திங்கள், 27 ஜூலை, 2020

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்!

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்!
 மின்னம்பலம் :ராஜஸ்தான் சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அழைப்pு விடுத்துள்ளார்.ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்டதால், சட்டமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு தகுதி நீக்க விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பிலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் 19 பேருக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர். இதனிடையேபெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற அசோக் கெலாட்டின் கடிதத்தை இரண்டு முறை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நிராகரித்தார். அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டமன்றத்தைக் கூட்ட அமைச்சரவை அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (ஜூலை 27) ஒப்புதல் வழங்கியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த கூடாது என்பது தனது நோக்கம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் 21 நாட்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

ஆளுநர் நடவடிக்கை பற்றி பிரதமரிடம் தான் பேசியதாக அசோக் கெலாட் தெரிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 21 நாட்கள் என்கிற அவகாசம் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸுக்கு ஆளுநர் வைத்த செக் என்றும் கூறுகிறார்கள்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக