வெள்ளி, 31 ஜூலை, 2020

இளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் திருட்டுப் புகார்!

மின்னம்பலம் : சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
40 வருடங்களுக்கு முன்னால், இளையராஜா தமிழ் திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தபோது பிரசாத் ஸ்டியோவில் ஒரு ஸ்டுடியோ அறையில் அமர்ந்துதான் இசையமைப்பார். அந்த அறை தார்மீகமாக அவருக்கு பிடித்துவிட பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரான எல்.வி. பிரசாத் தனது நண்பரான இளையராஜாவுக்காகவே அந்த அறையைக் கொடுத்துவிட்டார். பற்பல வருடங்களாக அந்த அறையும் ராஜாவின் இசையும் பிரிக்க முடியாத பந்தத்துக்கு உதாரணமாகியது.
எல்.வி. பிரசாத் காலத்துக்குப் பிறகு அவரது மகன் காலத்திலும் இது தொடர, இப்போது அவரது பேரன் சாய் பிரசாத் இளையராஜாவின் ஸ்டுடியோவை காலி செய்யச் சொன்னார். வருமானம் இல்லாதால் பிரசாத் ஸ்டுடியோவின் உள் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்து இளையராஜாவை காலி செய்யச் சொன்னார் சாய் பிரசாத்.

இது தொடர்பாக பாரதிராஜா தலைமையில் சினிமா பிரமுகர்கள் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் பேசினார்கள். இளையராஜா உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு முடியாததால், இதற்கிடையில் சென்னையில் ராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் தனி ஸ்டுடியோ தொடங்க தயாராகிவிட்டார் இளையராஜா.

இந்த நிலையில்தான், இப்போதைய பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இன்று (ஜூலை 31) இளையராஜா திருட்டுப் புகார் அளித்துள்ளார். புகாரில், “பிரசாத் ஸ்டுடியோவில் நான் 42 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிற அறை இருக்கிறது. அண்மையில் நான் செல்லாத நிலையில் எனது ஸ்டுடியோ அறையில் உள்ள எனது இசைக் குறிப்புகள், இசைக் கருவிகள் திருடு போயுள்ளன. சில இசைக் குறிப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.

இந்தப் புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக