திங்கள், 17 ஆகஸ்ட், 2020

லட்டியால் வெளுத்த போலீஸ் 83 வயது முதியவருக்கு எலும்பு முறிவு! மகனுக்கு கண் பார்வை போச்சு! எடப்பாடியின் காக்கிகள்!

ariyampalayam

நக்கீஎரன் : சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் வலது கை எலும்பை முறித்துள்ளனர், காவல்துறையினர். அவருடைய மகனை தாக்கியதில் கண் பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60

ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது.   


இவர்கள் இருவரின் நிலத்திற்கு இடையே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி ஆத்துக்காடு பகுதி வரை நீண்டு செல்லும் ஓடை ஒன்று உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெருமாள், கொஞ்சம் கொஞ்சமாக ஓடையை ஆக்கிரமித்து வருவதாக ராஜூ தரப்பு சொல்ல, அவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தகராறு இருந்து வருகிறது.   

 இது தொடர்பாக பெருமாள் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் சொல்ல, ராஜூவையும் அவருடைய தந்தையையும் விசாரணைக்கு அழைத்துள்ளது காவல்துறை. ஆனால் அங்கே கேள்வி எதுவும் கேட்காமல், அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே ஃபைபர் லட்டியால் 'வெளுவெளு'வென வெளுத்துள்ளார் எஸ்ஐ ராமகிருஷ்ணன். அங்கு நடந்த 'டார்ச்சர்' குறித்து ராஜூவும், அவருடைய தந்தையும் நம்மிடம் கண்ணீர் மல்க கூறினர்.

''உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய விவசாய நிலம் ஓடைக்கு அந்தப்புறமும், எங்களுக்குச் சொந்தமான நிலம் அரியாம்பாளையம் கிராம எல்லையிலும் இருக்கிறது. 10 அடி அகலமுள்ள இந்த ஓடைதான் இவ்விரு கிராமங்களையும் பிரிக்கிறது. இந்த ஓடையை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமை கிடையாதுங்க. ஆனால் பெருமாள், அவர் நிலத்துப் பக்கம் இருந்த ஓடை கரையை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி எடுத்துக் கொண்டார். இப்போது எங்கள் நில எல்லை வரை வந்ததுடன், எங்கள் பக்கத்து ஓடையின் மறுகரையையும் ஆக்கிரமிக்கத் துடிக்கிறார். 


இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு எங்கள் நில எல்லையில் இருந்த ஒரு மரத்தை வெட்ட முயற்சித்தோம். அப்போது பெருமாள் எங்களிடம் தகராறு செய்தார். தகராறின்போது ஒருத்தரு ஒருத்தர் கெட்ட வார்த்தையால் திட்டிக்கொள்வது சகஜம்தான். அவரும்தான் எங்களை கெட்ட வார்த்தையால் திட்டினார். ஆனால், நாங்கள் திட்டியதை மட்டும் செல்போனில் ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்டு, காவல்நிலையத்தில் எங்கள் மீது புகார் அளித்தார்.


அதன்பேரில், கடந்த மார்ச் 30, 2020ம் தேதி, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எங்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டனர். நாங்கள் அன்று காலையிலேயே சென்றோம். அப்போது அங்கு பெருமாளும் இருந்தார். அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், எங்களிடம் கேள்வி கூட கேட்காமலேயே வந்த வேகத்தில் ஃபைபர் லட்டியால் சரமாரியாக அடிக்கத் தொடங்கி விட்டார். 


'சார்... எங்கப்பாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருக்கிறது. அவருக்கு ஏதாவது ஆகிவிடும் சார்... விட்டுடுங்க சார்...,' என்று கெஞ்சியும் கேட்காமல், வயதானவர் என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினார். எங்கப்பா அடி தாங்க முடியாமல் கீழே விழும்போது சட்டைப்பையில் வைத்திருந்த 'இன்ஹேலர்' கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும், 'பாக்கெட்டில் என்னடா வெச்சிருக்க?' என்று கேட்டு, அதற்கும் ராமகிருஷ்ணன் எஸ்ஐ அடித்தார். 


அதன் பிறகு அவரை விட்டுவிட்டு என்னையும் சரமாரியாக லட்டியால் வெளுத்துத் தள்ளினார். நான் கீழே படுத்து புரண்டபோதும் விடாமல் அடித்தார். அப்போது என் கண் அருகில் லட்டி பட்டதில், கண்ணே கலங்கியதுபோல் ஆகிவிட்டது. இத்தனை சம்பவமும் பெருமாள் கண் முன்புதான் நடந்தது. அதன்பிறகு அவரே, எங்களை அடிக்க வேண்டாம் என காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்ட பிறகுதான் அடிப்பதை நிறுத்தினார் ராமகிருஷ்ணன். எஸ்ஐ., தாக்கியதில் எங்கப்பாவுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மார்ச் 30ம் தேதி மாலை 6 மணியளவில்தான் எங்களை விடுவித்தனர். 


மறுநாள் (மார்ச் 31) காலையில் நாங்கள், கொண்டலாம்பட்டியில் உள்ள தரன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தோம். பெருமாளின் உறவினரான அதிமுகவைச் சேர்ந்த அரியானூர் பழனிசாமி, கொண்டலாம்பட்டி காவலர்கள் முருகேசன், வில்லியம் ஜேம்ஸ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து, எங்களை உடனடியாக டிஸ்சார்ஜ் ஆகுமாறு விடாமல் வற்புறுத்தினர். எதுவாக இருந்தாலும் கேஸ் கொடுக்காமல் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என தொந்தரவு செய்தனர். காவலர்கள் இருவரும், உடனடியாக டிஸ்சார்ஜ் ஆகாவிட்டால், பொண்டாட்டி, புள்ளைங்கனு எல்லாத்து மேலயும் கேஸ் போட்டுடுவோம்னு மிரட்டினாங்க.


மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அவர்கள் நெருக்கடி கொடுத்ததால், வேறு வழியின்றி பகல் 12 மணியளவில் எங்களை டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். அதன்பிறகு தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்து வருகிறோம். நாங்களும் மனித உரிமைகள் ஆணையம், சேலம் மாநகர கமிஷனர், முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் செய்து விட்டோம். எங்கேயும் நியாயம் கிடைக்கலைங்க சார். அப்புறம்தான் நக்கீரனிடம் சொல்லலாம் என உங்களிடம் வந்திருக்கிறோம்,'' என ராஜூவும், அவருடைய தந்தை கந்தசாமியும் கண்ணீர் மல்க கூறினர்.

 

kandasamy


எலும்பு முறிவு ஏற்பட்டதாகச் சொன்னது குறித்து கொண்டலாம்பட்டியில் தரண் மருத்துவமனை தரப்பில் விசாரித்தோம். கந்தசாமிக்கு ஆர்த்தோ மருத்துவர் நக்கீரன் என்பவர் சிகிச்சை அளித்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, கந்தசாமியின் வலது கையில் '1/3 லோவர்' பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது உண்மைதான். அதற்காக மாவுக்கட்டு போடப்பட்டது,'' என்றார். 


எஸ்ஐ ராமகிருஷ்ணன் மீது ராஜு தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஜூலை 27, 28ம் ஆகிய இரு நாள்களும், சேலம் மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஈஸ்வரன், அவர்களை நேரில் அழைத்து விசாரித்திருக்கிறார். ராஜூ, அவருடைய தந்தை மற்றும் ராஜூன் மனைவி மலர்க்கொடி, மகள் மைவிழி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதேபோல், பெருமாள், அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் சிலரிடமும் விசாரித்திருக்கிறார் உதவி கமிஷனர்.

 

Perumal-admk


இந்த விவகாரத்தில் புகார்தாரராகச் சொல்லப்படும் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாளிடம் கேட்டபோது, ''இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய நிலம் என்பது ஒரிஜினல் பட்டாவில் உள்ளது. எனக்குச் சொந்தமானது. சர்ச்சை இருப்பதாகக் கருதினால் சர்வேயரை வைத்து அளந்துக்கலாம்னும் சொல்லிட்டேன். என் நிலத்தில் இருந்த மரத்தை ராஜூ தரப்பினர் வெட்டிட்டாங்க. அதற்காகத்தான் புகார் கொடுத்தேன். மற்றபடி காவல்நிலையத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. 


உத்தமசோழபுரம் பஞ்சாயத்தில் 40 வருஷமாக திமுகதான் ஜெயிச்சுட்டு இருந்தது. இப்போதுதான் அதிமுக தரப்பில் நான் ஜெயிச்சுருக்கேன். கட்சி ரீதியாக எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாங்க. சர்வேயரை வைத்து அளப்போம். ஓடை புறம்போக்கு என்று தெரிந்தால் ஓடைக்கு நிலத்தை விட்டுவிடவும் தயாராக இருக்கிறேன். யாரோடும் சண்டை போட நான் விரும்பலைங்க,'' என்றார். 

 

ramakrishnan-SI-kondalampatti ps


இது தொடர்பாக நாம் கொண்டலாம்பட்டி எஸ்ஐ ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.


''ராஜூவும், அவருடைய தந்தையும் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான மரத்தை வெட்டினர். அதனால் பெருமாள் அளித்த புகாரின்பேரில், நேரில் விசாரிக்கச் சென்றோம். அப்போது போலீசார் முன்பே, புகார்தாரரை கெட்ட வார்த்தையால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதற்கு வீடியோ ஆதாரமும் இருக்கிறது. அதன்பிறகுதான் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்தோம். அவர்களை நான் அடித்ததாகச் சொல்வதில் உண்மை இல்லை.


காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய 40 மணி நேரம் கழித்துதான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜூம் செய்யப்பட்டு உள்ளனர். ஏ.ஆர். காப்பியில் அவர்களுக்கு வீக்கம் மட்டுமே இருந்ததாகவும், வெளிக்காயங்களோ, எலும்பு முறிவோ இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் மீது இ.த.ச. பிரிவுகள் 294 (பி), 427, 506 (1) ஆகிய பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறோம். விரைவில் நீதிமன்ற உத்தரவுடன் அவர்களை கைது செய்வோம்.


என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன். இளம் ரத்தம் என்பதால் கொஞ்சம் ஃபோர்ஸ் இருக்கத்தான் செய்யும். கந்தசாமியின் தம்பி மகன் சரவணன் என்பவர், அவர்களை வெளியே விடுமாறு கூறினார். நான் அவர்களை விட முடியாது என்று ஃபோர்சாக சொன்னேன். அதை மனதில் வைத்துக்கொண்டு அவர்தான் எனக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்க வைத்திருக்கிறார். 


இதுவரை என் மீதான புகார் தொடர்பாக 6 விசாரணையை பார்த்துவிட்டேன். போலீசுக்கு முன்னாடியே ஒருவர் கெட்ட வார்த்தை பேசுவதை எப்படி பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? அது, காக்னிஸபிள் அஃபன்ஸ். சார்... ராஜூ தரப்புக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. இதே புகார் பெருமாளுக்கு எதிராக வந்திருந்தாலும்கூட அவரையும் விசாரிக்கத்தான் செய்திருப்பேன். இந்த விஷயத்தில் நான் தப்பு பண்ணலேனு நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன். நான் புகார்தாரருக்குதான் நல்லது செய்ய முடியும்,'' என்கிறார் எஸ்ஐ ராமகிருஷ்ணன்.


ராஜூம், கந்தசாமியும் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் விடுவிக்கப்பட்டதில் இருந்து 40 மணி நேரம் கழித்துதான் சிகிச்சைக்கு சேர்ந்ததாக எஸ்ஐ ராமகிருஷ்ணன் நம்மிடம் சொன்னார். ஆனால், அவர்கள் மார்ச் 31ம் தேதி, காலையிலேயே அதாவது காவல்நிலையத்தில் விடுவிக்கப்பட்ட 20 மணி நேரத்திற்குள்ளாகவே தரண் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதேபோல் எலும்பு முறிவு இல்லை என்று எஸ்ஐ சொல்லும் கூற்றிலும் உண்மை இல்லை என்பதும் நம் விசாரணையில் புலனாகிறது.

 

 

ashokan-people watch-coordinator

 

காவல்துறையினரின் மனித உரிமை மீறல் குறித்து, சேலத்தைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அசோகனிடம் கேட்டோம்.


''எந்த ஒரு குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கும்பட்சத்தில், காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்வதும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே உரிய சட்டநடைமுறைகள் ஆகும். மேலும், நிலத்தகராறு விவகாரங்களில் காவல்துறையினர் தலையிடவே கூடாது. இது போன்ற விவகாரங்களில் ஒருவரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிப்பது என்பதே சட்டத்திற்கு எதிரானதுதான். விசாரணைக்கு அழைத்துச் சென்று 'டார்ச்சர்' செய்திருப்பது உண்மையெனில், அதுவும் கண்டிப்பாக மனித உரிமைக்கு எதிரான செயல்தான். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகி சட்ட ரீதியாக தீர்வு பெறலாம்,'' என்றார்.


அதிகார பலம், பண பலம் உள்ளோருக்கு எதிராக சுழலாத காவல்துறை லட்டிகள், விளிம்பு நிலை மக்கள் மீது மட்டுமே கருணையற்று பாய்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே காவல்துறையினரின் அராஜகம் எல்லை மீறிப் போயிருக்கிறது. இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் அரங்கேறுவதற்குள் இவ்விவகாரத்தில் உண்மையை விசாரித்து நீதிபரிபாலனம் செய்வதே நல்ஆளுமைக்கு அணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக