திங்கள், 27 ஜூலை, 2020

மேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்!

மேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்!மின்னம்பலம : இடஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இவ்வழக்கில் இன்று (ஜூலை 27) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது என தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு கூடாது என எந்த விதிமுறையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “இதுதொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புக்கு தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “நான்கு வருடங்களாக ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு நிராகரித்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமூக நீதிப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும். தீர்ப்பினை ஏற்று உடனடியாக தமிழகத்தில் 50 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டிலேயே வழங்க வேண்டும். மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
“சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, மத்திய அரசு 3 மாதம் வரை காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசுடன் கலந்து பேசி குழுவை அமைக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தீர்ப்பின்படி குழு அமைத்து 3 மாதத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக கருதி பாராட்டுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித மேல்முறையீடும் செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம்” என்று கருத்து தெரிவித்தார்.
மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வயிற்றில் பால் வார்ப்பதாக உள்ளதென தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இதன் மூலம் நடப்பு ஆண்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மூன்று மாதம் வரை காத்திராமல், விரைவில் இடஒதுக்கீடு தொடர்பான குழு கூடி முடிவெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இக்குழுவில் இடம்பெறவுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கவுன்சில் அதிகாரி ஆகியோர் மீண்டும் மத்திய பாஜக அரசின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நிலையினை மேற்கொள்ளக் கூடாது” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நீதிமன்றங்களை காரணங்காட்டி இதுவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மருத்துவ படிப்பில் இழைத்து வந்த அநீதியை இனியாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன், “ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரம் இன்றி திமுக, காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை விமர்சிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவிற்குக் கிடைத்த வெற்றி. தீர்ப்பின் மூலம் திமுக இதை வைத்து அரசியல் செய்தது தெளிவாகியிருக்கிறது.இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டிய நிலை ஏற்படாது. அப்படி சட்டம் இயற்ற வேண்டுமென்றால் பாஜக சட்டம் இயற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
எழில்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக