சனி, 4 ஜூலை, 2020

ரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்க விளைவு ... side effects of covid 19

மனம் மாறிய ரஜினி: கமல் மெகா திட்டம்!
side effects of .collection
மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரது கதாநாயக பிம்பம் இனியும் செல்லுபடியாகாது என்பது மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் இருவருக்கும் தெரிந்தே இருந்தது.
அதனால்தான் கபாலிக்கு அடுத்து முழு வருமானத்தையும் தன் காம்பவுண்டுக்கு கிடைக்க வேண்டும் என முடிவெடுத்து ‘காலா’ படத்தை குறுகிய காலத்தில் மருமகன் தனுஷ் தயாரிப்பில் எடுக்க வைத்தார் ரஜினி. கல்லா கட்டுவதில் கானல் நீரானது காலா. அதன் காரணமாக பிற தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்க தொடங்கி நடித்து வருகிறார். இப்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க போவதாக செய்தி வந்து கொண்டிருந்தது. கமல் கட்சி தொடங்கிய பின்னர் ரஜினி அரசியலுக்கு தானும் வரப்போவதாக அறிவித்தார். தேவைப்பட்டால் தமிழக நலனுக்காக நாங்கள் இருவரும் இணைந்து செயலாற்றுவோம் என கமல் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் வந்தபோதும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக இல்லை. இருக்கும் வரை எந்த டென்ஷனும் இல்லாமல் சினிமா, ஜாலியான பொழுதுபோக்கு என இருக்கலாம் என்பதே ரஜினியின் விருப்பமாக இருக்கிறது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
கொரோனா வைரஸ் தேசிய ஊரடங்கு ரஜினி - கமல் இருவரையும் ரெம்பவே யோசிக்க வைத்திருக்கிறது என்கிறது இருவரது நெருக்கமான நட்பு வட்டாரங்கள். அதன் விளைவு ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் கமலும்- ரஜினியும் படத்தயாரிப்பில் கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே நடத்த வேண்டியிருக்கிறது. இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பதற்கான தகவல்கள் கசிய தொடங்கியிருக்கிறது.கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். சில மாதங்கள் முன்பாக ரஜினிக்கு ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். வியாபார அம்சங்களோடு கலந்த மாஸ் படம் நடிக்கவேண்டும் என்கிற ரஜினியின் எதிர்பார்ப்புக்கு உரிய கதையாக அது இல்லை. இன்னொரு ரஞ்சித் படம் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த ரஜினி அந்தக்கதையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் என்று சொல்லப்பட்டது, லோகேஷ் கனகராஜ் தன் கதையில் மாற்றங்கள் செய்ய தயாராக இல்லை என கூறப்பட்டது.
கொரானோ தேசிய ஊரடங்கு சினிமா தொழிலை முடக்கி போட்டுள்ளது. மாஸ்டர் படம் ரீலீஸ் எப்போது என்பது தெரியாத நிலையில் லோகேஷ் அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை தயார் செய்வதில் கவனம் செலுத்தினார். கொரானோ முடிவுக்கு வந்தபின் படத்தயாரிப்பு, படப்பிடிப்பு நாட்கள் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதி காட்டுகிறார். குறைவான நாட்களில் நேர்த்தியாக படப்பிடிப்பை முடிப்பதில் தற்போதைய இளம் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் குறிப்பிடத்தக்கவர். இவர் ஏற்கனவே ரஜினிக்கு கதை சொல்லியிருப்பதால் அவரது இயக்கத்தில் ரஜினியின் விருப்பங்களை, சவுந்தர்யா ரஜினி மூலம் அறிந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், அவருக்கு ஏற்கனவே கூறியகதையில் பல மாற்றங்களைச் செய்து மீண்டும் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.
இம்முறை ரஜினிக்கு அதில் திருப்தியேற்பட்டது.
தனக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தன் மூலம் பெரும் லாபம் அடைவதை விட அதனை தன் நட்பு வட்டத்துக்குள் மடைமாற்ற விரும்பிய ரஜினி, ஏற்கனவே கமலுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கமலிடம் பேசி படத்தை தயாரிக்கக் கூறியுள்ளார். அதன்விளைவு ரஜினியின் 169 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் அப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதும் உறுதியாகிவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது தீவிர அரசியல்வாதியாக உருவெடுத்துவரும் கமல் அரசியல் வேண்டாம் என கூறி வரும் ரஜினிகாந்த் இருவரும் திரைப்பட தயாரிப்பில் இணைவது தமிழக அரசியல் களத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தகூடும் என இருவரும் எதிர்பார்க்கின்றனர் என கூறப்படுகிறது. அரசியலில் கமலும் சினிமா தயாரிப்பில் ரஜினியும் பலனை அறுவடை செய்யத் தயாராகி விட்டார்கள்.
-இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக