வெள்ளி, 31 ஜூலை, 2020

ஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்!

ஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்!
 நக்கீரன் - சிந்து ஆர் - :  ஸ்வப்னா வழக்கு : திருவனந்தபுரத்திலிருந்து தப்பிச் செல்லும்போது பா.ஜ.க ஆதரவு செய்தி நிறுவனமான `ஜனம்’ டி.வி செய்திப் பிரிவின் தலைவர் அனில் நம்பியாருக்கு போன் செய்தார்.திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்துக்கு பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவருகின்றன.இதுநாள் வரை முதல்வரைக் குறிவைத்து சுற்றிவந்த சர்ச்சைகள் தற்போது பா.ஜ.க-வினரைக் குறிவைத்தும் சுழலத் தொடங்கியிருக்கின்றன.முதல்வரின் செயலாளராக இருந்த சிவசங்கரனிடம் ஏற்கெனவே சுங்கத்துறையினர் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல என்.ஐ.ஏ அதிகாரிகளும் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். என்.ஐ.ஏ-யின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஜூலை 27-ம் தேதி அதிகாலை திருவனந்த புரத்திலிருந்து கொச்சிக்குக் கிளம்பிச் சென்றார் சிவசங்கரன். ஏற்கெனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ஸ்வப்னாவின் கணவரும், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸரித்தும் எனது நண்பர்கள். அவர்கள் தங்கம் கடத்துவது தெரிந்திருந்தால் நான் அவர்களிடமிருந்து விலகியிருப்பேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் சிவசங்கரனின் அலுவலகம் இருந்த திருவனந்தபுரம் தலைமைச் செயலக நார்த் பிளாக்கின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கையகப் படுத்தும் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ தொடங்கிவிட்டது. நார்த் பிளாக்கில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகமும் இருப்பதால், சி.சி.டி.வி பதிவுகள் மிக முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன.

ஸ்வப்னாவிடம் ஜூலை 24-ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், “தங்கம் கடத்துவது யு.ஏ.இ துணைத் தூதருக்கும் தெரியும். கடத்தப்படும் ஒரு கிலோ தங்கத்துக்கு 1,000 டாலர் வீதம் துணைத் தூதரின் பங்காகக் கொடுத்தோம்” என்று அதிரவைத்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் முதல்வரின் தொடர்புகள் குறித்து பா.ஜ.க-வினர் விமர்சித்துவரும் நிலையில், பா.ஜ.க மீதும் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளது சி.பி.எம் கட்சி. “தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுமார் 15 பேரில் யாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்க பார்சலைப் பறிமுதல் செய்துவைத்திருந்தபோது, அதை விடுவிக்கும்படி போன் செய்த ஹரிராஜ் பி.எம்.எஸ் தொழிற்சங்க அமைப்பின் தலைவர். பி.எம்.எஸ் சங் பரிவார் அமைப்பின் தொழிற்சங்கம்.

ஸ்வப்னா திருவனந்தபுரத்திலிருந்து தப்பிச் செல்லும்போது பா.ஜ.க ஆதரவு செய்தி நிறுவனமான `ஜனம்’ டி.வி செய்திப் பிரிவின் தலைவர் அனில் நம்பியாருக்கு போன் செய்தார். ஸ்வப்னாவின் நெருங்கிய நண்பரான சந்தீப் நாயர், திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர் ரமேஷ் என்பவருக்கு நெருக்கமானவர். ஆனால், அவரை சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். ஸ்வப்னாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், சங் பரிவாரைச் சேர்ந்த ஹிந்து எகனாமிக் அமைப்பைச் சேர்ந்தவர். தங்கக் கடத்தல் வழக்கில் யு.ஏ.இ துணைத் தூதர்மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் தனது நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதை மத்திய பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்தவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளது சி.பி.எம்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷிடம் பேசினோம்.

“பி.எம்.எஸ் சங்கத்துக்கு விமான நிலையத்தில் பார்சல் அனுப்பும் பிரிவில் தொழிற்சங்கமே இல்லை. ஹரிராஜ் பி.எம்.எஸ் நிர்வாகி அல்ல. அது தனி அமைப்பு என்று ஹரிராஜ் தெளிவுபடுத்தியிருக்கிறார். பா.ஜ.க-வைச் சேர்ந்த ரமேஷின் சகோதரரின் கார் டிரைவராக இருந்தவர்தான் சந்தீப் நாயர். சந்தீப் நாயர் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால்தான் நெடுமங்காட்டில் அவரது நிறுவன திறப்புவிழாவுக்கு சபாநாயகர் ஶ்ரீராமகிருஷ்ணன் மற்றும் சி.பி.எம் கட்சியினர் கலந்துகொண்டனர். ஸ்வப்னாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. ஸ்வப்னா தலைமறைவாக இருந்தபோது வெளியிட்ட ஆடியோ இங்குள்ள 24 நியூஸ் டி.வி-க்குத்தான் கிடைத்தது. அதற்காக, தங்கக் கடத்தல் விவகாரத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

எம்.டி.ரமேஷ், சிவசங்கரன்
எம்.டி.ரமேஷ், சிவசங்கரன்

தங்கக் கடத்தல் பிரச்னை எழுந்தபோது துணைத் தூதரை யு.ஏ.இ திரும்ப அழைத்ததால் அவர் சென்றுவிட்டார். அவரை நம் அரசால் தடுத்து நிறுத்த முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் தூதரக அதிகாரிகளைக் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ அனுமதியும் இல்லை. எனவே, அவர் இங்கு இருந்திருந்தாலும் விசாரணை நடத்தியிருக்க முடியாது. அதே சமயம் இந்த வழக்கு நடவடிக்கை தொடர்பாக யு.ஏ.இ அரசிடமும் பேசியுள்ளோம். தங்கக் கடத்தல் விவகாரம் முதல்வரின் அலுவலகத்தை மையமாகவைத்தே நடந்திருக்கிறது. எனவே, இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக