சனி, 18 ஜூலை, 2020

வரவர ராவ்: தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் வர வர ராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதுBBC : உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் வரவர ராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் சிறப்பு கண்காணிப்பாளரான மஜா தருவாலா புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் வரவர ராவ் சிறையில்பட்ட துன்பங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். 80 வயதான செயற்பாட்டாளரான வரவர ராவ், மும்பையில் உள்ள தலோஜா சிறையில் பல உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டதாகவும், அவரது உடல்நலன் மோசமாகிக் கொண்டே வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரால் நடக்கக்கூட முடியாத சூழலில் சிறை அதிகாரிகள் வரவர ராவுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்ய முன்வரவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஏற்கனவே ஜூலை 13ஆம் தேதி தாமாகவே முன்வந்து விசாரித்த மனித உரிமை ஆணையம், மருத்துவ வசதி என்பது அடிப்படை உரிமை என்றும், காவலில் இருக்கும் சிறைக்கைதிக்கு உரிய மருத்துவ வசதி அளிப்பது அரசின் கடமை என்றும் கூறியிருந்தது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு, அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்ட ஆணையம், வரவர ராவுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மருத்துக்குழு ஒன்றையும் அமைத்தது.
அந்த நிலையில்தான், மஜா தருவாலா உள்ளிட்ட பலரும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தை தொடர்பு கொண்டனர்.
வரவர ராவின் உடல்நலம் மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதாகவும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதில் ஒரு புகாரில், வரவர ராவின் குடும்ப உறுப்பினர்கள் அவரை ஜெ ஜெ மருத்துவமனையில் சென்று பார்த்ததாகவும் அங்கு ஒரு வார்டில் அவர் சிறுநீர் கழித்தபடி அதன் மேலே படுத்திருந்ததாகவும், யாரும் அவரை அங்கு கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
அவரால் தனது மனைவி மற்றும் மகள்களை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை. மேலும் அந்த வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கவோ அதற்கு தேவையான உபகரணங்களோ இல்லை என்றும் அங்கிருந்த செவிலியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வர வர ராவுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் புனித ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.
வரவர ராவின் உடல்நலம் தொடர்பாகபல செயற்பாட்டாளர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகியுள்ளனர்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இந்த விஷயத்தில் அரசு தரப்பின் அறிக்கை இன்னும் வர வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அவரது உடல்நலம் தொடர்பாக ஏற்கனவே வருத்தமளிக்கக்கூடிய பல செய்திகள் வந்து கொண்டிருக்க, அவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இன்னும் அவருக்கு ஆபத்து அதிகம் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே வரவர ராவை உடனடியாக சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கு, மாநில அரசு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதற்கான முழு செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
யார் இந்த வரவர ராவ்?
தெலங்கானாவை சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளை கொண்ட எழுத்தாளர், கவிஞர் மற்றும் ‘விப்லவ ரட்சயாட்ல சங்கம்’ என்னும் எழுத்தாளர் அமைப்பின் நிறுவனராவார்.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இவர் மீது பல சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், பின்பு அவை திரும்ப பெறப்பட்டன.
ராம்நகர், செகந்திராபாத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்குகளில் இவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை நிறுத்துவதற்காக சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய அரசாங்கம் ஏற்பாடு செய்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் இவர் பாடகர்-செயற்பாட்டாளரான காத்தாருடன் இணைந்து மத்தியஸ்தராக செயல்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக