ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

இயக்குநர் பி.ஆர் பந்துலு.. சினிமாவின் மரியாதைக்குரிய படைப்பாளர். .. சாதனைகள் செய்தவர்.

நினைவோ ஒரு பறவை – 01 : பி.ஆர். பந்துலு ஜா.தீபா 

yaavarum.com : ஒரு திரைப்படம் எதனால் வணீகரீதியான வெற்றி பெறுகிறது என்கிற துல்லியமான கணிப்பு ஒருவரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் சில இயக்குநர்கள் தங்களது படைப்பாற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மக்களின் ரசனையை கணித்து வைத்திருப்பார்கள். எந்த மாதிரியான வகையினைச் சேர்ந்த படங்கள் என்றாலும் அதில் வெற்றி பெற்று விட முடியுமென்று தீர்மானமாய் அவர்களால் நம்ப முடியும். எடுத்துக் கொண்ட களம் எதுவாகினும் திரைக்கதையிலும், படத்தை உருவாக்கும் முறை

யிலும்  சுவாரசியத்தை எப்படி கூட்ட வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கும் இயக்குநர்களே காலத்துக்கும் அழியாத  படங்களைத் தந்திருக்கின்றனர். அப்படியான ஒருவராக இயக்குநர் பி.ஆர் பந்துலுவைச் சொல்ல முடியும். . 

இயக்குநர் பி.ஆர் பந்துலு இந்திய சினிமாவின் மரியாதைக்குரிய படைப்பாளர். தமிழ்த் திரைப்படங்களில் அருமையான சாதனைகள் செய்தவர்.

பந்துலுவின் படங்களைப் பார்க்குந்தோறும் அவர் மேல் மதிப்பு கூடிக்கொண்டே தான் போகிறது. காரணம் தனது படங்களின் மூலம் இவர் சொல்ல விழைந்தவை தான். இவரது படங்கள் சமூகம் குறித்தே பேசின.

தமிழகத்தைப் போலவே தெலுங்கு பட உலகிலும், கன்னடத்திலும் பந்துலுவின் பெயர் நிலைபெற்றிருக்கிறது.  இவரது இயக்கத்தில் வெளிவந்த பட வரிசையைப் பார்க்கையில் வெவ்வேறு களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது புரியும். அதோடு அனைத்தையும் வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.

யதார்த்தமான கதை சொல்லல் பாணி தான் பந்துலுவினுடையது. ஆனால் அதில் நாம் எதிர்பாராத ஒ

ரு கற்பனைத்தன்மை கலந்திருக்கும். தங்கமலை ரகசியம், ஆயிரத்தில் ஒருவன் படங்கள் காமிக்ஸ் கதையின் அம்சங்கள் நிறைந்தவை. காட்டில் மிருகங்களுக்கு இடையில் வளரும் ஒரு குழந்தை அங்கேயே வளர்ந்து தான் மனிதன் என்பதையே மறந்து போகிறான். இது தங்கமலை ரகசியம் கதை. ஆயிரத்தில் ஒருவன் படம் அதன் காட்சி பிரம்மாண்டத்துக்காக எப்போதும் பேசப்படும்.  தீவு நாடுகள், அங்கு ஒரு அழகான இளவரசி, வீரமான அடிமைக்கும் இளவரசிக்குமான காதல், கடற் கொள்ளைக்காரர்கள், கப்பலில் நடக்கும் சண்டைகள் எனத் திரையில் ஒரு சாகசக் கதையைக் காட்டியதில் முழு வெற்றி பெற்ற இயக்குநர் பந்துலு.

இதற்கு காரணம் நாடக உலகில் பந்துலு நாடக உலகில் கொண்டிருந்த மிகுந்த அனுபவமே. கர்நாடகாவில் குப்பி வீரண்ணா போன்ற நாடக ஆளுமையிடம் பணி செய்தவர். மகாபாரத போரை மேடையில் நிகழ்த்த வேண்டுமெனில் குதிரைகளையும், யானைகளையும் மேடைக்கே அழைத்து வந்தவராம் குப்பி வீரண்ணா.

அந்த பிரம்மாண்டத்தினை நாம் பந்துலுவின் சரித்திர காலப் படங்களில் பார்க்க முடியும். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக கடலும், கப்பலுமாக நம் முன் காட்டியது பெரும் சாதனை. கர்ணன் படத்தின் போர்க்காட்சிகளும், அரண்மனை காட்சிகளையும் சொல்லலாம்.

கதைக்குத் தருகிற முக்கியத்துவத்தை விட சொல்ல வந்த கருத்துக்கு காட்சிகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து இயங்கியிருக்கிறார். இதனை ‘சபாஷ் மீனா’, ‘பலே பாண்டியா’, ‘நாடோடி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கர்ணன்’ படங்களில் பார்க்க இயலும். அதனால் ஒரு கோர்வையான கதை சொல்லல் முறையில் இவரது படங்கள் அமையாமல் சுவாரஸ்யமான காட்சிகளின் அடுக்குகளாக அமைந்திருக்கும்.  இந்த பாணியினை அவர் தொய்வில்லாமல் செய்து வந்தார். அதனால் தான் இப்போதும் இவரது படங்கள் ரசிக்கப்படுகின்றன.

சிவாஜியும், எம்ஜிஆரும் இவரது படங்களில் ஒன்றைத் தான் வலியுறுத்துவார்கள். அவை அடிமைத்தனத்துக்கு எதிரான குரல்கள். ‘தங்கமலை ரகசியம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கர்ணன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். 

இவரது படங்களுக்கு பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கதைகள் யாவுமே உரிமைகளுக்கான குரல்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு இயக்குநர் தொடர்ந்து இப்படியான குரல்கள் ஒலிக்கும் திரைப்படங்களை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் என்றால் பி.ஆர் பந்துலுவையே முக்கியமாகச் சொல்ல முடியும்.

இந்திய சுதந்திரம் அடைந்த காலகட்டத்துக்கு முன்பாக வெளிவந்த அநேக படங்கள் அடிமைத்தனத்துக்கும் சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும் வலுவாக குரல் கொடுத்திருக்கின்றன. அதற்காகவே தடை செய்யப்பட்ட படங்களும் அதனால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களும் இருந்திருக்கின்றனர். அதனால் திரையில் சமூக சீர்திருத்த கருத்துகளை சொல்வதென்பது புதிதல்ல. ஆனால் பி.ஆர் பந்துலு மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசப்படுகிறார். சாதி அடக்குமுறையினை எதிர்ப்பது என்பது சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த சமூக சீர்திருத்தமாக இருந்தது. இது போன்ற கருத்துகளை படங்களில் சொல்லும்போது அதனை சரியான கலவையில் சொல்லியாக வேண்டும். ஏனெனில் அப்போதைய சமூகம் பல முனைகளால இறுக்கப்பட்டிருந்தது. ஐம்பதுகள் தொடங்கி எழுபது வரையிலும் உள்ள தலைமுறையினர் பல்வேறு கொள்கைகளை பின்பற்றுபவர்களாக, பழமைவாதத்தினையும் கைவிட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஒன்றைக் கொண்டு சேர்ப்பது என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டியதாய் இருந்தது.

அதனால் தான் சொல்ல வந்த கருத்தை வலியுறுத்த வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை வடிவமைத்தார் பந்துலு. புத்திசாலி ஒருவன் சமூகத்தின் அவலங்களை கேள்வி கேட்பதென்பது ‘ஹீரோயிசம்’ ஆகிறது. இதை அவர் அப்படியே எம்ஜிஆருக்கு பொருத்தினார். அடிமைப் பெண் படத்திலும்,நாடோடியிலும் எம்ஜிஆர் எதையும் கேள்வி கேட்கும் துணிவு கொண்டிருப்பார். அதே சமயம் அப்பாவியான ஒரு கதாபாத்திரம் சமூகத்தை நோக்கி வெள்ளந்தியாக கேள்வி கேட்பது என்பது எப்போதுமே சரியான யுத்தியாக இருந்திருக்கிறது. பலே பாண்டியா, சபாஷ் மீனா படங்களின் சிவாஜிக்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

கர்ணன் படத்தினைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாய் எழுத இயலும். மகாபாரதம் என்கிற மாபெரும் இதிகாசத்தில் கர்ணனைத் தனியாகத் தேர்ந்தெடுத்து அவனுடைய கதையை சொல்ல வேண்டிய அவசியத்தை படத்தைப் பார்க்கையில் தெரிந்து கொள்ள இயலும். கர்ணன் என்பவன் துரியோதனின் கூடாரத்தில் இருந்ததால் நாம் அவனை வில்லனாக சித்தரித்து வைத்திருப்போம். தமிழ் மக்களிடம் கர்ணனுக்கு நற்பெயர் வந்ததற்கு கர்ணன் படம் மிகப்பெரிய காரணம். கர்ணன் தாழ்த்தப்பட்டவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறான். அவன் கொண்ட வலியை எந்த மேடு பள்ளமும் இல்லாமல் நம்மிடம் காட்டியதில் பந்துலு பெரும் சாதனை செய்திருக்கிறார். பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையாக வழிபடப்படுபவர்கள். அவர்களை விமர்சிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். இன்றைய காலகட்டத்தின் அரசியலில் பஞ்ச பாண்டவர்களையோ, கிருஷ்ணனையோ விமர்சித்து ஒரு படம் தகராறுகள் ஏற்படுத்தாமல் வரும் என்பதை யோசிக்க இயலுமா?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘கர்ணன்’ அர்ஜுனனுக்கு எதிரான கர்ணன் என்பவன் நியாயவானாக இருந்தான் என்பதை  வலியுறுத்தியது. எல்லா வாய்ப்புகளும் கொண்ட அர்ஜுனன் ஜெயித்தது முக்கியமல்ல, எலலாவற்றையும் இழந்த , வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கர்ணனை வலுவுள்ளவர்கள் முன்னேற விடாமல்  செய்திருக்கிறார்கள் என்பது தானே கர்ணன் படம் சொல்லும் செய்தி.

இதைச் சொல்லும் தைரியம் பந்துலுவுக்கு இருந்திருக்கிறது. எதை எப்படி சொல்ல வேண்டும் என்று பந்துலு தெரிந்து வைத்திருப்பதாலேயே முன்னோடி இயக்குனராக இருக்கிறார். நாம் அதன் பிரமாண்டத்துக்காகவும், சிவாஜி அவர்களின் நடிப்புக்கும், படத்தில் சொல்லப்பட்ட துரியோதனன், கர்ணன் நட்புக்காகவும், கர்ணனின் கொலை வள்ளல் தன்மைக்காகவும்  கொண்டாடியிருக்கிறோம். இந்தப் படம் இவற்றை மிஞ்சி நிற்கும் செய்தியை வலியுறுத்துகிறது. கர்ணன் என்கிற கதாபாத்திரத்தின் மீது தமிழ் மக்களுக்கு பெருமதிப்பும், வாஞ்சையும் வரச் செய்தது திட்டமிட்டது உருவாக்கியதாகவே தோன்றுகிறது. ‘கர்ணன்’ படத்தினை ஆதரவற்றவர்களாக கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவனை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே பந்துலு நமக்குச் சொல்ல நினைத்தது. ‘கர்ணன்’ படத்தின் மையமுமே அது தான். படத்தின் முக்கிய காட்சி என்று எதையும் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பின்னணி இதுவாகத் தான் இருக்கும்.

வில்வித்தை பயிற்சியை மக்களின் முன்பாக சபையில் அர்ச்சுனன் செய்து காட்டுகிறபோது கர்ணன் தானும் பங்கு கொள்ள விருப்பம் தெரிவிப்பான். கர்ணனின் அந்தஸ்தை முன்நிறுத்தி அதற்கு அனுமதி மறுப்பார்கள் ஆச்சாரியர்கள்.

“நாங்கள் ஆச்சாரியர்கள். நாங்கள் வகுத்ததே தர்மம்” என்பார்  துரோணர்

“ஆச்சாரியரான நீங்கள் ஆயுதம் பயின்றது தவறு” என்ற குற்றச்சாட்டுக்கு துரோணாச்சாரியார் இப்படி சமாளிப்பார்,

“நாங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்”.

ஒரு சூடான வாக்குவாதம் மட்டுமல்ல இது. இன்றைய காலகட்டத்தின் பேசுபொருட்களும் கூட.

படத்தில் மேகநாதன் என்ற சிறுவன் கர்ணனிடத்தில் பேசும் காட்சி மற்றொரு சாட்சி. தான் பள்ளிக்குப் போகமுடியாததைப் பற்றி மேகநாதன்,

“படிக்கும் வயதல்லவா எனக்கு. அறிவுப்பசி எடுத்து பல பாடசாலைகளைத் தேடிப்போனேன். எங்கும் எனக்கு இடமில்லை. பிறப்பறியாதவன், அநாதை, தாழ்ந்தவன், உயர் இனத்தவருடன் படிப்பது தவறு. பாவம். போ” என கழுத்தைப் பிடித்து தள்ளி விட்டார்கள்”

“மகனே, அரசுக்கே புத்தி சொல்லும் அறிவடா உனக்கு. உன் போன்ற குழந்தைகளுக்காக ஒரு அரசன் நாட்டிலே செய்ய வேண்டிய பலவற்றை உன் அறிவின் மூலமாக புரிந்து கொண்டேன். அனைத்தையும் குறைவின்றி செய்து விடுகிறேன்” என்பார் கர்ணன். தாழ்த்தபப்ட்ட ஒருவர் அதிகார மையத்துக்கு செல்கிறபோது தான் தன்னை ஒத்தவர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும் என்பதான காட்சி இது. துரோணர்களும், கிருபாச்சாரியர்களும் உயர் குலத்தவரான பஞ்சபாண்டவர்களுக்கு மட்டுமே ஆதரவாக நிற்கும்போது மேகநாதன் போன்ற அடித்தள மக்களின் அதிகார பிரதிநிதியாக கர்ணன் இருந்தான் என்பது கவனிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் மகாபாரத்ததில் இப்படியான காட்சி இல்லை. இதை படத்துக்காக சேர்த்தது நுணுக்கமான, திட்டமிட்ட அசகாய புத்திசாலித்தனம்.

இதனை இவர் ஒரு படத்தில் மட்டும் சொல்லவில்லை. ‘நாடோடி’ படமே சாதி அடக்குமுறைக்கு எதிரான படம் தான். அதைச் சொன்ன விதத்தில் ஒரு இயக்குநருக்கு இருந்த துணிவு தான் பேசப்பட வேண்டியது. சாதி ஒழிப்பைக் குறித்து மேடையில் பேசும் பேச்சாளர் ஒருவரின் மகள் தாழ்ந்த ஜாதியினர் ஒருவரைக் காதலிக்கிறாள் என்றதும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். அவள் தற்கொலை செய்து கொள்வாள். மகளின் மரணம் அவரை பாதிக்காத அளவுக்கு ஜாதி வெறி அவருக்குள் இருக்கும். அதன் பின் நடக்கும் கதை தமிழ் தமிழ் சினிமாவில் பல கதைகளுக்குத் தாக்கம் ஏற்படுத்தியது.

ஒரு ஆண் அப்பாவித்தனமான கண் பார்வையற்ற ஒரு பெண்ணோடு பயணம் செய்கையில் என்னென்ன இடர்ப்பாடுகள் மற்றவர்களால் ஏற்படுகிறது என்பது தான் ‘நாடோடி’ கதையின் போக்கு. எம்ஜிஆரின் மற்றப் படங்களில் இருந்து நாடோடி படம் முற்றிலும் வித்தியாசமான ஆளுமையைத் தந்திருக்கும் என்பதை இப்போது படம் பார்க்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. படம் முழுக்கவுமே ஒரு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு.  

பலே பாண்டியா, சபாஷ் மீனா படங்கள் ஆள் மாறாட்டக் கதைகள் இந்திய சினிமாவில் சக்கை போடு போடும் என்பதை உறுதி செய்தன. நகைச்சுவை வரிசைப் படங்களில் இவை இரண்டும் வைக்கப்பட்டாலும் இந்த இரண்டு படங்களும் அரசியல் பேசின.

Balepandiyan

‘இவ்வளவு பெரிய பங்களா உங்க ஒருத்தருக்கா சார்” என்று சிவாஜி அப்பாவியாகக் கேட்கும்போது, “ஷ்..பங்களாக்குள்ள பாலிடிக்ஸ் பேசாத…கேர்ஃபுல்” என்று கடந்து செல்வார் எம். ஆர் ராதா.

‘ஆயிரத்தில் ஒருவன்’ கதையே கூட அடிமைத்தனத்துக்கும் அதிகார மையத்துக்கும் நடக்கிற யுத்தம் தான். எம்ஜிஆர் போன்ற திரையிலும், அரசியலிலும் ஆளுமைமிக்க ஒருவரை வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் எடுப்பதென்பது ஒரு துணிவே, ஏனெனில் எம்ஜிஆர் இந்தப் படத்தில் ஒரு அடிமை. ஒவ்வொரு முறையும் கையாலாகாத தனத்துடன் தோற்றுக் கொண்டே இருக்கும் ஒரு அடிமை கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு.. ஆனால் இதை நம் புத்திக்கு எட்டவிடாமல் செய்திருக்கும் யுத்தி தான் கவனிக்கப்பட வேண்டியது. எம்ஜிஆரின் குரல் அந்தப் படத்தில் அடிமைகளின் குரலாய் ஒலித்தது என்றாலும், சுதந்திரம் பெற வேண்டுமெனில் வீரம் மட்டுமே போதாது, விவேகமும் வேண்டும் என்று வலியுறுத்தும் கதாபாத்திரமும் கூட. திரைக்கதையில் இதனை சரியாய்க் கொண்டு வந்ததாலேயே படம் இன்றளவும் பேசப்படுகிறது.

அடிமை எனும்போது அவர் கைதிகளையும் உள்வாங்கியிருக்கிறார். அதனால் தான் அவரது எல்லாப் படங்களிலும் சிறைச்சாலை காட்சிகள் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.

கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களை பந்துலு இயக்குவதற்கும் படம் சொல்லிய செய்தி தான் காரணமாக அமைந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களில் நேரடியாக அதிகாரத்தை நோக்கி கேள்வியை முன்வைத்தவர்கள், போராடியவர்கள் என நாம் கொண்டாடுபவர்கள் கட்டபொம்மனும், வஉசியும். இவர்களைக் குறித்த படங்களை தயாரித்து இயக்கியது பந்துலுவின் ஆழமான உந்துதல் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

நறுக்கென்று முகத்துக்கு நேராக சீறுபவர்களாக வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், ஆயிரத்தில் ஒருவனுமாக இருக்கிறார்கள். இருவருமே ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள். அந்த இழப்புக்குப் பின்புலமான அவர்களது சுயமரியாதையைப் படம் எடுத்துக் காட்டியது.  கட்டபொம்மன் குறித்த வெவ்வேறு விதமான ஆய்வுகள் தமிழில் உள்ளன. கட்டபொம்மனைக் குறித்து கூடுதலாகவே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சொல்லிவிட்டது என்றும் ஆதாரங்களோடு முன்வைக்கிறார்கள். ஆனால் பந்துலு இந்தப் படத்தை இயக்கிய விதமென்பது ‘நம்மிடத்திலும் எதற்கும் அஞ்சாத வீரன் இருந்திருக்கிறான்; என்று சொல்வதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தான் தமிழகத்தில் இன்றளவும் இந்த இருவரும் விடுதலை வீரர்களாக நிலைபெற்றிருக்கிறார்கள் என்பது மிகையில்லாத கருத்து.. சினிமாவின் மாபெரும் தாக்கம் இது.

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தைத் தவிர வசூலில் அனைத்துப் படங்களுமே வெற்றி. சேர்த்து வைத்து கப்பலோட்டிய தமிழன் ஒரு காவியமாக நமக்கு இன்று மாறியிருக்கிறது.

பந்துலுவின் படங்களுக்கு தாதாமிராசி கதை எழுதியுள்ளார். பலே பாண்டியா, சபாஷ் மீனா இரண்டுக்கும் கதை தாதா மிராசி. மிக முக்கியமாய் பந்துலு அவர்களின் படங்களில் வியப்பை ஏற்படுத்துவது படத்தின் வசனங்கள். ஆர். சண்முகம், மா.ரா என எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் வசனங்களின் தன்மை ஒன்று போலவே இருப்பதைப் பார்க்க இயலும். மிக யதார்த்தமான நவீனத்துவம் கொண்ட வசனங்கள்.

அரண்மனையிலே வளர்ந்த சித்தார்த்தன் வெளியுலகத்தைத் தரிசிக்கும்போது ‘இத்தனை துயரங்கள் நிறைந்ததா மனித வாழ்க்கை’ என்று உணர்த்து கொண்டு பிறகு புத்தனாகிறான். ‘சபாஷ் மீனா’ படத்தன் மையமும் இதுவே தான். செல்ல மகனாக வளரும் சிவாஜி வாழ்க்கையின் போக்கில் வறுமையை உணருகிறபோது தன்னைச் சுற்றிய உலகத்தின் ஏற்றத் தாழ்வுகளை புரிந்து கொள்கிறான். இதில் இந்தக் கதாபாத்திரத்துக்கு கிடைக்கு போதிமரம் அவனுடைய காதலி.

இவரது படங்களில் வருகிற பெண் கதாபாத்திரங்கள் வலு கொண்டவர்கள். எதையும் கேள்வி கேட்பவர்கள். முக்கியமாய் கதாநாயகனை வழி நடத்துபவர்கள்.  பலே பாண்டியா படத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒருவனுக்கு நம்பிக்கையைத் தரும் கதாபாத்திரம் தேவிகாவுக்கு.

பந்துலு குறித்து ஓரிடத்தில் எழுதுவதை நிறுத்த வேண்டுமெனில் ஒற்றை வாக்கியத்தில் முடிக்கலாம் – அவர் சமூகத்தின் பொக்கிஷம்.

***

ஜா தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது மின்னஞ்சல் – deepaj82@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக