சனி, 4 ஜூலை, 2020

கீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்!

கீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்!மின்னம்பலம் : கீழடியில் நடத்தப்பட்டு வரும் ஆறாம் கட்ட அகழாய்வில் எடைக் கற்கள் கிடைத்துள்ளதையடுத்து, இப்பகுதி முன்னர் தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்றும் வாணிபம் சிறந்து விளங்கியது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல்துறை சார்பில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இப்பணி கீழடி மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் நடந்து வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள், தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகின்றன. அதில், கீழடி பகுதியில் வெட்டப்பட்ட ஆய்வுக் குழி ஒன்றில், இரும்பு உலை போன்ற அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது.

இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அகரம் பகுதியில் 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசு கிடைத்துள்ளது. மேலும், இந்தப் பகுதி தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கீழடியில் நடந்துவந்த அகழாய்வில் 1.53 மீட்டர் ஆழத்தில் ஒரு எடை கல் கண்டெடுக்கப்பட்டது. இந்த எடைக் கல் கறுப்பு நிறத்தில் உருளை வடிவில் இருந்தது. மேலும் இதனுடன் இரும்பு, தாமிரப் பொருட்கள் கிடைத்தன. மற்றொரு குழியில் இரும்பு உலையும், அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லால் ஆன எடைக்கற்களும் கண்டறியப்பட்டன. இதுவரை 8, 18, 150, 300 கிராம் எடையுடைய நான்கு எடைக்கற்கள் கிடைத்துள்ளன. எடைக் கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகம் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன், உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இக்குழிகளில் கிடைத்துள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள், உலை அமைப்பு ஆகியவை இப்பகுதி தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்த தளத்தில் வர்த்தக நடவடிக்கைகளின் சாத்தியத்தைக் குறிக்கும் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு இது.
இதன் மூலம் பண்டைய தமிழரின் வரலாற்றில் வணிகமும் நாகரீகமும் சிறந்த முறையில் நடைபெற்றது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
-முகேஷ் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக