செவ்வாய், 7 ஜூலை, 2020

மன்னர் மன்னன்: பாரதிதாசன் மகன் காலமானார்


BBC  : புரட்சிக் கவிஞர்" என்று கொண்டாடப்படும் பாரதிதாசனின்‌ஒரே மகன், தமிழறிஞர், விடுதலை போராட்ட வீரர் மன்னர் மன்னன் உடல்நலக் குறைவால் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வயது முதிர்வால் காலமானார்.
அவருக்கு வயது 92.
சில ஆண்டுகளாகவே இவர் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பேச்சாளர், எழுத்தாளர், தமிழறிஞரான இவர் 50க்கும்‌மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், பல்வேறு நாடகங்களை தயாரித்து அளித்துள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராக இருந்துள்ள இவர், தமிழ்ச்சங்கத்திற்குச் சொந்தமாகக் கட்டடம் கட்டித்தந்தவர். தமிழக அரசின் உயரிய விருதுகளான திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் மன்னர்‌மன்னன்.

அவரது தந்தை 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் மன்னர் மன்னன். இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி, மொழிப் போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றவர் இவர். தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய மன்னர் மன்னன் காமராசர், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி ‌ஆர் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.



Sivakumar Shivas : 06/07/2020 இன்று காலமான புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் அவர்களுக்கான புகழஞ்சலி செய்தி...
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகம் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது(1991-92).
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிருந்த நான் "பாவேந்தர் இன்றிருந்தால்..." என்ற தலைப்பில் கவிதை எழுதிப் பல்கலைக் கழக அளவில் முதல்பரிசு பெற்றேன். அப்பொழுது பல்கலைக் கழகத்திற்குப் பரிசு பெறச் சென்றபொழுது திரு. மன்னர் மன்னன் அவர்களை முதன்முதலாகக் கண்டேன். அரங்கில் இருந்த அனைவரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் முகவொற்றுமை மன்னர்மன்னன் ஐயாவுக்கு அப்படியே பொருந்தியிருப்பதைக் கண்டு வியப்பு மேலிட்டுப் பார்த்தனர். அவர்களுள் நானும் ஒருவன். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் திருக்கையால் அப்பொழுது பரிசிலும் சான்றும் பெற்றேன்.
பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பைத் தேர்வுசெய்திருந்தேன். ஆய்வுக்காக ஒருமுறை திரு.மன்னர்மன்னன் அவர்களைக் கண்டு உரையாடித் தகவல் பெற்றுள்ளேன்(1993). படிப்புக்குப் பிறகு என் பணிநிலை வெவ்வேறு ஊர்களில் இருந்தது.

மீண்டும் புதுச்சேரியில் பாரதிதாசன் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகு அடிக்கடி திரு.மன்னர்மன்னன் ஐயா அவர்களை இலக்கியக் கூட்டங்களிலும் பாவேந்தர் பிறந்தநாள், நினைவுநாள் விழாக்களிலும் சந்தித்து வணங்கி உரையாடி மகிழ்வது உண்டு. திரு.மன்னர்மன்னன் ஐயாவுடன் உரையாடும் பொழுதெல்லாம் பாவேந்தர் படைப்புகள் குறித்தும், பாவேந்தரின் வாழ்க்கையைக் குறித்தும் பல செய்திகளைக் கேட்டு மகிழ்வேன்.
பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க கவிதைகளை வழங்கிய பெருமைக்குரிய பெரும்பாவலர் ஆவார். திராவிட இயக்க வரலாற்றிலும், தமிழ்த்தேசிய வரலாற்றிலும் பாவேந்தருக்குக் குறிப்பிடத்தக்க பெருமை உண்டு. தமிழ்ச்சிறப்பு, இந்தி எதிர்ப்பு, இயற்கையைப் பாடுவது, சமூகச் சீர்திருத்தம், பெண்கல்வி, பெண்ணுரிமை குறித்து இவர் பாடிய பாடல்கள் என்றும் நினைவுகூரும் தரத்தினை உடையவை.
அதனால்தான் பாவேந்தருக்குத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கடல் கடந்த நாடுகளிலும் அன்பர்கள் உண்டு. மலேசியாவில் வாழ்ந்த திரு மருதை என்னும் அன்பர் தம் மகனுக்குப் பாவேந்தர் நினைவாக மன்னர்மன்னன் (விரிவுரையாளர், மலேயா பல்கலைக் கழகம்) எனவும், இளந்தமிழ் எனவும் பெயரிட்டுள்ள பாங்கறிந்தால் பாவேந்தரின் கவிதை இந்த உலகம் முழுவதும் சிந்தனையைத் தூண்டியுள்ளது என்று அறியலாம்.
இத்தகு பெருமைக்குரிய பாவலர் தமிழகத்து மக்களனைவரையும் தம் குடும்பமாக எண்ணி வாழ்ந்தவர். தமிழகத்து இளைஞர்கள் பலர் பாவேந்தரைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்தனர்.
இத்தகு பெருமைக்குரிய புரட்சிப் பாவலரின் மகனான திரு. மன்னர்மன்னன் ஐயா அவர்கள் பாவேந்தரைப் பற்றி எழுதிய "கறுப்புக் குயிலின் நெருப்புக்குரல்" என்னும் நூல் அரிய வரலாற்று நூலாகும். திரு.மன்னர்மன்னன் அவர்கள் வேறு தலைப்புகளிலும் பல நூல்களை எழுதித் தமிழ் உலகிற்கு வழங்கியவர்.
ஆய்வாளர்கள் பலரும் பாவேந்தர் ஆய்வுகளில் மாறுபட்டு நிற்கும்பொழுதெல்லாம் உரிய திருத்தங்களை வழங்குவதில் முன்னிற்பவர் திரு. மன்னர் மன்னன். பாவேந்தரின் வெளிவராத ஆக்கங்கள் பல வெளிவரவும் காரணமாக விளங்குபவர். பாவேந்தரின் குடும்பப் பொறுப்புகள், அச்சகம், பதிப்புப்பணி, இலக்கியப் பணிக்குத் தோன்றாத் துணையாக விளங்கியவர். திரு.மன்னர்மன்னன் அவர்கள் குடும்பப் பொறுப்புகளையும் அச்சகப் பணிகளையும், பதிப்புப் பணிகளையும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டதால் பாவேந்தரின் சிறந்த ஆக்கங்கள் தடையின்றி வெளிவந்தன.
திரு.மன்னர் மன்னன் அவர்கள் இளம் அகவை முதல் தந்தையாரின் கொள்கைகளை ஊன்றிக் கவனித்ததால் பாவேந்தரின் கொள்கைகள் இவரிடமும் இயல்பாகப் பதிந்தன. பாவேந்தரின் இயல்புகள் பலவும் திரு. மன்னர் மன்னனிடம் படிந்தன. பல்வேறு நூல்களை எழுதியும் வானொலி வழியாக ஒலிவடிவில் பல புதுமையான நாடகங்களை வழங்கியும், இலக்கிய இதழ்கள் நடத்தியும், பதிப்புப்பணிகளில் ஈடுபட்டும், கவிதை நூல்கள் வரைந்தும் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றும் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்புகளையும், படங்களையும், நூல்கள் குறித்த விவரங்களையும் இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
மன்னர்மன்னன் அவர்களின் இயற்பெயர் கோபதி ஆகும். இவர் பிறந்த நாள் 03.11.1928. தந்தையார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் (கனக.சுப்புரத்தினம்), தாயார் திருவாட்டி.பழநியம்மா. உடன்பிறந்தோர் சரசுவதி(அக்கா), வசந்தா, இரமணி. பிரெஞ்சுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
மன்னர்மன்னன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சாவித்திரி அம்மையார் ஆவார். இவர்களின் திருமணம் 1955 இல் முத்தமிழ் விழாவாக நடைபெற்றது. கோவை அய்யாமுத்து அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினார். மன்னர்மன்னன் சாவித்திரி வாழ்க்கை இணையருக்குச் செல்வம், தென்னவன், பாரதி என்ற ஆண்மக்களும், அமுதவல்லி என்ற மகளும் உண்டு.
மன்னர்மன்னன் அவர்கள் இளம் அகவையில் தமிழ் ஈடுபாட்டால் "முரசு" என்னும் கையெழுத்து ஏட்டை வெளியிட்டார். இவருடன் இந்த ஏடு உருவாக்குவதில் கவிஞர் தமிழ்ஒளியும் இணைந்து பணிபுரிந்தவர். அரசுக்கு எதிரான ஏடாக இது இருந்ததால் இருவரையும் பிரெஞ்சு அரசு குற்றம் சாற்றியது. மன்னர்மன்னுக்கு 14 அகவை என்பதால் தண்டனை இல்லை. தமிழ்ஒளியைத் தண்டித்தது. கோபதி என்ற இயற்பெயரில் குற்றம் சுமத்தப்பட்டதால் மன்னர்மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.
1947 இல் அயலவர் ஆட்சி அகல வேண்டும் என்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாவேந்தரின் குயில் இதழ் தொடர்ந்து வெளிவருவதற்கும், பாரதிதாசன் பதிப்பகம், பழநியம்மா அச்சகம் சிறப்பாகச் செயல்படுவதற்கும் துணையாக இருந்தவர். மணிமொழி நூல்நிலையம், மிதிவண்டிநிலையம் நடத்திய பட்டறிவும் இவருக்கு உண்டு.
பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநிலக் கிளையை முதன்முதல் 1947 இல் தோற்றுவித்த நிறுவுநர்கள் ஐவரில் மன்னர்மன்னனும் ஒருவர். 1954 இல் இந்தியாவுடன் புதுவை மாநிலம் இணைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு, புதுவையிலிருந்து வெளியேறி விடுதலைக்குப்பின் தம் தந்தையாரின் கவிதைப் பணிக்குப் பாடுபட்டவர்.
1964 இல் பாவேந்தரின் மறைவுக்குப் பின் தம் பொறுப்பில் வானம்பாடி, தமிழ்முரசு, வழிகாட்டி முதலிய இதழ்களை வெளியிட்டவர். பாரதிதாசன் குயில் என்ற இலக்கிய இதழ் இவரின் எழுத்துத் திறனுக்கும் தமிழுணர்வுக்கும் சான்றாகும்.
1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 45 நாள் சிறையில் இருந்தவர். 1968 இல் புதுவை வானொலியில் எழுத்தாளர் பணியில் இணைந்தார். பணியில் இணைந்த பிறகு தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான நாடகங்களைப் புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒலிபரப்பும் முயற்சியில் உழைத்தவர். சிறந்த கலைஞர்களையும் அறிஞர்களையும் அழைத்து மிகுதியான வாய்ப்புகளை வழங்கியவர்.
பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கையைக் கலங்கரை விளக்காகக் காட்டும் கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நூலினை இருபதாண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதி வெளியிட்டவர். மன்னர்மன்னனின் சிறுகதைகள் "நெஞ்சக் கதவுகள்" என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இது தமிழக அரசின் இரண்டாம் பரிசைப் பெற்ற பெருமைக்குரிய நூலாகும்.
பாவேந்தரின் இலக்கியப் பாங்கு என்னும் நூல் புதுவை அரசின் 5000 உருவா பரிசைப் பெற்றது. இவரின் 16 நூல்களும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறப்பு சேர்ப்பன. சில நூல்கள் கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்ட பெருமைக்குரியன. தமிழ்நாட்டரசின் இயல் இசை நாடக மன்றம் இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் போற்றியுள்ளது.
1991(மலேசியா ,சிங்கப்பூர்), 1992(பிரான்சு), 1996 இல் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு பாவேந்தருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் கருத்து உரைஞராகப் (Consultant) பணியாற்றியவர். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பாவேந்தரின் கவிதைகள் ஆங்கில ஆக்கம் பெற்று வெளிவர உதவியவர்.
பாவேந்தரைப் பற்றி இவர் எழுதிய பாவேந்தர் இலக்கியப் பாங்கு, பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம் முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. பாட்டுப் பறவைகள் என்ற இவரின் நூல் பாரதியின் பத்தாண்டுக்காலப் புதுவை வாழ்வையும், பாரதிதாசனாருடன் அமைந்த தொடர்பையும் சிறப்பாக விளக்குகின்றது. நிமிரும் நினைவுகள் என்ற பெயரில் மன்னர்மன்னன் பலவாண்டுகளாக இலக்கிய ஏடுகளில் எழுதிவந்த புதுவை வரலாற்றுக் கட்டுரைகள் இவரின் பவள விழா வெளியீடாக வெளிவந்துள்ளது.
புதுவை அரசின் கலைமாமணி விருது(1998), தமிழ்மாமணி விருது(2001) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழ்நாட்டரசின் திரு.வி.க. விருதும்(1999) இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டரசின் தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடப் பொதுக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.
மன்னர்மன்னன் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று(2000) மிகச்சிறந்த தமிழ்ச்சங்கக் கட்டடம் உருவாகக் காரணமாக இருந்தவர்.
முகவரி:
தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள்
எண். 4, முதல்தெரு, காந்திநகர்,
புதுச்சேரி- 605 009
தொலைபேசி: 0091 413 2275207
நன்றி: http://muelangovan.blogspot.in/
தமிழ் இராசேந்திரன்
#தமிழ்ச்சான்றோர்பேரவை
+919787933344

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக