சனி, 4 ஜூலை, 2020

கொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்!

மின்னம்பலம் :
கொரோனா:  அரசு தலைமை மருத்துவர் மரணம்!
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சுகுமார் சிகிச்சை பலனின்றி ஜூலை 3 ஆம் தேதி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றியவர் சுகுமார். இவர் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 3) அவர் கொரோனாவால் மரணம் அடைந்துவிட்டார்.
அரசு தலைமை மருத்துவரே கொரோனாவால் பலியானது மருத்துவ வட்டாரம் தாண்டி அப்பகுதி மக்களிடையே கவலையுடன் பேசப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமை மருத்துவர் சுகுமாரின் மரணம்- கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும்.
அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். அரசுத் தலைமை மருத்துவர் திரு. சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக