வியாழன், 2 ஜூலை, 2020

மண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர் மு கருணாநிதி, இயக்கம் விஷ்வநாத் பிரதாப் சிங்.

Muralidharan Pb : வசந்த காலம் - 9
சமூக நீதிக் காவலர்கள். மண்டல் கமிஷன் வரலாறு.
கலைஞர், விபி சிங் இருவரும் சரித்திரம் படைத்த இன்றியமையா சாதனை மண்டல் கமிஷன் அமல்படுத்தியதே. மண்டல் கமிஷன் கேள்வியுற்றிருப்போம்.
அது ஏன் ? எதற்கு ? எப்படி நிறைவேற்றம் பெற்றது என்று சற்று விரிவாக பார்த்தால் தான் தெரியும் இந்த இருவர் அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு பெரிய உரிமையைக் கொடையாக கொடுத்துச் சென்றுள்ளார்கள் என்பதை உணரமுடியும்.
சமூக நீதி என்பது திமுகவின் உயிர்நாடி. மண்டல் கமிஷன் அமைக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பாக 1973ல் அக்டோபர் திங்கள், அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவர் பேசியது.
"மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் அமல்படுத்த மத்திய அரசு முன்வந்து அதற்காவான செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிக் கிடக்கும் மக்களை தனி ஒதுக்கீடுகள், சிறப்பு திட்டங்கள் மூலமாக கைதூக்கிவிட மண்டல் குழுவின் பரிந்துரையை திமுக, 1989ல் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களில் அதாவது 12/5/1989ல் சட்டப்பேரவையில் முன் மொழிந்தது, சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியது.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் 1978ம் வருடம் டிசம்பர் மாதம் மண்டல் குழு அமைக்கப்பட்டு, 31/12/1980ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அது நாடாளுமன்றத்தில் வைக்க எடுத்துக்கொண்ட காலம் 2 ஆண்டுகள். பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
மண்டல் கமிஷன் கூறும் பரிந்துரை என்ன ? மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்புடைய நிறுவனங்களில் உள்ள அனைத்து பணிகளிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்கள், பழங்குடி மக்களுக்கு உள்ளது போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிரப்பப்படாமல் உள்ள இடஒதுக்கீட்டளவு மூன்றாண்டுகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கொடுப்பது போலவே - அதே அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் மத்திய அரசு, நிதி உதவி அளிக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும்,பிற்படுத்தப்பட்டோர் நல முன்னேற்ற வாரியம் அமைக்க வேண்டும்.
1977 திமுக ஆட்சியை இழந்து, திமுக எதிர்க்கட்சியாக இருந்த வேளையில், திராவிடர் கழகம் உட்பட வேறு சில அமைப்புகளோடு டெல்லியில் உள்ள பிற்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு சில அமைப்புகளோடும் உண்ணா நோன்பு இருந்து ஆர்ப்பாட்டம் செய்தது. இது நிறைய பேர் அறியாத விவரம்.
மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் கலைஞரால் 1971லேயே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. மண்டல் கமிஷன், குறிப்பிட்ட மாநில அரசுகளின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், தனித்துறை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மண்டல் கமிஷன் 1978ல் தனது பரிந்துரைகளை வழங்கியது. ஆனால் கலைஞர் கருணாநிதி அரசு இதையெல்லாம் 1971லேயே செய்து முடிந்துவிட்டது. கலைஞரைப் போல் ஒரு ஞானியை பார்ப்பது அரிதிலும் அரிது. பி.பி.மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் 1978ல் செய்யச் சொன்ன சீர்திருத்தங்களை, முதல்வராக இருந்த இவர் 1971ல் ஏற்பாடுகள் செய்தது அவர் அறிவாற்றலை காட்டுகிறது. திராவிட இயக்க கொள்கையை சுவாசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி ஒரே தீர்க்கமான முடிவினை எடுக்க முடியும்.
ஜனதா அரசு சொன்னது ஒன்று, செய்தது ஒன்று. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக பொருளாதாரம் அடிப்படையில் அதாவது ஆண்டு வருமானம் 9000க்கும் கீழ் உள்ள குடும்பங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற முடியும் என்று ஒரு அறிவிப்பை செய்தது. இந்த ஏற்பாட்டை ஆதரித்தது அன்றைய முதல்வர் எம்ஜிஆர்.
திமுக பல முறை கேட்டு, இந்திரா காந்தி அம்மையார் காது கொடுத்து கேட்கவில்லை. அடுத்த ஆட்சி ராஜீவ் அரசு, அப்போதும் எம்ஜிஆர் அரசு இதை எடுத்து பேச முன் வரவில்லை. 1989ல் திமுக ஆட்சியில் கலைஞர் ராஜீவை பல்வேறு முறை நடத்திய சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியும் பெரும்பலம் பொருந்திய ராஜீவ் அரசு செவிமடுக்கவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்க யாருமே முன் வராத சூழல்.
கலைஞருக்கு அந்த சந்தர்ப்பம் எப்படி அமைகிறது ?
அப்போதைய முன்னாள் குடியரசு தலைவர் ஜெயில் சிங், தஞ்சாவூரில் சமூக நீதி மாநாட்டில் கலந்துக் கொண்டு,"தமிழ்நாட்டு மக்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும், நல்ல நிர்வாகத் திறமைக்கும், பிரச்சனைகளை அணுகவர்க்குமுரிய ஒரு மகத்தான தலைவர் வாழும் சிறப்பு மிக்கத் தலைவர் காலத்தில் வாழ்கின்றார்கள். அந்த அருந்தலைவர் தான் கலைஞர் கருணாநிதி, அவருடைய ஆட்சி தான் புதுடெல்லியில் நடக்கிறது. தயவுசெய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, அதை சட்டமாக ஏற்படுத்துவதற்கு அவரைக் கேட்டுக்க்கொள்கிறேன்.
அதற்கு பதிலளித்து முதல்வர் கலைஞர், "டெல்லி செல்லும் போதெல்லாம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைப் பற்றி நினைவூட்டிக் கொண்டிருப்பதாகவும், அதனை நிறைவேற்ற ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜெயில் சிங் அவரது அன்புக்கட்டளையை ஏற்று அவரோடு இணைந்து விரைவில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டார்.
அந்த முயற்சியில் வெற்றி கிடைத்த வண்ணமாக மே 30 1990 அன்று நடந்த தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் விபி சிங், மண்டல் கமிஷன் உட்பட தேர்தலில் தேசிய முன்னணி அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றிய தீர வேண்டும் என்று அறிவித்தார்.
பிப்ரவரி 1990ல், டெல்லியில் இது பற்றி கலைஞர் துணைப் பிரதமர் தேவிலாலை சந்தித்த போதே ஒரு யோசனை கூறி இருந்தார். 'அதாவது நடுவண் அரசு யார் யாரெல்லாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை நிர்ணயிப்பது கடினம். ஆகவே ஒவ்வொரு மாநிலமும் தனது அரசின் கீழ் யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று பட்டியல் வைத்திருக்கும். அதன் படியே அமல்ப்படுத்திடலாம் என்று கூறினார். அதோடு மட்டுமல்லாமல் 1926லேயே இட ஒதுக்கீட்டு முறையை கொண்டுவந்ததே திராவிட இயக்கம் தான் எனவும், அந்த போராட்டங்களை நடத்திய திராவிட இயக்கம் காரணமாகத்தான் நேரு அவர்கள் அரசியல் சட்டத்திலே 1952 ஆம் ஆண்டு திருத்தம் செய்ய முன்வந்தார்கள். எனவே இடஒதுக்கீட்டு முறையின் முன்னோடி திராவிட இயக்கங்கள், ஏதேனும் சந்தேகம் எழுமேயானால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கம் கொடுத்து உதவிட தயாராக உள்ளோம்' என்று பேசி இருந்தார்.
ஜூன் 1990ல் பிரதமர் விபி சிங் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினர். பத்தாண்டு காலமாக மண்டல் கமிஷன் பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பற்றியும், தேசிய முன்னணி அரசு அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும், எனவே மாநில அரசுகள் அந்த அறிக்கை மீதான தங்கள் கருத்துக்களை ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
அப்படி அனுப்பிய கடிதத்திற்கு முதலில் பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு.
7 ஆகஸ்ட் 1990ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் விபி சிங் வெளியிட்டார்.
முதல் கட்டமாக, மாநில பட்டியல்களிலும், மண்டல் கமிஷன் அறிக்கைகளிலும் பொதுவாகக் கோரப்பட்ட வகுப்புகள் அடிப்படையாக வைக்கப்படும் என்றும், தங்களது நீண்டகால அனுபவங்களிலும் அடிப்படையில் மாநிலங்கள் தயாரித்து வைத்துள்ள சமுதாய ரீதியிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலை அடிப்படையாக ஏற்கக் காரணம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சிரமமின்றி அதே நேரத்தில் விரைவாக அமுல்படுத்துவதற்காகத்தான் என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மொத்தத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் என்பது.
  கதை திரைக்கதை வசனம் - கலைஞர் மு கருணாநிதி, இயக்கம் விஷ்வநாத் பிரதாப் சிங்.
இன்னொரு ஒற்றுமையும் அந்த தேதியில் உள்ளது அது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்த நாள் நமது அருமைத் தலைவர் மறைந்த ஆகஸ்ட் 7 என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது மண்டல் கமிஷன் மூலமாக வேலை பெற்ற பலர் இன்றும் திமுக மீதும், கலைஞர் மீதும் விசுவாசமாக உள்ளனர். அவர்கள் தங்களது வாரிசுகளுக்கு இந்த விவரங்களை தெரிவிக்க மறந்து விட்டமையால் நம்மைப் போன்றோர் இதை உணர்த்துவோம்.
என்ன கிழித்தது திராவிடம்? என்போருக்கு, திமுக ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டுள்ளோருக்கு உரிமையை பெற்றுக்கொடுத்து உள்ளது.
போலி திராவிடம் பேசிய அதிமுக, சோசியலிசம் பேசிய ஜனதா, மதச்சார்பின்மை பேசிய காங்கிரஸ் செய்து கிழிக்காததை, திமுக தான் கிழித்தது என்று கூறிக்கொண்டு இந்த பதிவு நிறைவுபெறுகிறது.
மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றிய விபி சிங்கைப் பாராட்டி முதல்வர் கலைஞர் எழுதிய கடிதம் முதல் பின்னூட்டத்தில் உங்களுக்காக.
வசந்த காலம் தொடரும்,
நன்றி நாளை மீண்டும் சந்திப்போம்.
அடுத்தது : காவிரியும், கலைஞரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக