ப்பன பாசம் .. பிராமண சேத்னா பரிசத் .. காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாத் ...

.hindutamil.in:   உத்திரப்பிரதேசத்தின் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் துவங்குகிறது. இதில் பிராமணர்கள் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுக்க அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.  உபியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் பிராமணர்கள் ஆதரவு அரசியல் தலைதூக்கத் துவங்கி விட்டது. பாஜக ஆளும் அம்மாநிலத்தின் எதிர்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் பிராமணர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.   இதற்காகவே ‘பிராமண் சேத்னா பரிஷத்’ எனும் பெயரில் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாத் ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். அதன் சார்பில் அவர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் பிரசாத், உபியில் இதுவரை 700 பிராமணர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகப் புகார் கூறி இருந்தார். தொடர்ந்து பாஜக பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், உபி சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் துவங்குகிறது. இதில், பிராமணர்கள் பாஜக அரசால் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் ஜிதின் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் கடிதத்தில், ‘தம் கட்சிகளின் நிலைக்கும் அப்பாற்பட்டு அனைத்து எம்எல்ஏக்களும் பிராமணர்கள் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்.

உபியின் அனைத்து பகுதிகளிலும் பிராமணர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை தடுக்க அனைவரும்

சட்டப்பேரவயில் குரல் கொடுக்க வேண்டும்.’ என வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, தாம் புதிதாகத் துவக்கி நடத்தி வரும் பிராமண் சேத்னா சமிதியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஒரு புதிய தீர்மானத்தையும் பிரசாத் நிறைவேற்றி உள்ளார். அதில் 2022 சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பிராமணரை முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதுபோல், எதிர்கட்சிகளின் பிராமணர் விவகாரத்தை சமாளிக்க பாஜகவும் களம் இறங்கியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான உமேஷ் துவேதி, ‘ஏழை பிராமணர்களுக்காக பாஜக அரசின் சார்பில் காப்பீடு திட்டம் அமலாக்கப்படும்; என அறிவித்துள்ளார்.

மேலும், 700 பிராமணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உபி மாநிலக் காவல்துறை சார்பில் ஒரு புள்ளிவிவரம் கசிய விடப்பட்டுள்ளது. இதில் உபியில் இதுவரை நடைபெற்ற என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் தான் அதிகமாகக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

அப்புள்ளிவிவரத்தில், ‘கடந்த 42 மாதங்களில் நடைபெற்ற என்கவுண்டர்களில் 124 கிரிமினல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமாக 47 முஸ்லிம்கள் சுடப்பட்டுள்ளனர்.

11 பிராமணர்களும், 8 யாதவர்களும் மற்ற சமுதாயத்தினர் 58 பேர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில், தாக்குர், வைஷ்ணவர் தலீத் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடம் பெற்றுள்ளனர். கிரிமினல்களை ஒடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, ஜாதி, மதப்பேதங்கள் பார்ப்பதில்லை.’ எனக் கூறப்பட்டுள்ளது.

உபியில் இதுவரை பதவியில் இருந்த முதல் அமைச்சர்களில் பிராமணர்கள் அதிகம். இவர்களது சமூகத்தினர் உபியில் அதிகமாக 12 சதவிகிதம் இருப்பது அதன் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால், அயோத்தியின் ராமர் கோயில் கட்டத் துவங்கிய பின் பிராமணர்கள் வாக்குகள் பாஜக பக்கம் சாயத் துவங்குவதாக எதிர்கட்சிகள் அஞ்சுகின்றனர். இதை தடுக்கும்

முயற்சியில் அனைவரும் பிராமணர் ஆதரவு அரசியலை துவக்கி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக