செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மின்னம்பலம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுபோலவே மே மாதம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் என தேசிய தேர்வு முகமை ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது.  

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள், “நாட்டில் இயல்புநிலை திரும்பிய பின்னரே ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தினர். இதுபோலவே தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.    இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவில், “கொரோனா நேரத்திலும் கூட வாழ்க்கை முன்னேறிச் சென்றுகொண்டுதான் உள்ளது. அதுபோல நாமும் முன்னேறிச் சென்றுகொண்டுதான் இருக்க வேண்டும்” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், “தேர்வுகள் நடத்தப்படாவிட்டால் அதனால் நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை. மாணவர்கள் தங்களது ஒரு கல்வியாண்டை இழப்பார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார்.

தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாதிட்டார்.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அலோக் ஸ்வத்சா வாதிடுகையில், “கொரோனாவுக்கு விரைவில் தடுப்பூசி கொண்டுவர வாய்ப்புள்ளது. பிரதமர் கூட தனது சுதந்திர தின உரையில் இது குறித்து கூறினார். தேர்வை காலவரையின்றி ஒத்திவைக்கக் கோரவில்லை, ஆனால் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அருண் மிஸ்ரா, “நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும். போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறுவதை பதிவு செய்கிறோம். அத்துடன் கொள்கை முடிவில் தலையிட எந்த அடிப்படை காரணமும் இல்லை” என்று குறிப்பிட்டார். தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக