வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

பெண்களுக்குச் சொத்துரிமை: . இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

கலைஞரின் சிந்தனையில் இந்த சட்டத்தைக் கொண்டு வரத் தூண்டுதலைத் தந்தது, 1929இல் செங்கல்பட்டில் பெரியார் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம். சட்டத்தை நிறைவேற்றி விட்டு கலைஞர் சொன்னார், "செங்கல்பட்டு மாநாடு முடிந்து 60 ஆண்டு கழித்தல்லவா, இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்ற முடிந்திருக்கிறது!”. பின்னர் நாடு முழுதும் இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டதற்குக்கூட தூண்டுகோலாக இருந்தது, அன்றைய நடுவண் ஆட்சியில் தி.மு.க.வின் பங்கேற்பு தான். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களை முதன் முதலாக காவலர் பணிக்குத் தேர்வு செய்தது என்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பெருமை கலைஞரின் நிர்வாகத் திறனுக்கு சான்றாகும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர்

  hindutamil.in : அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகிய மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தமானது, இந்து கூட்டுக்குடும்பங்களின் பூர்வீகச் சொத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமையை வழங்கியது.     அத்திருத்தமானது, முன்மேவு அதிகாரம் கொண்டது; அதாவது, திருத்தத்துக்கு முந்தைய காலத்துக்கும் அது பொருந்தும் என்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. டெல்லியைச் சேர்ந்த வினீதா சர்மா தொடுத்த வழக்கில், இந்தத் தீர்ப்பை அளித்துள்ள உச்ச நீதிமன்றம், சொத்துரிமை கோரும் பெண்ணின் தந்தை குறிப்பிட்ட அந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்பு உயிருடன் இருந்தாரா என்ற கேள்வியால் அந்தப் பெண்ணின் சொத்துரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது. 

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 6 திருத்தப்பட்ட செப்டம்பர் 9, 2005-க்கு முன்னர் தந்தை, மகள் இருவருமே உயிருடன் இருந்தால் மட்டுமே மகளுக்குப் பூர்வீகச் சொத்தில் உரிமை உண்டு என்று இதற்கு முன்பு சில வழக்குகளில் தாம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. எனவே, 2005 செப்டம்பர் 9-க்கு முன்னர் தந்தை இறந்துபோயிருந்தாலும் தங்களது பூர்வீகச் சொத்தில் பங்குகோர மகள்களுக்கு உரிமையுண்டு என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறும் இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துச் சட்டங்களில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களோடு ஒப்பிடும்போது, இந்தத் தீர்ப்பானது மிகப் பெரிய மாற்றங்கள் எதையும் செய்துவிடவில்லை என்றாலும் ஏற்கெனவே செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையும் பயனையும் விரிவுபடுத்தியுள்ளது என்ற வகையில் மிக முக்கியமானதாகிறது.

எதிர்ப்புகளுக்கு மத்தியில்

இந்து பெண்களுக்கான சொத்துரிமை வரலாற்றில் 1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டமே ஒரு மிகப் பெரிய திருப்புமுனைதான். 1937-ல் இயற்றப்பட்ட இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டமானது, இறந்துபோன கணவனின் சொத்தில் மகனின் காப்பாளர் என்ற முறையில் பெண்களுக்குச் சில உரிமைகளை அளித்தாலும் அவை மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தன. 1941-ல் பிரிட்டிஷ் அரசால் பி.என்.ராவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சட்டக் குழுவானது, பெண்களின் சொத்துரிமையை நிலைநாட்டுவதற்காகக் கூட்டுக்குடும்பச் சொத்து என்ற கருத்துக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்குச் சென்றது. சட்டக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்பட்ட பிறகு, பி.என்.ராவ் தயாரித்த இந்து சட்டத் தொகுப்பின் வரைவு குறித்து கருத்துகள் கேட்டறியப்பட்டன. கடுமையாக எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக, இந்த வரைவு கைவிடப்பட்டது.

1948-ல் அப்போதைய சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கரால் இந்து சட்டத் தொகுப்பு மீண்டும் மறுவரைவு செய்யப்பட்டது. மகள்களுக்குச் சொத்தில் பங்கு வழங்கவும், விதவைகளுக்கு முழுமையான சொத்துரிமை வழங்கவும் வகைசெய்த இச்சட்டத் தொகுப்பை அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் அறிமுகப்படுத்தியபோது, மீண்டும் எதிர்ப்புகள் வலுத்தன. அவையில் சட்ட முன்வரைவு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். முதல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கரின் இந்து சட்டத் தொகுப்பை இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து இளவர் மற்றும் காப்பாளர் சட்டம், இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் என்று பகுதி பகுதியாக நிறைவேற்றினார்.

ஒரு திருப்புமுனை

1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம், அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த சமய வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்றாலும், பெண்களின் உடைமையாக உள்ள சொத்துகளின் மீது அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டது. இறந்துபோன தந்தையின் சொத்தில் மகன்களைப் போல மகள்களுக்கும் பங்குண்டு என உறுதிப்படுத்தியது. அதேநேரத்தில், கூட்டுக்குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் மட்டும் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் பாலினச் சமத்துவம் என்பது சட்டரீதியான விதிவிலக்காகவே இருந்தது.

பூர்வீகச் சொத்துகளைப் பெறுவதில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைய வேண்டும் என்றும், அதற்காக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் 174 அறிக்கை பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டத் திருத்தங்கள் பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் சம உரிமை வழங்கியதோடு, ஏற்கெனவே இறந்துபோன மகன் அல்லது மகளின் உயிரோடிருக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்றன. திருத்தப்பட்ட பிரிவு 30, பெண்களும் உயில் எழுத அனுமதித்தது.

முன்னணியில் தென்னிந்தியா

2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பாகவே கேரளம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்கள் பெண்களுக்குச் சொத்துரிமையில் காட்டப்படும் வேறுபாடுகளைக் களையும் வகையில் சட்டங்களை இயற்றிவிட்டன. கேரளத்தில், 1976-ல் கேரள கூட்டுக்குடும்ப அமைப்பு (ஒழிப்புச்) சட்டம் இயற்றப்பட்டது. மிதாக்ஷரா மற்றும் மருமக்கள்தாயம் முறைகளை ஒழிக்க வேண்டும் என்று பி.என்.ராவ் தலைமையிலான இந்து சட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

1985, செப்டம்பர் 5-ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (ஆந்திர பிரதேச சட்டத் திருத்தம்) நடைமுறைக்கு வந்தது. இந்து மதத்தில் அதுவரையில் நடைமுறையில் இருந்த கூட்டுக்குடும்பச் சொத்துரிமையில் இந்த சட்டத் திருத்தம் மிகப் பெரும் மாறுதலைக் கொண்டுவந்தது. ஆந்திர பிரதேசத்தில் பெண்களைத் திருமணம் செய்துகொடுக்கும்போது ‘கட்ணம்’ என்ற பெயரில் வரதட்சணையாக நிலம் எழுதிவைக்கும் வழக்கம் நீண்ட காலமாகவே இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நிலங்களைப் பெண்கள் தங்களது தனிப்பட்ட சொத்தாகவே கருதுகிறார்கள் என்றபோதும், அது பூர்வீகச் சொத்தில் பெண்களுக்குக் கொடுக்கும் நியாயமான பங்காக இல்லை.

ஆந்திரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மார்ச் 25, 1989-லும், மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 1994-லும் பூர்வீகச் சொத்துகளில் பெண்களின் சம உரிமையை உறுதிசெய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், இந்தத் திருத்தங்கள் அனைத்துமே நடைமுறைக்கு வரும் தேதியில் திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிபந்தனைகளை விதித்தன.

இறந்துபோன கணவனின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையளிக்கத் தயங்கியது 1937-ன் சட்டம். இன்றைக்கு, பூர்வீகச் சொத்தில் பெண்கள் உரிமைகோரத் தடைகள் எதுவுமில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 

இடைப்பட்ட ஆண்டுகளில் பி.என்.ராவ், ஜவாஹர்லால் நேரு, பி.ஆர்.அம்பேத்கர் என்று எத்தனை சட்ட மேதைகள் இதற்காகப் போராட வேண்டியிருந்தது! கலைஞர் கருணாநிதி என்று எத்தனை அரசியலர்கள் உள்ளத் துணிச்சலோடு முதலடி எடுத்துவைக்க வேண்டியிருந்தது! எந்தவொரு சீர்திருத்தமும் ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக