சனி, 22 ஆகஸ்ட், 2020

எஸ்.ஐ தாக்கியதால் சாமியார் வீடியோவில் கூறிவிட்டு தற்கொலை .. வீடியோ

மின்னம்பலம் : சேலத்தில், தனது மரணத்துக்குக் காரணம், எஸ்.ஐ தான் என்று கூறி சாமியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாமியார் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்விட்டரில் கோரிக்கை வலுத்து வருகிறது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் (42). இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 8ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.    மந்திரவாதியான சரவணன், தீவிர சிவனடியாராக இருந்துள்ளார். அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் பூஜை செய்வது, கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது  போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்பகுதியில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் இவரிடம் வந்து தாயத்துக் கட்டி செல்வது வழக்கமாம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, மாலை சரவணன், ஒரு பெண்ணுக்குத் தாயத்து கட்டிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் அரை நிர்வாணத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வந்த தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார் சாமியார் சரவணனை கடுமையாக தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சரவணன் மாயமாகியுள்ளார். அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களின் செல்போனுக்கு ஒரு வீடியோ பதிவை அனுப்பியுள்ளார்.  அதில் பேசியுள்ள சரவணன், என்னுடைய இந்த முடிவுக்கும், மன உளைச்சலுக்கும் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் தான் காரணம். அவர் என்னை தாக்கியதால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். என்னோட இந்த துரதிருஷ்டமான முடிவுக்கு வேற யாரும் காரணம் இல்லை. அதிகார தொனியில் எதை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று அவர் நினைக்கிறார்.

இந்த வீடியோவை எல்லா மக்களும் பார்க்கட்டும். அதிகாரத்தில் இருக்கிற அத்தனை பேரையும் என்னுடைய ஆன்மா சும்மா விடாது.  என் சாபத்திலிருந்து, உன்னோட குடும்பம் தப்பவே முடியாது. சிவன் மேல் ஆணையாகச் சொல்கிறேன். என்னோட மனசு எப்படி பாடுபடும். அப்பா உன் கிட்ட வரேன் பா.. நமச்சிவாய என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

வீடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சரவணனை தேடியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு காட்டு பகுதியில் அழுகிய நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர்.  

சரவணன் பேசிய வீடியோ தற்போது இணையம் முழுவதும் பரவி வரும் நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சரவணன் தனது வீட்டு பகுதியில் உள்ள ஒரு குழியில் வைத்துத்தான் பூஜை செய்வாராம். இந்த நிலையில், “ பெண்களைக் குழிக்குள் வைத்து நிர்வாண பூஜை செய்வதாகத் தகவல் கிடைத்ததன் பேரில் அங்குச் சென்று விசாரித்ததாகவும்,  தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சாமியாரை எச்சரிக்கை மட்டுமே செய்து வந்ததாகவும்” போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சாமியார் சரவணனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பலரும் நீதி கேட்டு வருகின்றனர். இதனால், #justice for Saravanan என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தை டேக் செய்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் என்றும் இது தொடர்பாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறிவருகின்றனர்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக