சனி, 8 ஆகஸ்ட், 2020

கோழிக்கோடு விமான விபத்து: டேபிள் டாப் ஓடுபாதை என்றால் என்ன?

BBC: கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம்,
விமான விபத்து
ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விமான விபத்து நடந்த நேரத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது மற்றும் புலப்பாடு குறைவாக இருந்தது. தரையிறங்கும் போது விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது.விமானத்தின் விபத்துக்கு ஒரு காரணம் கனமழைகாரணமாக புலப்பாடு இல்லாமல் இருந்தது என்று கூறப்பட்டாலும், கோழிக்கோட்டில் உள்ள டேபிள் டாப் ஓடுபாதை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். "விமானம் 30 முதல் 35 அடி வரை கீழே விழுந்துவிட்டது. இதனால் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கலாம். இது ஒரு டேபிள்-டாப் ஓடுபாதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தேசிய பேரிடர் மீட்புப்படையின் டிஜி, எஸ்.என்.பிரதான், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

டேபிள் டாப் ஓடுபாதை என்றால் என்ன?

டேபிள் டாப் ஓடுபாதை என்பது பொதுவாக மலைப்பாங்கான அல்லது பீடபூமி பகுதிகளில் கட்டப்படுகிறது. மலைப்பகுதிகளில், சமவெளி இடம் குறைவாக இருப்பதால், இதுபோன்ற ஓடுபாதை அமைக்கப்படுகிறது. அதன் அக்கம்பக்கம் குறைவான இடமே இருக்கும். இங்கு பெரும்பாலும், ஒருபுறம் அல்லது சிலநேரங்களில் இருபுறமும் ஆழமான சரிவுகள் அல்லது பள்ளங்கள் இருக்கலாம், இவை மிக ஆழமாகவும் இருக்கலாம்.

கேரளா விமான விபத்து

இந்தியாவில் இதுபோன்ற மூன்று ஓடுபாதைகள் உள்ளன. மங்களூர், கோழிக்கோடு மற்றும் லெங்புய்.

இந்த மூன்று இடங்களிலும் டேபிள் டாப் ஓடுபாதை உள்ளது.

பொதுவான மொழியில் சொல்லவேண்டும் என்றால், இந்த ஓடு பாதை ஏறக்குறைய நமது வீடுகளில் இருக்கும் உணவு மேசையை ஒத்ததாக இருக்கிறது. அதாவது, ஓடுபாதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உள்ளது, அதைத்தாண்டினால், ஆழமான பள்ளம். ஆகவே, நேரத்தில் ப்ரேக் பிடிக்காவிட்டால், அல்லது விமானம் தரையிறங்கியவுடன் நிற்காவிட்டால், விபத்து நேரிடும் ஆபத்து அதிகரிக்கிறது என்று பெயர் குறிப்பிடவிரும்பாத விமானபோக்குவரத்து நிபுணர் பிபிசியிடம் தெரிவித்தார்.

டேபிள் டாப் ஓடுபாதையை ஒரு சமதள ஓடுபாதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சமதள ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டால் அல்லது விமானத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அது ஓடுபாதையைக் கடந்து சென்றுவிடும். விமானம் விழாது ஆனால், அது ஓடுபாதைக்கு வெளியே தரையில் சென்றுவிடும்.

கோழிக்கோடு விமான விபத்தில், விமானம் தீப்பிடிக்கவில்லை. ஆனால் பல முறை இதுபோன்ற விபத்து நிகழும்போது, விமானம் தீப்பிடித்துவிடும்.

இத்தகைய ஓடுபாதைகள் மிகவும் ஆபத்தானவை என்று சொல்லமுடியாது, மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் பீடபூமியில், டேபிள் டாப் ஓடுபாதைகளை உருவாக்குவது ஒரு வழி.

டேபிள் டாப் ஓடுபாதையில் விளிம்பு இல்லை என்பதே இதில் உள்ள ஆபத்து என்று விமானத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோழிக்கோடு விமான விபத்து குறித்து இன்னும் விசாரணை நடைபெறவில்லை. அது முடிந்தபிறகுதான், விபத்துக்கான முக்கிய காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் வழக்கமாக இதுபோன்ற விபத்துக்கள், பிரேக் பிடிக்காதபோது அல்லது சரியான நேரத்தில் ப்ரேக் போடமுடியாமல் போகும்போது ஏற்படுகின்றன.

விமான நிலையம்

கடந்த பல ஆண்டுகளாக, கோழிக்கோடு விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து, குறிப்பாக அகலமான விமானங்களை இயக்குவது தொடர்பாக நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்திய விமான நிலைய ஆணையம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஓடுபாதை - இறுதி பாதுகாப்பு பகுதியை இங்கு சேர்த்தது, ஆனால் இதுமட்டும்போதுமா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிபிசி செய்தியாளர் ஜான்வி அன்மூலிடம் பேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போராடிவரும் வழக்கறிஞரும், ஆர்வலருமான யெஷ்வந்த் ஷெனாய், "இம்மாதிரியான பேரழிவு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே இருந்தது" என்கிறார். எனவே இந்த விபத்து எந்த ஆச்சரியத்தை தரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"எந்த ஒரு விமான நிலையத்திற்கும் ஓடுபாதையின் இரு முனையிலும் 150மீட்டர் இடம் இருக்க வேண்டும். ஆனால் கோழிக்கோடில் அது கிடையாது. மேலும் அகலமான விமானங்களுக்கு ஏற்ற விமான நிலையமாக கோழிக்கோடு விமான நிலையம் இல்லை. இம்மாதிரியான விமான நிலையத்தில் விமானங்கள் செல்வது மிக ஆபத்தானது. ஹஜ் பயணத்திற்கான விமான்ங்கள் இங்கிருந்து செல்லும். நான் இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்திற்கு பலமுறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விபத்து எனக்கு ஆச்சரியமாக இல்லை. இந்த விபத்தால் இந்திய போக்குவரத்துத் துறையில் இருக்கும் பிரச்சனை குறித்து உலகிற்கு தெரியவந்துள்ளது," என்று யெஷ்வந்த் தெரிவித்தார்.

விமான விபத்து

"சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின்படி விமான நிலையங்களுக்கு சில விதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் இம்மாதிரியான தரக்கட்டுப்பாட்டாளர் ஒருவர் இருப்பார். அதன்பிறகுதான் அனுமதி வழங்கப்படும். இந்தியாவை பொறுத்தவரை இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம்தான் அதற்கு பொறுப்பு. விமான நிலையங்களில் அந்த தரம் இல்லை என்றால் அதுகுறித்து அனைவருக்கும் தகவல் அளிக்க வேண்டும். எனவேதான் அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே அம்மாதிரியான விமான நிலையத்திலிருந்து விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர்" என்று யெஷ்வந்த் சுட்டிக்காட்டுகிறார்.

"தற்போது இந்த விபத்துக்குள்ளான காரணத்தை சொல்ல இயலாது. இருப்பினும் மழையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மோசமான வானிலையிலும், இடங்களிலும்கூட விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்" என்று யெஷ்வந்த் தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மங்களூரில் ஏர் இந்தியா விமான ஒன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்காக யெஷ்வந்த் ஷெனாய் குரல் கொடுத்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக