வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

சட்டமன்ற சண்டமாருதம்.. அண்ணன் ரகுமான்கான்! திருச்சி சிவாவின் இரங்கற்பா

திருச்சி சிவா :கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் திருச்சி
சிவா அவர்கள் அண்ணன் ரகுமான்கான் அவர்களுக்கு எழுதியுள்ள இரங்கல் பா சட்டமன்ற சண்டமாருதம்! இன்று காலையிலிருந்து நினைவுகள் 1970 ன் பிற்பகுதி 80 ன முற்பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவசரநிலைக்காலம், அதைத் தொடர்ந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். தலைவர் கலைஞரின் பரவசப்படுத்தும் ராஜதந்திர அரசியல் நடவடிக்கைகள், கழகத் தோழர்களின் முழு ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, கழக நிர்வாகிகளின் அரவணைப்பு நிறைந்த முழுநேரப் பணிகள், மாலை நேரங்களில் எங்காவது ஒரு பகுதியில் தினந்தோறும் பொதுக்கூட்டங்கள். மாணவர் அணி நிர்வாகியாக கூட்டங்கள் ஏற்பாடு செய்து நடத்துவதும், கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுவது எனவும் வீட்டுக்குக் கூட செல்லாமல் கழகப்பணியே முழுநேரமும் என மிகுந்த ஈடுபாட்டுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள்.

என் போன்ற இளைஞர்களை அந்த காலகட்டத்தில் கழக முன்னோடிகள் ஊக்கப்படுத்தியதும், அன்பு காட்டியதும், வயது ்அல்லது வேறு காரணங்களை பொருட்படுத்தாமல் சரிக்கு சரியாக நடத்தியதும், கலகலப்பாக பழகியதும், உற்சாகம் தந்ததுமே கழகத்தின் மீதான பற்றினை மேலும் வலிமையாக்கச் செய்தன என்பது இப்போதும் நெஞ்சை வருடும் நினைவுகள்.

எதிர்க்கட்சித் தலைவராக தலைவர் கலைஞர்: பரபரப்பாகவும், சூடும் சுவையும் நிறைந்ததுமாக சட்டசபை விவாதங்கள், அவரின் எண்ணங்களை செயல்படுத்தும் வல்லமையும், சூட்டிகையும் நிரம்பிய புலிக்குட்டிகளின் படைவரிசை, மக்கள் பிரச்னைகளுக்காக அடுத்தடுத்து தொய்வில்லாத போராட்டங்கள், சிறைவாசம், பத்திரிகைகள் சுடச்சுட அவற்றை சுமந்து வந்ததும், முரசொலியும் அன்றைய தினகரனும்கழகத் தோழர்கள்
அனைவர் கரங்களிலும் தவழ, படிப்பகங்களில் உரத்த குரலில் யாரோ ஒருவர் படிக்க, மற்றவர்கள் இரசிக்க என எத்தனை அருமையான நாட்கள்.

சட்டமன்ற கதாநாயகர்கள், அண்ணன்மார்கள் க. சுப்பு, துரைமுருகன், இரகுமான்கான் மேடைகளிலும் சண்டமாருதம். அவர்களின் பேச்சு வேகத்தை தாங்கமுடியாமல் இம்மூவரையும் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றியவுடன் தலைவர் கலைஞர் “இடி, மின்னல்,மழை” என அவர்களுக்குப் பெயரிட்டு நாடு முழுவதும் வலம் வரச்செய்தார்.

கடல் அலையாய் மக்கள் கூட்டம் திரளும். கூட்டத்தில் அவர்களோடு பங்கேற்று, பின்னர் அவர்களுடனே உணவருந்தி, கதைபலப் பேசி அனுப்ப மனமில்லாமல் ஊருக்கு அனுப்பி வைத்து அடுத்து எப்போது அவர்களை சந்திப்போம் என காத்திருந்த நிலாக்கால நாட்கள் அவை!

தமிழ்நாடு முழுவதும் பேச்சு திறமையாலும், பழகும் தன்மையாலும் ஆயிரக்கணக்கில் அன்புள்ளங்களை தேடி வைத்திருந்த ஜாம்பவான்கள். இம்மூவரின் நகைச்சுவையும், கிண்டலும் ஆதாரப்பூர்வமான வாதங்களும் அன்றைய ஆட்சியாளர்களை நடுங்க வைத்ததற்கு தலைவரின் இந்த சமயோஜிதமான சுற்றுப்பயண திட்டமே என்பதெல்லாம் வரலாறு.

மாநாடுகளில் இவர்கள் பேச எழுந்தாலே கரவொலி விண்ணைப் பிளக்கும். இம்மூவரின் நடை, உடை, சிகை அலங்காரம் என எல்லாமே கழகத் தோழர்கள் சிலாகித்துப் பேசி பரவசப்பட்டு காட்டிய, கொட்டிய பேரன்பு நிகரற்றது. அன்பில், மன்னை போன்றவர்களெல்லாம் இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கே சென்று, சிரித்துப்பேசி உற்சாகப்படுத்துவார்கள். இவர்களோடு நெருங்கி இருக்கவும், உடன் சுற்றுப்பயணம் சென்று கூட்டங்களில் பேசுவதுமான அரிய வாய்ப்புகளை பெற்றவன் நான் என்பது நான் பெற்ற பேறு!

அன்பு, பாசம், ஆற்றல், திறமை, உழைப்பு இவை மட்டுமே அந்நாட்களில் பிரதானமாக இருந்தன. குடும்பம், உறவினர்கள இவர்ளையெல்லாம் கடந்த நெருக்கம் கழக முன்னோடிகளிடமும் தோழர்களிடமும் மட்டுமே மலர்ந்து மனதெல்லாம் நிறைந்திருந்தது. இன்றைய கழகத் தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் இளைஞர் அணி பவனிவர தொடங்கியதன் ஆரம்ப நாட்களில் ஊக்கம் தந்தவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்.

கூட்டத்திற்கு கிளம்புவதற்கு முன் கண்ணாடி முன் அமர்ந்து நெற்றியில் வந்து விழும் சுருட்டை முடியை அண்ணன் இரகுமான்கான் சரிசெய்வதை பார்த்து முன்னணியினரெல்லாம் பின்னர் அவரிடமே அதுபற்றி இரசித்துப் பேசுவார்கள். மூவருக்கும் தனித்தனி பாணி! வியர்க்க விறுவிறுக்கப் பேசுவார்கள். பின்னர் தளபதி, என்னைப் போன்றவர்களின் செயல்பாடுகளை கண்டு அந்நாட்களில் மகிழ்ந்து பாராட்டிபரவசப்பட்ட அன்புள்ளங்கள்.

யாரையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி அப்படி ஒரு பந்தம். இடி ஒய்ந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. மின்னலும் இன்று நின்று விட்டது. இவர்களின் அடையாளமாக மழை மட்டுமே இப்போது நம்மோடு! அது பாச மழை! பரிவு மழை! அடை மழை! நமக்கெல்லாம் ஆறுதல் தரும் மழை!

கழகத் தலைவர் தளபதியின உள்ளத்தில் தனித்ததோர் இடம்பெற்ற, இஸ்லாமிய சமுதாயம் இயக்கத்திற்கு அளித்த பெருங்கொடை, சொற்பொழிவாளர் வரிசையில் முதல் வரிசையின் முன்னணி முரசு ஆருயிர் அண்ணன் இரகுமான்கான் நெஞ்சு நிறைய நினைவுகளை நிரப்பி விட்டு சென்று விட்டார்.

நம்ப வேண்டியிருக்கிறது. ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. வாழ்க்கைப் பயணத்தில் உடன் வந்த ஒரு சகப்பயணியையா இழந்திருக்கிறோம்? இல்லை! இலட்சியப் பயணித்தில் உடன் வந்த ஒரு போராளியை ! அவர் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்” நிறம் மாறாத ஒரு பூவை” இழந்திருக்கிறோம்.

அடி தாங்கிப் பழக்கப்பட்ட இயக்கம் இடி தாங்கியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. வாழ்க்கையில் வேறு எதையும் விட பிரிவின் சுமைதான் அதிகம் கனக்கிறது. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது? இன்று நமக்கு எல்லாமாக விளங்கும் தலைவர் தளபதியை நோக்கி ஆறுதல் தேடி மனமும் விழிகளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக