புதன், 19 ஆகஸ்ட், 2020

மாணவி சுபஸ்ரீ தற்கொலை .. நீட் தேர்வு பலி வாங்கிய மற்றுமொரு மாணவி ..

         tamil.samayam.com : உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தமிழகத்தில் உயிர்பலி வாங்கி வருகிறது.

 4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால் உயிரிழந்த ஏழைச்சிறுமி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நீட் தற்கொலையால் ஏற்பட்ட காயம், இன்னும் பலர் நெஞ்சில் வடுவாக இருக்கும் நிலையில், கோவையில் மேலுமொரு மாணவி நீட் தேர்வால் உயிரிழந்துள்ளார். 

 கோவை ஆர்.எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகள் மாணவி சுபஸ்ரீ. 19 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 

இந்த தேர்வை ஒத்தி வைக்கக் கோரி பலரும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அரசுத்தரப்பிலிருந்து எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று மட்டும் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்தது. இந்நிலையில்,நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணையத் தொடக்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அதிமுக பிரமுகரின் இல்ல விழாவின் பேனர் விழுந்து சாலையில் உயிரிழந்தார் சுபஸ்ரீ என்ற இளம்பெண். இந்நிலையில், அதற்குள் இன்னொரு சுபஸ்ரீயா என்று, அரியலூர் அனிதாவின் நீட் மரணத்தையும், குரோம்பேட்டை சுபஸ்ரீயின் மரணத்தையும் ஒருசேர நினைவுபடுத்தும் விதமாக இந்த தற்கொலை குறித்து சமூக வலைதளங்கள் பேசத் தொடங்கியுள்ளன. 

அனிதா, ரித்து, வைஷியா என தமிழகத்தில் நீட்டால் உயிரிழந்த மாணவிகளின் பட்டியலில் தற்போது சுபஸ்ரீயும் இணைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக