சனி, 8 ஆகஸ்ட், 2020

ஜெகத்ரட்சகன் -அனிதா: பாஜக இழுக்கிறதா?

ஜெகத்ரட்சகன் -அனிதா: பாஜக இழுக்கிறதா?

மின்னம்பலம்:  ;திமுக சட்டமன்ற உறுப்பினரான கு.க. செல்வம் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். அவர் இணையவில்லை என்று சொன்னாலும் மறுநாள் ஆகஸ்டு 5 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சிறப்பு நிகழ்வில் கு.க.செல்வம் கலந்துகொண்டார். இந்நிலையில், திமுகவில் இருக்கும் மேலும் சில அதிருப்தியாளர்களும் அக்கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று தகவல்கள் பரவுகின்றன.

திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களும், வழக்கு வளையங்களில் இருப்பவர்களும் பாஜகவை தேடிச் செல்வதாகவும் சமூக தளங்களில் தகவல்கள் தீயாகப் பரவின. குறிப்பாக ஒன்றிய செயலாளர்கள் மாற்றம் விவகாரத்தில் சமீபத்தில் தலைமையுடன் முரண்பட்டு தலைமையின் விசாரணைக்கு உள்ளான, திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவுக்கு செல்லப் போவதாக கட்சிக்குள்ளும், வெளியேயும் பலர் பேசிக் கொண்டனர். சமூக தளங்களில் சிலர், அனிதா ராதாகிருஷ்ணனின் படத்தைப் போட்டு, ”தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு லிப்ட் கேட்கப் போறீங்களா?” என்பது போன்ற கருத்துகளை எழுதியிருந்தனர். அதாவது கு.க. செல்வம் தன் தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு லிப்ட் கேட்டு டெல்லி வந்ததாக சொன்னதையடுத்து இதேபோல அனிதா ராதாகிருஷ்ணனையும் உருவகப்படுத்தினார்கள்.

சில நாட்களாகவே தொடர்ந்து இந்த தகவல்கள் பரவியதால் கோபமான அனிதா ராதாகிருஷ்ணன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

“கடந்த சில நாட்களாக சமூக விரோதிகள் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக தளங்களில் என்னைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழக முதலமைச்சர் ஆவதற்காக இதயசுத்தியோடு தீவிரப் பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கு அறிவார். ஆகையால் என்னைக் கழகத்திலிருந்தும் தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்ற விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

இதேபோல முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனையும் பாஜகவோடு முடிச்சு போட்டு தகவல்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவி வருகின்றன. பாஜகவின் சில முக்கிய புள்ளிகளை அவர் டெல்லியில் சந்தித்துவிட்டதாகவும், அவர் மீதான அமலாக்கத்துறை விசாரணை உள்ளிட்டவற்றை சமாளிப்பதற்காக அவர் பாஜகவில் சேரப் போகிறார் என்றும் வரும் தகவல்கள் பற்றி திமுகவுக்குள்ளேயே பல மூத்த நிர்வாகிகள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி ஜெகத்ரட்சகன் தரப்பில் விசாரித்தோம். “அவர் விமானம் ஏறியே நான்கு மாதங்கள் ஆகிறது. இதுபோன்று யாரோ கிளப்பிவிடும் வதந்திகளுக்கெல்லாம் அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?” என்று தகவலை மறுத்தனர்.

பாஜக தரப்பில் விசாரித்தால், “கு.க. செல்வம் வரும் வரை அவரைப் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்ததா? அதுபோல் நீங்கள் யூகிக்க முடியாதவர்களும் எங்கள் பட்டியலில் இருக்கிறார்கள்” என்று ஆச்சர்ய பதில் தருகிறார்கள்.

திமுக தலைமையோ தங்கள் கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை பாஜக தொடர்ந்து இழுக்க முயற்சித்து வருவது பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக