வெள்ளி, 24 ஜூலை, 2020

கேரளா அனுஜித் ...உயிர்களை காக்க பிறந்தவர்க்கு கண்ணீர் அஞ்சலி.. வீடியோ

  BBC : கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி
  தண்டவாளத்தில் ஓடினார். சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.
ஆபத்து என்பதை உணர்ந்துகொண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது நடந்தது 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி.
மறுநாள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான அனைத்து பத்திரிகைகளிலும் அனுஜித்தும் அவரது சிவப்பு நிற பேக்கின் புகைப்படமும் நிறைந்திருந்தது.
கடந்த 14-ம் தேதி கொட்டாரக்கரைக்கு அருகில் பைக்கில் அனுஜித் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அவரது உயிரை காக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் கடந்த 17-ம் தேதி அனுஜித் மூளைச்சாவு அடைந்தார்.17 வயதில் மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித் தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக